தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு, சமூக நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்: ராமதாஸ்

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 07:00 pm
pmk-ramadoss-press-release

தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது, சமூக நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா முழுவதும் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது. இதற்கான வரைவுச் சட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டால், அது சமூக நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையும். மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதை பாமக கடுமையாக எதிர்க்கிறது. எனினும், தனியார் கல்வி நிறுவனங்களில் இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில், இப்போது கொண்டு வரப்படவிருக்கும் இட ஒதுக்கீடு பிற பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால் அதை வரவேற்கிறது.

கல்வியைக் கடந்து வேலைவாய்ப்பிலும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டியிருக்கிறது. மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து விட்ட நிலையில், தனியார் துறையில் அனைத்துத் தரப்பினருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

மத்திய அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சுமார் ஒன்றரை கோடி ஆகும். அவற்றில் 24 லட்சத்துக்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை நிரப்பப்பட்டால் 24 லட்சம் குடும்பங்கள் பயனடையும். ஆனால், அவற்றை நிரப்ப மத்திய அரசு தயாராக இல்லை.

இத்தகைய சூழலில் 6 கோடிக்கும் கூடுதலான அமைப்பு சார்ந்த  பணியிடங்களைக் கொண்ட தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவதன் மூலமாகவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கும் சமூகநீதி வழங்க முடியும்.

எனவே, தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த முன்வரைவுடன், தனியார் துறை வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்" என அந்த அறிக்கையில்  வலியுறுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close