நீட் தேர்வை தமிழக மக்கள், மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்: ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 03:13 pm
tn-people-students-accepted-neet-exam-tamilisai

கட்டாயப்படுத்தப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை  தமிழகத்தில் பொதுமக்களும், மாணவர்களும் ஏற்றுக்கொண்டு விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி உருவாகும் என்று கூறப்படும் நிலையில், ஒருவேளை அப்படி இரு கட்சிகளும் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று அதிமுகவுக்கு ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், ஸ்டாலினின் இந்த கோரிக்கைக்கும், கருத்துக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு பின்பு தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்பிற்கு அதிக அளவில் தமிழக மாணவர்கள் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீப காலத்தில் வெளிவந்த முதுநிலை மருத்துவபட்ட மேற்படிப்பில் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் முன்னணியில் இருப்பது தமிழகத்திற்கு பெருமை.

இந்தாண்டு இந்திய அளவில் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதிய 1,43,148 பேரில் 79,633 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து தேர்வெழுதிய 17,067 பேரில் 11,121 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்திய அளவில் 1:7 என்ற விகிதத்தில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு தேர்வாகி இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் கோடிகள் இல்லாமல் தகுதியின் அடிப்படையில் தான் சேரப்போகிறார்கள்.

நீட் தேர்வால் சாமானியர்களும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ படிப்பு பயில முடியும் என்பதே இன்றைய நிதர்சனம். நீட் தேர்வால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பு விலை பேசி விற்கப்படாமல் தகுதி, மதிப்பெண் அடிப்படையில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் சாமானியர்களும் மருத்துவராக முடிகிறது.

உதாரணத்திற்கு நெல்லையில் ஒரு எளிய குடும்பத்தில் துப்புரவு தொழிலாளரின் மகன், சென்னையில் பிரபல தனியார் மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் சாதாரண டீ கடை நடத்தி வந்த ஏழை குடும்ப பெண்ணுக்கு மருத்துவம் படிக்க கிடைத்த அரிய வாய்ப்பு போன்ற பல உதாரணங்களை மறைக்க முடியாது.

அனிதாவின் மரணம் வருந்தத்தக்கது. அனிதாவின் சொந்த மாவட்டத்திலே கடந்த காலங்களை விட அதிக எண்ணிக்கையில் நீட் தேர்வின் மூலம் பயன் அடைந்து உள்ளார்கள் என்ற புள்ளி விவரமும் தெரிய வந்துள்ளது. பலரின் மருத்துவராகும் கனவும் நனவாகிறது.

நீட் தேர்வை பொதுமக்களும், மாணவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டதால் முன்பு இருந்ததை விட ஏறத்தாழ 2 மடங்கு மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளார்கள். இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த ஆண்டுகளில் நடந்த நிலையில் தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் மத்திய அரசு நீட் தேர்விற்கு தமிழகத்திற்கு 1 வருடம் விலக்கு அளித்தது.அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படித்தான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.

நீட் தேர்வு கருத்துருவாக்கம் திமுக காங்கிரஸ் கூட்டணியின் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் தான் உருவானது.அதன் இறுதிவடிவம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மோடி அவர்கள் அரசாங்கம் நடை முறைப்படுத்த வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்டது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close