ஆழ உழுதால் ஆளலாம் என்பதை புரிந்து காெள்வாரா கமல்ஹாசன்? 

  Newstm Desk   | Last Modified : 04 Mar, 2019 03:55 pm
political-article-about-kamal-hassan

லோக்சபா தேர்தலில் கூட்டணிகள் அமைக்கும் பணி கிடத்தட்ட நிறைவுக்கு வந்து விட்டது. இப்போது உள்ள நிலையில் அதிமுக, திமுக, ஆகியவை இரு அணிகளாகவும், அமமுக, மக்கள் நீதி மய்யம் போன்றவை தனித்தனியாகவும் போட்டியிடும் என்று தெரிகிறது. 

தனித்து நின்றால் கூட, வெற்றி பெறும் வாய்ப்புள்ள, அதிமுக, திமுக ஆகியவை, விரல் விட்டு எண்ணும் ஓட்டு வித்தியாசத்தில், வெற்றி இடம் மாறிவிடக்கூடாது என்று, கூட்டணி கட்சிகளை காலில் விழுந்தாவது வளைக்கின்றன. அவர்களே கூட்டணி என்று தொடங்கிவிட்டதால், யாருமே சேர்த்துக் கொள்ள தயாராக இல்லாத கட்சிகள் கூட நாங்களும் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று கூறி, தமிழக மக்களை கதி கலங்க வைக்கின்றன. 

இந்த நிலைப்பாட்டில் தான், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் உள்ளார். ஒரு பக்கம், கூட்டணி பற்றி பேசுகிறோம் என்று கூறிக் கொண்டே, தனித்துப் போட்டி என்றும் சொல்கிறார். 

தற்போதைய நிலையில், கமல் கட்சியுடன் உள்ளூர் கட்சிகள் கூட்டணி அமைக்கலாம். மற்றவர்கள் திமுக, அதிமுகவுன் அணி சேர்ந்துவிட்டனர். அதுவும் நடக்காமல் போனால், கமல் தனித்து போட்டியிடுவது உறுதியாகும். அந்த நிலையில், கமல், 40 தொகுதிகளுக்கு பதிலாக, குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் களம் இறங்கினால், அதில் மட்டும் அதிக கவனம் செலுத்தி, ஓரளவு அதிக ஓட்டுகள் பெற்று, மக்கள் மத்தியில் தனக்கும் செல்வாக்கு உள்ளது என நிரூபிக்கலாம். 
 
நடக்கப் போவது சட்டசபைத் தேர்தல் அல்ல, லோக்சபா தேர்தல். கடந்த முறை,  ஒரு சில  தொகுதிகளில் திமுக, அதிமுக வெற்றிக்கு இடையே, ஓட்டு வித்தியாசம் மட்டும், 2 லட்சம். அப்படி என்றால், எத்தனை பேர் ஓட்டுகளை இதர கட்சிகள் பெற்று இருக்கும் என்று புரிந்து கொள்ள இயலும்.

இன்று, மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி பாஜக.  தேசிய கட்சியான பாஜக கூட, தமிழகத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால், கூட்டணி அமைக்க வேண்டியுள்ளது. அதுவும், வெறும் 5 சீட்டுகளுக்காக, அதிமுக.,வுடன் கூட்டணி அமைத்துள்ளது. 
 
சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே தமிழகத்துடன் தொடர்புடைய கட்சி காங்கிரஸ். இந்த நாட்டை மட்டுமின்றி தமிழகத்தையும் ஆட்சி செய்த கட்சி அது.  கடைக்கோடி கிராமத்தில் கூட கிளை உள்ள கட்சி. அந்த கட்சியே தற்போது திமுகவுடன் கூட்டணி அமைத்து, 10 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. 

தமிழகத்தின் எந்த கிராமத்திலும், யார் தயவும் இல்லாமல் போராட்டம் நடத்துபவர்கள் இடதுசாரிகள். அவர்களுக்கு அரசு ஊழியர் முதல், அன்றாட கூலித் தொழிலாளி வரை உள்ளவர்களுக்கான சங்கங்கள் பின்புலத்தில் செயல்படுகின்றன. 

சோரம் போகாத பூத் கமிட்டி உறுப்பினர்கள் இருக்கும் கட்சி இடது சாரிகள். இப்படி பல தகுதிகளைக் கொண்ட கட்சி கூட ஒன்று அல்லது இரண்டு சீட்டுகளுக்குதான் கூட்டணி அமைக்கிறது. 

கடந்த லோக்சபா தேர்தலில்,  3வது அணியாக அமைந்த மக்கள் நலக் கூட்டணியில், பாஜக.,வும், பாமகவும் தான் வெற்றி பெற்றது. அதில், பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதற்கு,  2 வேட்பாளர்கள் போட்டியிட்டு கிறிஸ்தவர்கள் ஓட்டுக்களை பிரித்தது முக்கிய காரணம். 

பாமக வெற்றிக்கு அவர்கள் தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பே களம் இறங்கி, வீடு வீடாக சென்று தங்கள் ஓட்டுகளை கவர்ந்து இழுத்தது தான் காரணம். 

இது தான் தமிழகத்தின் யதார்த்தம். இதனை புரிந்து கொண்டு, தனக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை கண்டறிந்து, அதில் மட்டும் போட்டியிட்டு வெற்றி பெற கமல் முயற்சி செய்ய வேண்டும். அதைவிடுத்து, 40 தொகுதிகளிலும் போட்டி என்று நினைத்தால், அது விவசாயி ஆழ உழுவதற்கு பதிலாக, அகல உழுவதைப் போன்றது தான். 

அது எவ்விதத்திலும் பலன் தரப்போவதில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலில், தனித்து போட்டியிட்டு, தன் கட்சியை பிரபலப்படுத்திய சீமான் போல, மக்கள் நீதி மய்யத்தையும் பிரபலபடுத்தலாமே தவிர்த்து, வேறு பலன் கிடைக்காது.
 
பல தோல்விகளுக்கு பின்னர் கூட, 8 ஆண்டாக சீமான் கட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். ஆனால் ‛விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கு பிரச்னை என்ற உடன், இந்த நாட்டை விட்டே வெளியேறுவேன் என்றவர் கமல். 

லோக்சபா தேர்தலுக்குப் பின், கமல் எதிர்பார்த்த படி வெற்றி பெறாவிட்டால், ஒரு வேளை அவர், இந்த நாட்டை விட்டே போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்தால், தமிழகம் ஓர் மாபெரும் கலைஞனை இழக்க நேரிடும். 

எனவே, எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவெடுக்காமல், அகல உழுவதை விட, ஆழ உழுவது சிறந்தது என்பதை புரிந்து நடந்தால், அது கமலுக்கும், அவரை நம்பி கூட்டம் சேர்ந்துள்ள மய்யம் உறுப்பினர்களுக்கும் நல்லது. 

கமல், நிஜமாகவே, அரசியலில் படிந்துள்ள மாசை துடைக்க நினைத்தால், மெது மெதுவாகத்தான் முடியும் என்பதை அவர் உணர வேண்டும். அப்படி செய்தால் அவரின் எண்ணம் ஈடேறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. 

newstm.in

இந்த கட்டுரையில் வரும் அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close