சாங்க்யம் மாறலாம், சாமி மாறலாம், ஆடு சால்ணாவுக்குதான்

  பாரதி பித்தன்   | Last Modified : 23 Feb, 2019 12:46 pm
special-article-about-tn-politics


சந்தையில் ஆட்டு வியாபாரியிடம், ‛ஐய்யனார் கோயிலுக்கு கிடா வெட்ட, நல்ல ஆடு ஒன்று கொடுங்கள்’ என்று கிராமத்து பெரியவர் கேட்டது ஆட்டின் காதில் விழுந்துவிட்டது. 

ஐய்யோ ஐயனார் கோயிலா? அந்த சாமிக்கே மீசை பெரிசா இருக்குமே, அவரு கையில் எவ்வளவு பெரிய அருவா... பாத்தாலே பயம் வரும் என்று ஆடு புலம்ப தொடங்கியதாம். விலை கட்டுபடியாத நிலையில், ஆடு தப்பியது. 

அடுத்து ஓருவர், ‛மாரியம்மன் கோயிலில் கறிசோறு போடப் போறோம், அதுக்கு ஒரு ஆடு வேணும் என்றார். வியாபாரி விலை ஒத்துவர ஆட்டின் கயிற்றை அவரிடம் மாற்றிவிட்டார். நல்ல வேளை, ஐயனார் கோயிலுக்கு போகவில்லை. மாரியம்மன் கோயிலுக்கு தான் போறோம், ஆத்தா நல்லவ என்று ஆடு துள்ளிக்குதித்து சென்றதாம். 

அங்கு சென்ற பிறகுதான் இங்கேயும் அதே வெட்டு, அதே பிரியாணி என்று தெரியும் போது, ஆடு தப்ப முடியாமல் உயிர் விட்டிருந்தது.  இதே நிலைதான் இந்த தேர்தலில், தே.மு.தி.க.,விற்கும். 

சென்னையில், தன் திருமண மண்டபம் தி.மு.க., அரசால் இடிக்கப்பட்டது என்ற ஆத்திரத்தில், அரசியலில் குதித்த விஜயகாந்த், 2005ம்  ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்கள் மனங்களை கவர்ந்தார். அடுத்த ஆண்டே தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.  3 தொகுதிகளில் 20  சதவீதம், 8 தொகுதிகளில் 15–20 சதவீதம், 33 தொகுதிகளில் 10–15 சதவீதம், 48 தொகுதிகளிலும் 7 முதல் 10 சதவீதம் ஓட்டுகளை பெற்றது அவரது கட்சி.  இதன் காரணமாக, அ.தி.மு.க., மண்ணைக் கவ்வி திமுக வெற்றி பெற்றது. 

மக்கள் மனதிலும், அடடா இன்னும் கொஞ்சம் கூட ஓட்டுப் போட்டிருந்தால் இவர் வெற்றி பெற்று இருப்பாரே என்று வருந்தினர். அடுத்த 5 ஆண்டுகள் நிம்மதியாக கடந்தது. 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், ஜெயலலிதாவே கூறிய மிகப்பெரிய தவறை விஜயகாந்த் செய்தார். எம்.எல்.ஏ.,கள் வெற்றி பெற்றாலும், எதிர்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைத்தாலும், மக்கள் மனங்களில் மிகவும் இறங்கி விட்டார். 

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆகிய 2 கட்சிகளையும் திட்டியோ, ஆதரித்தோ வளர்ந்த ஊடங்கள், கேப்டன் கால் எடுத்து வைக்கவே முடியாத படி கதவுகளை அடைத்தன. ஒரு தலைவனாக உருவாக வேண்டிய கேப்டனை, நகைச்சுவை நடிகராக மாற்றிவிட்டன. அதற்கு ஏற்ப, அவரின் உடல் நிலையும் வேறு. 

‛ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்’ கதையின் 2ம் பாகம் கடந்த, 2 நாட்களாக ஊடகங்களி்ல் ஒளிபரப்பாகி வருகிறது. 
இந்த சூழ்நிலையில் கூட, பா.ஜ.க., - அ.தி.மு.க., விஜயகாந்தை ஒடோடி வந்து பார்க்கிறார்கள். திருநாவுக்கசர் வந்து பார்க்கிறார், அதைத் தொடர்ந்து சவுந்தர்யாவிற்கு, 2வது திருமணத்தை ஏற்பாடு செய்த நன்றிக்காக, ரஜினி வந்து பார்க்கிறார். 

