தே.மு.தி.க., செய்வது பச்சை துரோகம்: சொல்கிறார் தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன்

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 08:48 pm
special-interview-with-dmk-mla-j-anbazhagan

‛‛முதலில் எங்களிடம் வந்திருந்தால், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு இடம் கிடைத்திருக்கும்; கூட்டணி பேச்சுவார்த்தை என்ற பெயரில், அனைத்து தரப்பிடமும் பேரம் பேசும், தே.மு.தி.க.,வின் செயல், அவர்கள் மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம்’’ என, தி.மு.க., மூத்த தலைவரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான, ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

லோக்சபா தேர்தல் தேவி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணியில் இடம் பெறுவதற்காக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என, இரு கட்சிகளிடம், விஜயகாந்த்தின் தே.மு.தி.க., மாறி மாறி பேச்சு நடத்தி வருவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சூழ்நிலையில், நடப்பு அரசியல் நிலவரம் குறித்தும், லோக்சபா தேர்தலுக்கான தி.மு.க.,வின் வியூகம் குறித்தும் அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெ.அன்பழகன் நம் நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

‛‛மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை எதிர்க்கும் சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையிலேயே, தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது. அதன் படியே, எங்கள் பழைய நண்பர்கள் மற்றும் எங்களை எதிர்த்து பேசியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஓரணியில் நிற்கிறோம். 

காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 2014ல் தி.மு.க., அவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை. அந்த தேர்தலில், வெற்றி வாய்ப்பை இழந்தாேம். அதன் பின் மீண்டும் நாங்கள் கூட்டணி அமைத்து, இன்று வரை அது தொடர்கிறது. 

எங்கள் கட்சியையும், எங்கள் கட்சித் தலைவரின் குடும்பத்தாரையும் கடுமையாக விமர்சித்த, ம.தி.மு.க., தலைவர் வைகோ கூட எங்கள் கூட்டணியில் இணைந்துள்ளார். கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில், மூன்றாவது அணியாக செயல்பட்ட, கம்யூனிஸ்ட்டுகள், திருமாவளவன் போன்றோரும் எங்கள் அணியில் இணைந்துள்ளனர். 

மத்தியில் ஆளும் மாேடி தலைமையிலான பா.ஜ., அரசை அகற்ற வேண்டும். மீண்டும் அவர் தலைமையில் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதற்காகவே, ஒத்த கருத்துடைய அனைவரும் கூட்டணி அமைத்துள்ளோம். 

கூட்டணி தொடர்பாக, முன் கூட்டியே எங்களிடம் பேச்சு நடத்தியிருந்தால், தே.மு.தி.க.,விற்கும் இடம் ஒதுக்கியிருக்க முடியும். ஆனால், அ.தி.மு.க.,வுடன் பேச்சு நடத்திக் கொண்டே எங்கள் பக்கமும் பேச்சு நடத்திய சுதீஷின் செயல் அநாகரிகமானது. இது, அவர்கள் மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம். 

மத்திய, மாநில அரசுகளை அகற்றுவதே எங்கள் நோக்கம். அவர்களின் பொய் வாக்குறுதிகள், ஊழல்களை மக்கள் முன்னிலையில் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்போம்.

தற்போதைய நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என, வேறெந்த கட்சியும் சொல்வதற்கு முன், தி.மு.க., முன் மொழிந்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்கப் பின், காங்கிரஸ் எவ்வழியை தேர்ந்தெடுக்கிறதோ, அவ்வழியை தி.மு.க., பின்பற்றும்.

அ.தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது சந்தர்ப்பவாதத்திற்காக அந்த கூட்டணியில் இணைந்துள்ளது. அந்த பக்கம் உள்ள கூட்டணி, கொள்கை முரண்பட்ட கூட்டணி. 

கனிமொழியின் சொந்த முடிவு: 
தேர்தலில் போட்டியிட முடியாதவர்கள் தான் ஒரு காலத்தில், ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்படுவர். அறிவாளிகள், வயதானோர், பொருளாதார வல்லுனர்களுக்கு இந்த பதவி வழங்கப்படும். ஆனால், தற்போது பலரும் ராஜ்யசபா எம்.பி,யாக நியமிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை அனைத்து கட்சியிலும் உள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க.,வின் தலைவராகவும் இருந்த கருணாநிதி, கனிமொழியை ராஜ்யசபா எம்.பி.,யாக நியமித்தார். தற்போது துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட விரும்பி, கனிமொழி விருப்ப மனு அளித்துள்ளார். 

இது  அவரது சொந்த விருப்பமே. இதில்,கட்சியின் வியூகம் ஏதும் கிடையாது. எனினும், கட்சித் தலைவர் ஸ்டாலின் தான் இறுதி முடிவெடுப்பார். அவர் வெற்றி பெற்றாலும், அது, தி.மு.க.,வின் வெற்றியாகவே இருக்கும். 

அழகிரி தனிக் கட்சி நடத்தி கருத்து கூறினால், அவரின் பேச்சுக்கு ஏதேனும் எதிர் கருத்து கூறலாம். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர் எப்போதும் கட்சிக்கு எதிராகவே பேசுவார். அவரால், தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு சிறிதும் பாதிக்காது. 

நான் தற்போது எம்.எல்.ஏ.,வாக இருக்கிறேன். கட்சி எனக்களித்துள்ள பணியை சிறப்பாக செய்து வருகிறேன். கட்சித் தலைமைக்கு எப்போது தேவைப்படுகிறதோ, அப்போது என்னை தேசிய அரசியலில் பயன்படுத்திக்கொள்ளும்’’ 

இவ்வாறு அவர் பேசினார். 

 

பேட்டியின் வீடியோவைக் காண https://www.youtube.com/watch?v=SzqqPgwSH_8கிளிக் செய்யவும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close