இதற்கு தான் ஆசைப்பட்டீர்களா திருமாவளவன் அவர்களே?

  பாரதி பித்தன்   | Last Modified : 04 Mar, 2019 05:41 pm
political-article-about-dmk-thiruma-alliance

தமிழகத்தில் மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும்  அதிகம் ஏமாற்றப்படுபவர்கள் இரு பிரிவினர்; அவர்கள், விவசாயிகள் மற்றும் பட்டியல் இனத்தினர். இதனால் தான் அவர்களை முன்னேற்றுவதற்காக பலர் கட்சி தொடங்கி செயல்படுகிறார்கள். 

வட மாநிலத்தில் தேவிலால், தமிழகதத்தில் மறைந்த நாராயணசாமி நாயுடு போன்றவர்கள் செய்த சாதனையில், ஒரு சதவீதம் கூட, தற்போதுள்ள விவசாய சங்கங்கள் செய்யவில்லை என்பது வெளிப்படை. 

இதே நிலைதான் பட்டியல் இனத்தவருக்கும். தமிழகத்தில் ஜான்பாண்டியன், திருமாவளவன், கிருஷ்ணசாமி, கிருஷ்ணபறையனார் என்று பட்டியல் இன மக்களுக்கு என கட்சி நடத்தும் தலைவர்கள் உள்ளனர். இவர்களில், மற்றவர்களை விட திருமாவளன் தமிழகம் முழுவதும் பிரபலமானவர்.

அவர் நடத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும், ஒரு சதவீதற்கு குறைவான அளவிற்காவது ஓட்டு வங்கி உள்ளது. 

கடந்த தேர்தலின் போது, மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில், திருமாவின் விடுதலை சிறுத்தைகள், வைகோவின் மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் ஒரே பக்கம் நின்றன. பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர்கள் போராட்டம் நடத்திய போது கூட, அடுத்த தேர்தலிலும், இந்த கூட்டணி தொடரும் என்றே கூறப்பட்டது; எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், வரும் லோக்சபா தேர்தலுக்கு, திமுக வண்டியில் சீட் பிடிக்க முதலில் முட்டி மாேதியவர் திருமா தான். அவரை தொடர்ந்து, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட்டுகளும், திமுக.,வுக்கு ஆதரவாக குரல் கொடுத்து, எங்களையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என நேரடியாக கெஞ்சாமல் மறைமுமாக சுருதி பாடினர். 

 ஆனால் காங்கிரஸ் எங்களின் கூட்டணி கட்சி, மற்றவர்கள் தோழமை கட்சி என்று திமுக பொருளாளர் துரைமுருகன் அபசுரமாக வாய்த்திறந்தார்; அல்லது ஸ்டாலினின் மனசாட்சியாக பேசினார். அவரின் இந்த பேச்சு,  தேர்தல் நேரத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகளை, திமுக அம்போ என விட்டுவிடப் போகிறது என்பதை கோடிட்டு காட்டியது. 

சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழா வரையில், ஸ்டாலின் மீது மிகப் பெரிய மரியாதையை வெளிப்படுத்தாத ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு, 10 இடங்கள் கொடுக்க, திமுக முன்வந்த நிலையில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கவுரவமான இடங்களை கொடுக்கும் என்று தான் நினைக்கப்பட்டது. 

ஆனால், துரைமுருகன் தோழமை கட்சி என்று குறிப்பிட்டதன் பொருளை விளங்க வைக்கும் வகையில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு முன்பாக பல கட்சிகளுக்கு, தேர்தலில் சீட் ஒதுக்கப்பட்டது. 

குறிப்பாக, பிரபல கல்வியாளரும், தொழில் அதிபரும், நானும் அரசியல் கட்சி நடத்துகிறேன் என்ற பெயரில், இந்திய ஜனநாயக கட்சி நடத்தும் பாரிவேந்தர் என அழைக்கப்படும் பச்சமுத்து, அதிமுக, பாஜ,  கமல் என பல தரப்பிலும் பேசி பார்த்துவிட்டு, கடைசியில், திமுக.,விடம் ஒரு சீட் பெற்று சென்றுள்ளார். 

அதுவும், உதய சூரியன் சின்னத்தில் நிற்பதாக ஒப்புக்கொண்ட பிறகு தான் சீட் தரப்பட்டுள்ளது. அவருக்கென்ன, தான் போட்டியிடும் தொகுதி மட்டுமில்லாமல், திமுக., சார்பில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்களின் செலவையும் சேர்த்து ஏற்றுக்கொள்ளவும் சம்மதித்திருப்பார். 

ஆளுங்கட்சிக்கு எதிரான அலையில், உதய சூரியனுக்கு ஓட்டு விழுந்தால், அதன் மூலம், எப்படியும் எம்.பி., ஆகிவிடலாம் என கணக்கு போட்டுள்ளார் பச்சமுத்து...சாரி... பாரிவேந்தர். 

ஒரு வேளை, மத்தியில், காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைந்துவிட்டால், ஒரு இணை அமைச்சர் பதவியாவது வாங்கி விடலாம் (நன்கு கவனியுங்கள் ‛வாங்கிவிடலாம்’) எனவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார் போலும். 

சரி அவரை விடுங்கள், அவராவது பிரபல கல்வி நிறுவனத்தின் வேந்தர் என்ற வகையில், தமிழகம் மட்டுமின்றி, நாடு மழுவதும் பிரபலமான முகம். கொங்கு மண்டலத்தில் குறிப்பிட்ட சில பிரிவினரின் செல்வாக்கு மட்டுமே பெற்றிருக்கும் ஈஸ்வரனும் கூட ஒரு சீட் பெற்றுவிட்டார். 

