தொலைந்துபோக காத்திருக்கிறீர்களா பிரேமலதா அவர்களே? பதில் சொல்லுங்கள்

  பாரதி பித்தன்   | Last Modified : 09 Mar, 2019 07:28 pm
are-you-waiting-to-be-lost-premalatha

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் பிறந்த சில பெண்கள் திருமண வயதை எட்டியதும், அரசு வேலை பார்க்கும் மணமகனுக்கு தான் கழுத்தை நீட்டுவேன் என்று அடம்பிடிப்பார். அவ்வளவு வரதட்சணை கொடுக்க வசதியில்லை, நம்ம ஜாதியிலேயே அரசு வேலை பார்ப்பவரே இல்லை என்று பெற்றோர் யதார்த்தங்களை எடுத்து கூறினாலும் அந்த பெண்ணுக்கு காதில் விழாது. அந்த பெண்ணும் காதலில் விழாது, இப்படியே 40வயதுக்கு  மேலும் கன்னியாகவே கனவுகளுடன் காத்திருப்பார். அவரை 18வயதில் பார்த்த மணமகன் கூட தன் மகளுக்கு பூப்பு நீராட்டு விழா நடத்தி இருப்பார். ஆனால் அந்த பெண் கன்னியாகவே ஆபீஸ் வாசலில் காத்திருப்பார். 

இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிகவின் நிலையும் அரசு வேலைக்கு காத்திருக்கும் பெண்ணின் நிலையை போலத்தான் உள்ளது. 

கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக, இந்த முறையும் அதே கட்சி பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்குரிய இடங்களை , பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.  ஆனால் இம்முறை அதிமுக கட்சி நிர்வாகம் கூட்டணி அமைவதே எங்கள் தலைமையில்தான், மேலும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி யாருக்கு எவ்வளவு இடம் என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம், நீங்கள் இதில் தலையிட வேண்டாம் என பாரதிய ஜனதா தலைமையிடம் தெரிவித்து விட்டனர். எனவே, அவர்களும் தேமுதிக என்றில்லை, அவர்களுக்கான இடங்களையே கூட எடப்பாடியார் கொடுத்ததை வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்து விட்டனர். இந்த யதார்த்தத்தை தேமுதிக ஓர் கட்சியாக கிரகித்துக்கொண்டதா என்று தெரியவில்லை.

திமுக காங்கிரஸ், அதிமுக, பாமக,பாஜக உள்ளிட்ட அரசியல்கட்சிகளின் பேச்சுவார்த்தை ஒரிரு தினங்களில் முடிவு பெற்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு விட்டது.  

ஆனால் தேமுதிக இத்தனை நாள் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வரமுடியவில்லை. இவர்கள் வைக்கும் நிபந்தனைகளை அதிமுக ஏற்கவில்லை என்பதை காரணம் என்று விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவும், மச்சான் சுதீஷும் கூறுவதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் அவை என்ன நிபந்தனைகள் என்பதையும் வெளிப்படையாக  அவர்களால்  இதுவரை சொல்ல முடியவில்லை. பாமக கட்சியை அழைத்து தனியே சீட்டு கொடுத்தார்கள் என்பது தான் குற்றச்சாட்டு என்றால் அதனால் என்ன நஷ்டம் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். அப்படி எதுவும் கூறாமல் இருப்பதே, தேமுதிகவின் திரைமறைவு பேரம் பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

அதிமுகவை விமர்சனம் செய்து விட்டு பின்னர் கூட்டணி வைத்துக் கொண்ட அன்புமணி, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தன்னிலை விளக்கம் அளிக்கிறேன் என்று சிக்கலை அதிகரித்தது போலவே, திமுக, அதிமுக இடையே ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிகவின் ராஜதந்திரத்தை துரைமுருகன் சந்தி சிரிக்க வைத்ததால், பிரமலதாவும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர் சம்பவத்திற்கு விளக்கம் அளிக்காமல், தேமுதிகவை பழிவாங்க திமுக இப்படி பழிபோடுகிறது என்கிறார். சொந்த விஷயமாக துரைமுருகனை சந்திக்க சென்றது தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரமலதா, சுதீஷ் ஆகியாருக்கு எப்படி தெரிந்தது. அவர்கள் இப்போது வேண்டாம், அதிமுகவுன் கூட்டணி பற்றி பேசும் நிலையில் அங்கே சென்றால் வேறு விதமாக பேச்சுஎழும் என்று தடுத்து இருக்க மாட்டார்களா அந்த தேமுதிக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலரை. அதற்கும் வழியில்லை. மேலும் துரைமுருகனை சந்திக்க வேண்டிய அளவிற்கு என்ன சொந்த விஷயம் என்பதை அவர்களை அழைத்து பொதுமக்கள் மத்தியில் விளக்கம் அளிக்கச் சொல்லியிருக்க வேண்டும். அல்லது கட்சியின் நற்பெயருக்கு கேடு விளைவித்துவிட்டார்கள் என்று கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும். இது போன்ற எதையும் செய்யாத பிரேமலதா, திமுகவை, துரைமுருகனை  வகைதொகையாகத் திட்டுகிறார். 

துரைமுருகன் தர்மசங்கடம் ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்தற்கு காரணமே பிரமலதா தான். உடல் நலம் இல்லாத விஜயகாந்த்தை பார்த்துவிட்டு பேட்டியளித்த ஸ்டாலின் வழக்கம் போல உடல் நலம் விசாரிக்க வந்தேன் என்று பேட்டியளிக்க, பிரமலதாவோ, ஸ்டாலின் அரசியலும் பேசினார் என, அவருக்குத் தர்மசங்கடத்தை உருவாக்கினார். அரசியல் குழந்தையான தேமுதிகவே அரசியல் செய்யும் போது, பழம் தின்று கொட்டை போட்ட திமுக அதை செய்வதில் வியப்பு என்ன இருக்கிறது. 

இவ்வளவு கேவலம் நடந்த பின்னரும் இன்னும் 2 நாட்கள் பொறுங்கள் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார். இவர்கள் கூட்டணி வைக்கலாம், வைக்காமல் தனித்து நின்று கொள்கை வளர்க்கலாம், ஆனால் ஓட்டு போட வேண்டிய மக்கள் இதனை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சீ, சீ அசிங்கம் என்று நினைத்துவிட்டால் அப்புறம் அந்த ஆண்டவனே வந்தாலும் கூட்டணியை காப்பாற்ற முடியாது. 

மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்ற உலக நீதியின் படி அதிமுக இத்தனை இழிவுக்கு பின்னரும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டும். அதன்படி அவர்கள் சிந்தனை செய்தால் தேமுதிக பாடு திண்டாட்டம் தான். ஆனால் நாட்டை காப்பாற்ற கடவுள் திட்டமிட்டால் அதை மாற்ற யாராலும் முடியாது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close