சாதி, மதம் இல்லா சான்று பெற திராவிடம் பேசும் தலைவர்கள் தயாரா? 

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 03:12 pm
article-about-caste-and-religion-certificate

‛சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றார் பாரதியார். அவரின் வரிகளை மேடைதோறும் முழங்கும் திராவிட இயக்கங்கள், சாதி மறுப்பு திருமணங்கள், தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரங்கள், பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. 

தந்தை பெரியார் என அழைக்கப்படும், ஈ.வெ.ராமசாமி துவக்கிய, திராவிடர் கழகத்தை தலைமை ஏற்று நடத்தி வரும் கி.வீரமணி அவர்கள், சாதி ஒழிப்பை முன்னிறுத்தி பல கூட்டங்களை நடத்தி வருகிறார்.

திராவிடர் கழகத்திலிருந்து அரசியல் இயக்கமாக உருவான திராவிட முன்னேற்ற கழகமோ, தங்கள் ஆட்சி காலத்தில், சாதிக்குள்ளும் சாதியை கண்டுபிடித்து, இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தியது. 

அந்த இயக்கத்திலிருந்து பிரிந்து, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., அவர்களால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.,வும், இதே நிலைப்பாட்டைத் தான் கொண்டுள்ளது. 

இன்னும் சில அரசியல் கட்சிகளோ, சாதிய பின்புலத்தின் தான் இயங்கி வருகின்றன. பல மதங்களை சார்ந்த தலைவர்களும், தாங்கள் சார்ந்த மதத்தின் பின்னணியில், அந்த ஓட்டு வங்கியை வைத்து, அரசியலில் காலம் தள்ளி வருகின்றனர். 

இதில் எங்கிருந்து வந்தது, சாதி, மத ஒழிப்பு நடவடிக்கை? தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம் கடைபிடிப்பதில், தமிழகம், நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்வதாக, இங்குள்ள ஆட்சியாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மார்தட்டிக் கொள்கின்றனர். 

ஆனால், இவர்கள் நடத்தும் அரசியல் கட்சிகளிலோ அல்லது இயக்கங்களிலோ உறுப்பினர்களாக உள்ள எத்தனை பேர், சாதி, மதம் அற்றவன் என்ற சான்றிதழை பெற்றுள்ளனர் அல்லது பெற தயாராக உள்ளனர்? 

அடிப்படை உறுப்பினர்கள், தொண்டர்களை விடுங்கள். எத்தனை தலைவர்கள் இந்த சான்றிதழை பெற தயாராக உள்ளனர். 

நான் இந்து இல்லை; நான் கிறிஸ்த்தவன் இல்லை; நான் இஸ்லாமியன் இல்லை; நான் வேறு எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை. மதங்களை பின்பற்றும் பெற்றோருக்கு பிறந்ததால் மட்டுமே நானும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவன்/ சேர்ந்தவள் ஆகிவிட முடியாது என, சொல்ல எத்தனை பேருக்கு தைரியம் உள்ளது? 

எனக்கு மதமே கிடையாது எனும் போது, சாதி எங்கிருந்து வரும்? அரசாங்கத்தால், சமூகத்தால் குறிப்பிடப்படும் எந்த சாதிய வரம்பிற்குள்ளும் நான் கிடையாது என, எத்தனை பேரால் சொல்ல முடியும்?

இப்படி கேள்விகளை அடுக்குவது சுலபம். ஆனால், எல்.கே.ஜி., அட்மிஷன் முதல் மயானம் வரை, அனைத்து சான்றிதழ் பெறவும், சாதி, மதம் கேட்கிறதே அரசாங்கம் என பலரும் கூறி வந்தனர். 

தற்போது அதற்கும் விடை கிடைத்துள்ளது. வேலுரை சேர்ந்த வழக்கறிஞர் சினேகா, தான் எந்த மதத்தையோ, சாதியையோ சாராதவர் என்று குறிப்பிட்டு, தமிழக அரசிடமிருந்து சான்றிதழ் பெற்றுள்ளார்.

அவரின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார், மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த, கமல்ஹாசன். அவரின் பாராட்டுக்கள் வரவேற்கத்தக்கதே. ஆயினும், வெறும் வார்த்தையால் பாராட்டுவதை தவிர, சினேகாவின் செயல் உண்மையில் உயர்ந்தாக கருதினால், இதே போல் சான்று பெற, கமல் தானும் முன் வருவதோடு, தன் இயக்கத்தை சேர்ந்தவர்களையும், இப்படி ஒரு சான்றிதழ் பெற வலியுறுத்த வேண்டும். 

திராவிடம் என்பது நாடு தழுவியது எனப் பேசி வரும் கமல், இதை செய்ய துணிவாரா?  சாதி மறுப்பு, மத நம்பிக்கை உடைப்பு கொள்கைகளை கடைபிடிக்கும், திரு.கி.வீரமணி அவர்களும் இப்படி ஒரு சான்றிதழை பெற்று, தன் இயக்கத்தை சேர்ந்த தொண்டர்களையும் பெறச் செய்வாரா? 

சாதி மறுப்பு, மத சார்பின்மை பேசும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், சாதி, மதம் அன்றவன் என்ற சான்றிதழ் பெற முன்வருவரா? அப்படி முன் வருவதோ மட்டுமின்றி, தங்கள் தொண்டர்களையும் செய்ய வைப்பரா? 

அப்படி ஒரு சம்பவம் நடந்தால், நிச்சயம் அது, இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவில் தமிழகத்தையும், தமிழர்களையும் இன்னும் தலை நிமிரச் செய்யும். தற்போது பெயரளவில் பேசப்படும் சாதி, மதம் அற்ற திராவிடம், நிஜமாகும். 

திராவிடம் மெய்ப்பட தலைவர்கள் தயாரா? 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close