இவ்வளவு நடந்தும் கூட,  மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் பேச்சுவார்த்தை நடந்து முடியவில்லை. கொஞ்சம் இருங்க சார் போயிட்டு வரட்டும் என்பது போலவே மக்கள் நல கூட்டணி என்று உருவானால் யார் எல்லாம் சென்று சேர்வார்களோ அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. 

வரிசையில் கடைசியாக நிற்பவருக்கு பிரசாதம் கொடுப்பவர் கரண்டியால் சுரண்டி எடுத்து போடுவார் அல்லவா; அதற்கு இணையாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ரெண்டு சீட்டு பெறத்தான் பல ஆண்டுகளாக ஸ்டாலினுடன் போராட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சி கொள்கை வளர்த்தது. 

அந்த 2 சீட்டிலும் ஒன்று சிதம்பரம் தொகுதி. இது திருமாவளன் அடிக்கடி போட்டியிடும் தொகுதி. இதில் அவர் தனித்து நின்றால் தோல்வி நிச்சயம், கூட்டணியில்  நின்றால் வெற்றி நிச்சயம் என்பது  தான் வேறுபாடு. திமுக, விடுதலை சிறுத்தைகள் இல்லாத தொகுதியில் அக்கட்சிக்கு இடம் ஒதுக்கி, திமுக தொண்டர்களை களம் இறக்கி வெற்றி காண வைப்பது போல, விடுதலை சிறுத்தைகள் கட்சி இவ்வளவு காத்திருந்து தனக்கு வலுவான இடத்தை பிடித்துள்ளது. எவ்வளவு வேதனையான விஷயம். 

இனி ரோசப்பட்டு மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கவும் முடியாது. வேறு வழியில்லாமல், திமுக கொடுக்கும் 2 இடங்களில் போட்டியிட்டு கொள்கை வளர்க்க வேண்டியது தான். அதிலும் இவர், திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

இந்த இடத்திலாவது அவர், தன்மானத்துடன் யோசித்து கூறுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்( இது 4ம் தேதி மதியம் 4 மணி நிலவரம்). மனைவி அல்லது கணவன் இறந்து விட்டால் சம்பந்தப்படவர் விதவை என்று அழைப்பது சமூக வழக்கம். அதுவே விவாகரத்து பெற்றால், சட்டப்படியான விதவை என்று வழக்கறிஞர் ஒருவர் விளக்கம் அளித்தார். 

அதற்கு இணையானது தான் திமுக சின்னத்தில் போட்டியிடுவதும். கட்சியை கலைத்துவிட்டு, திமுகவில் சேர்ந்து போட்டிட்டால், உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். அதே நேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி யதார்த்தத்தில் இருக்கும், ஆனால் அது சட்ட ரீதியாக களைக்கப்படும். 

அதாவது பாராளுமன்ற வாசல் வரை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பாராளுமன்றத்தின் வாசலை தாண்டி உள்ளே சென்று விட்டால் அவர் திமுக எம்பி . 

திமுக, அதிமுக சின்னத்தி்ல் போட்டியிடும் அனைத்து கட்சிளுக்கும் இது பொருந்தும். அதாவது பாராளுமன்றம் உள்ளே விடுதலை சிறுத்தைகள் என்ற கட்சியே கிடையாது. 

அதே போல், திமுக அனுமதியின்றி, பாராளுமன்றத்தில் அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது. அவருக்கு பிடிக்காத மசோதாவாக இருந்தாலும், திமுக கூறினால் ஓட்டளித்தே தீர வேண்டும். 

அவர் சரி என நினைக்கும் மசோதாவை திமுக எதிர்த்தால், அந்த மசோதாவுக்கு ஆதரவாக அவரால் ஓட்டளிக்கவும் முடியாது. அப்புறம் எதற்கு சார் தனியாக ஒரு கட்சி. பேசாமல் திமுக.,வில் சேர்ந்து விடுவது தானே என நீங்கள் கேட்கலாம். ஆனால், அவர் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. அதுவரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

பட்டியல் இனத்தவரின் உரிமைகளுக்காக பாடுபடுவதாக கூறும் திருமா, சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ வேறெந்த கட்சியின் கட்டளைக்கும் கட்டுப்படாமல் இயங்கினால் மட்டுமே, அவர் ஒரு உண்மை போராளியாக செயல்பட முடியும். 

அப்படி இல்லையென்றால், கட்சியை கலைத்து விட்டு, இனியும் மக்களை ஏமாற்றாமல், சுயநலனுக்காக, திமுக.,வில் சேர்ந்து, அவரும் ஒரு சராசரி அரசியல்வாதி தான் என்ற வகையில்,  எம்பி ஆகலாம், ஏன் மத்திய அமைச்சர் கூட ஆகலாம். அதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் கிடையாது. 

இவ்வளவு துன்பட்டு, துயரப்பட்டு, இழிவுபட்டு இந்த எம்பி சீட்டை திருமாவளவன் பிடித்துவிட்டதில் பட்டியல் இன மக்கள் வாழ்க்கையில் சிறிது உயர்வு ஏற்பட்டால் பரவாயில்லை. ஆனால் அதற்காக, திருமா என்ன முயற்சி மேற்கொள்ளப் போகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். 

newstm.in 

*இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close