பாலகிருஷ்ணா ரெட்டியின் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 01:26 pm
hosur-assembly-announced-as-vacancy

தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, ஓசூர் தொகுதி காலியானதாக அறிவித்து தமிழக சட்டசபை செயலாளர், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார். 

கடந்த 1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் தயார் செய்து விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்த சமயத்தில், அங்கு வந்த அரசு வாகனங்கள், பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் மீது கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவம் நடைபெற்றது. 

இந்த வழக்கு தொடர்பாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. ஏற்கனவே இந்த வழக்கில் 16 பேர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. பின்னர் எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

தொடர்ந்து பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அவரது மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே, பாலகிருஷ்ண ரெட்டியின் தொகுதியான ஓசூர் தொகுதி காலியான தொகுதி என அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை செயலாளர், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார். 

இதையடுத்து தமிழகத்தில் காலியான சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close