தேனி  பாராளுமன்றத் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 15 Mar, 2019 04:19 pm
who-is-going-to-win-theni-parliamentary-constituency

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ஒதுக்கீட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தேனி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆருண் அவர்களுக்கே  மக்கள் வெற்றி வாய்ப்பினைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிட்டிங் எம்.பி பார்திபன் (அதிமுக) அவர்களிடம் போய் எம்.பி வர்றார் என்றால் சட்டென பதறி எழுந்து நிற்பார். அப்புறம், அண்ணே நீங்க தான் எம்.பி என்று சொன்னதும் ஆசுவாசப்படுத்திக் கொள்வார். அந்தளவுக்குச் செயல்வீரர். 

அதற்கு முன் இருந்த ஆருண்க்கு நீங்கள் எம்பி சார் என்று அடிக்கடி நினைவுபடுத்திட்டே இருக்கணும். எலெக்‌ஷன் வரும் போதெல்லாம் அவருக்குத் "தான்" ஒரு எம்.பி என்ற நினைவே வரும். அவரும் தேர்தல் நேரத்தில் மட்டுமே தொகுதிப்பக்கம் வருவார். மற்றபடி தொகுதிக்கும் வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

எனவே தொகுதி சாதனையைச் சொல்லியெல்லாம் யாரும் ஓட்டுக் கேட்கவும் போவதில்லை. ஓட்டுப் போடப் போறதும் இல்லை. கட்சியும், ஜாதியும் தான் தேனி தொகுதியைப் பொருத்தவரை வெற்றி தோல்வியை முடிவு செய்யும்.

இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் என்று பார்த்தால், 

1, ஏற்கனவே நன்கு அறிமுகம் உள்ள வேட்பாளர். ( அறிமுகம் மட்டும் தான்)

2, திமுகவில் அந்தப் பகுதி வாரியாக சில இரண்டாம் மட்ட மூன்றாம் மட்டத் தலைவர்களின் ஆளுமை.

3, முஸ்லிம் ஓட்டு கணிசமாக இருக்கின்றது.  இந்த தொகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஏற்பட்ட பிரச்னைகளில் நியாயமாக அவர் சார்ந்த சமுதாயத்துக்கு ஆதரவாக நடந்துகொள்ளவில்லை என்ற கருத்து திருமாவளவன் மீது இருந்து வந்தாலும் விசிகவுக்கென்று சில சதவீத வாக்குகள் உண்டு.

4, மதிமுகவின் வைகோ நாயுடுகாரு இந்தத் தொகுதில் கொஞ்சம் வாக்கு சேகரிப்பார். ஒன்று நாயுடு சமூகம் இங்கு அதிகம் இரண்டாவது, வைகோவின் சம்பந்திகளின் உள்ளூர் பலம்.

அதிமுகவின் பலம் என்பது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கோட்டைகளில் குறிப்பிடத்தகுந்த பகுதி. அத்தனை பாமர மக்கள் உள்ள பகுதி. பாராளுமன்றத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியில் போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம், உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் ஆகியவை அதிமுகவிற்கு கணிசமான ஓட்டு வங்கி உண்டு. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. மொத்த ஓட்டாக 5 லட்சத்தில் 70 ஆயிரம் ஓட்டுகளைப் பெற்றிருந்தது. இது கிட்டத்தட்ட இந்த தொகுதி வாக்காளர்களின் 50 சதவீத வாக்குகளுக்கும் அதிகம்.

முக்கியமாக துணை முதல்வர் ஓபிஎஸின் சொந்த ஊர் தொகுதி ஒன்றும், வென்ற தொகுதி ஒன்றும் இதனுள் தான் வருகிறது.

இத்தனை இருந்தும் அதிமுக ஜெயிக்குமா என்றால் ஜெயிப்பது என்பது மிகப் பெரிய சவால். காரணம், அமுமுகவின் இரண்டாம் தூணாகிய தங்கத் தமிழ்ச்செல்வன். அமுமுக சார்பில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது. தொகுதியைப் பொருத்தவரை தங்கத்தமிழ்ச் செல்வனுக்கு தான் ஜெயிக்கிறோமோ இல்லையோ ஓபிஎஸ் அணியைத் தோற்கடித்தே தீருவது என்பதில் கடும் உறுதியுடன் இருப்பார். ஆண்டிபட்டி மற்றும் உசிலம்பட்டி தொகுதிகளின் அதிமுக ஓட்டினை பெரும்பங்கு பிரிக்கக் கூடியவர். 

இந்த நிலையில் ஓபிஎஸ் தன் மகன் ரவீந்திரனை தேனி தொகுதியில் களம் இறக்க இருப்பதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது. வெற்றி வாய்ப்பு என்னவோ திமுக அல்லது அதிமுக கூட்டணிக்கு தான் என்றாலும், அதிமுகவின் மிகப் பெரிய பலவீனமாக இருப்பது அமுமுக.. அக்கட்சி ஓட்டுகளை நிஜமாகவே அதிக அளவில் பிரித்துவிடுமாயின். வெற்றி வாய்ப்பு காங்கிரஸ் வேட்பாளர் ஆருணுக்கே சாதகமாக அமையும். 

கடைசி நேரத்தில் ஏதேனும் உணர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தால் மட்டுமே மாற்றம் இருக்கலாம். மற்றபடி காங்கிரஸின் கை தற்போதைக்கு ஓங்கியிருக்கும் தொகுதி!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close