அதன் பின்னர், ஸ்டாலினே நேரில் வந்து நலம் விசாரிக்கிறார். முந்தைய இருவரும் அரசியல் பேசி இருப்பார்கள், மற்றர்வர்கள் அரசியல் பேசவில்லை. அவர்களே சொல்லிவிட்டார்கள் நம்ப வேண்டியது தானே. 

இவர்களை எல்லாம் துாக்கி சாப்பிட்டு விட்டார் பிரமலதா. உனக்கும் பெப்பே, உங்க அப்பனுக்கும் பெப்பே என்று கூட்டணி அறிவிப்பு வெளியாக ஒருவாரம் காத்திருக்க வேண்டும் என்றார். 

இந்த அளவிற்கு இவர்கள் ஆடுவதற்கு விஜயகாந்த், பிரமலதா, விஜயபிரபாகரன், சுதீஷ் யாரும் காரணம் அல்ல, விஜயகாந்த் மாற்றம் தருவார் என்று நம்பி இருக்கும் கனிசமான ஓட்டுகள் தான் காரணம் என்பதை மனதில் வைத்துக் கொள்வோம். 

சரி இந்த தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி சேர்ந்தால் நல்லது. தொடர்ந்து படித்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். 

கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,வுடன் இணைந்து போட்டியிட்ட கட்சிதான், தே.மு.தி.க., அது வெற்றி பெறாமல் போனதற்கு ராமதாஸ் ஐயா கொடுத்த அல்வா தான் காரணம். தே.மு.தி.க.,-  அதி.மு.க., கூட்டணியில் தான் அக்கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்து கிடைத்தது. இதை எல்லாம் தாண்டி அ.தி.மு.க., கூட்டணி முறியும் போது கட்சியில் எந்த பிளவும் ஏற்படாது. 

இதை விடுத்து, திமுக கூட்டணியை தேர்ந்துதெடுத்தால், ஒற்றை இலக்கம் தான் சீட்டு கிடைக்கும். திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் எந்த அளவிற்கு ஒத்துப் போவார்கள் என்பது தெரியவில்லை. திமுக மாவட்ட செயலாளர்களை தேமுதிக தொகுதிகளில் வேலை வாங்க முடியாது, அவர்கள் சொல்லும் வேலையை வேண்டுமானால் செய்யலாம். 

வரும் காலத்தில் திமுக கூட்டணியை விட்டு வெளியேறினால் கட்சி ஒன்றாக இருக்காது.  பாமகவில் இருந்து தீரன் வெளியேறியது, மதிமுகவில் இருந்து எல் கணேசன் உட்பட பலர் வெளியேறியது, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தடா பெரியசாமி வெளியேறியது என்று உதாரணங்களை அடுக்கி கொண்டே செல்லாம். 

சரி இரண்டு கட்சிகளும் வேண்டாம் தனித்து போட்டியிடலாம் என்று தேமுதிக முடிவு செய்யலாம். கடந்த லோக்சபா தேர்தலில் கிட்ட தட்ட தனித்து போட்டியிட்ட நிலைதான். பிரேமலதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். 

அதே போல பாஜ தலைவர்களும் அவர்களுக்கு ஆதரவு பிரச்சாரம் செய்தனர். விளைவு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த தேர்தல் பாஜக, திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு வாழ்வா சாவா பிரச்னை. 

இந்த சூழ்நிலையில் அவர்கள் வெற்றிக்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இறங்கி பிரச்சாரம் செய்வார்கள். அவர்களுக்கு ஆதரவாக ஊகடங்ளும் களம் இறங்கி வேலை செய்யும். விஜயகாந்த் உடல் நிலை, தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒத்துவராது. திமுக, அதிமுகவுடன் ஒப்பிடும் போது தேமுதிக நிர்வாகிகள் பணக்காரர்கள் அல்ல. 

இது போன்ற சூழ்நிலையில் தனித்து களம் காண்பது என்பது  கண்ணை திறந்து கொண்டே கிணற்றில் விழுவதற்கு ஒப்பானது. இப்படி எந்த பக்கம் போனாலும் இழப்பு என்னவோ தேமுதிகவிற்குதான். அதிமுக, திமுக என்ற 2 சாமிகள் வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் தேமுதிக என்ற ஆடு .... அதே தான்.  


இந்நிலையில் தேமுதிக மாநில மகளிர் அணி செயலாளர் பிரேமலதா தான் கட்சியின் மையப்புள்ளியாக கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்டார். விஜயகாந்த் வெறும் பிராண்ட் அம்பாசிட்டர் தான். 

newstm.in

இந்த கட்டுரையில் வரும் அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சாெந்த கருத்துக்களே.

 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close