நம்பினால் நம்புங்கள் - மோடி அரசைப் பாராட்டிய ப.சிதம்பரம்

  Newstm Desk   | Last Modified : 03 Mar, 2019 10:40 am
p-chidambaram-praises-modi-govt-for-highways-clean-ganga

தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு மற்றும் கங்கை நதியை தூய்மைப்படுத்துவது ஆகிய பணிகளில் மோடி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்.

ப.சிதம்பரம் எழுதிய ‘Undaunted: saving the Idea of India' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது, பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள், நாட்டு நடப்புகள் உள்ளிட்டவை தொடர்பாக பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்தார்.

அதில், “தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்புத் திட்டம் வெற்றியடைந்திருக்கிறது எனக் கருதுகிறேன். நாளொன்றுக்கு நாங்கள் கட்டமைத்ததைவிட கூடுதலான தொலைவுக்கு அவர்கள் (பா.ஜ.க. அரசு) சாலைகளை கட்டமைக்கின்றனர். அடுத்த வரக்கூடிய அரசு இதைக் காட்டிலும் கூடுதலான தொலைவுக்கு சாலைகளை அமைக்க முடியும். அதற்கான கட்டமைப்பு இங்கு இருக்கிறது. நல்லதொரு திட்டம் என்ற அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு பாராட்டத்தக்கது. அந்தத் திட்டத்தை முதலில் நாங்கள் தொடங்கினோம். எங்கள் ஆட்சியில் 34 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. அவர்களது ஆட்சியில் 35 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதைப்போலவே ஆதார் திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. அதை ரத்து செய்யப்போவதாக பா.ஜ.க. கூறி வந்தது. ஆனால், நல்லவேளை அதைச் செய்யவில்லை. அந்தத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, சமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக வழங்கி வருகின்றனர். 

தூய்மை கங்கை திட்டத்தைப் பொருத்தவரையில் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை என்ற போதிலும், குறைந்தபட்சம் அதற்கான முயற்சியை முழு மனதாக மேற்கொண்டு வருகின்றனர். கங்கையை தூய்மைப்படுத்த நாங்கள் 5 முறை முயற்சித்தோம். ஆனால், முடியவில்லை. இந்த முறை வெற்றி கிடைக்கும் என்று நினைக்கிறேன். கங்கையை தூய்மைப்படுத்த அவர்கள் முழுமனதாக முயற்சிப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்’’ என்றார் ப.சிதம்பரம்.

எனினும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்றும், ஜிஎஸ்டி திட்டம் குறைபாடுகளுடன் அமல்படுத்தப்பட்டது என்றும் சிதம்பரம் விமர்சனங்களை முன்வைத்தார். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து, உங்களுக்கு ஏதேனும் பதவி கொடுக்க நினைத்தால், நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்ற குறும்பான கேள்வியை ஒருவர் முன்வைத்தபோது, நிச்சயமாக, நான் எதிர்க்கட்சித் தலைவராக விரும்புவேன் என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close