நாற்பதும் நமதே ; நாடும் நமதே: தமிழில் பேசி அசத்திய மோடி!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 11:17 pm
pm-modi-election-campaign-at-kovai

நடுத்தர மக்களை வஞ்சிப்பது காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல எனக் கூறிய பிரதமர் மோடி, நாற்பதும் நமதே, நாடும் நமதே எனவும் தமிழில் பேசி அசத்தினார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், கோவை, கொடிசியா மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மருதமலை முருகனுக்கு அரோகரா...வணக்கம் சகோதர, சகோதரிகளே என்று, தமது உரையை தொடங்கிய பிரதமர் மோடி தொடர்ந்து  பேசியது: 

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணங்கள்  நம்மை வழிநடத்தும் என நினைக்கிறேன். 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது. அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சியினர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிலையான ஆட்சி அமைய வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்புகிறது.

1998 -இல் கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது  திமுகவும், காங்கிரசும் மோசமாக செயல்பட்டன. தற்போது, பயங்கரவாதிகள் மீது துல்லிய தாக்குதல் நடந்ததா? விமானப்படை தாக்குதல் நடத்தியதா?  என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். எதிர்க்கட்சிகளின் எண்ணங்கள்  நாட்டை காக்க உதவாது. பிரதமர் மோடி ஏன் தேசியத்தை பற்றி பேசுகிறார் எனவும் அவர்கள் கேட்கின்றனர். இதற்கு தேசியவாதிகளாக இருந்தோம், தேசியவாதிகளாக இருக்கிறோம், தேசியவாதிகளாக இருப்போம்’ என்பது தான் எனது பதில்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை  நாட்டிற்கு எதிராக இருப்பதற்கு அதை தயாரித்த தலைவரே சாட்சி. அறிக்கை தயாரிப்பு குழுவில் மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர் ப.சிதம்பரம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை.

அந்த அறிக்கையில் நடுத்தர மக்களை பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடவில்லை. காங்கிரசின் தேர்தல் அறிக்கை பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. காங்கிரசுக்கும், திமுகவுக்கும் வாக்களித்தால் மக்கள் மீதான வரி அதிகரிக்கும். நடுத்தர மக்களை வஞ்சிப்பது காங்கிரசுக்கு ஒன்றும் புதிதல்ல.

காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து வாக்கு வங்கி அரசியலுக்காக சபரிமலையின் புனிதத்தை பாழாக்கி வருகின்றனர். சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸின் இரட்டை வேடத்தை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

ஜெயலலிதாவை திமுகவினர் இழிவாக பேசியதை நாம் மறந்துவிட முடியுமா?  பெண்களுக்கு எதிரான கட்சிகளான திமுகவும், காங்கிரஸும் தேசத்தை எப்படி பாதுகாக்கும்? பிரித்தாளும், குடும்ப அரசியல் செய்வோருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று பொதுமக்கள் உறுதியேற்க வேண்டும். நாற்பதும் நமதே; நாடும் நமதே!  என, இறுதியாக தமிழில் பேசி, தமது உரையை பிரதமர் நிறைவு செய்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கோவை தொகுதி பாஜக வேட்பாளர்  சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close