பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் நாட்டிற்கு எதிரான தீய சக்திகள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை வைகை கரையில் நடைபெற்று வரும் வைகை பெருவிழா மாநாட்டில் கலந்து கொண்ட ஹெச். ராஜா, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவில்களில் பசு சாணத்தில் தயாரிக்கும் திருநீறையே பயன்படுத்த வேண்டும் என்றும் தற்போது, எரிக்கப்பட்ட காகித கழிவுகளையே திருநீறாக பயன்படுத்தி வருதாகவும் குறிப்பிட்டார்.
மூன்று முறை தலாக் கூறி பெண்களின் வாழ்வுரிமையை பறிப்பதை பிரதமர் மோடி அரசு தடுத்திருப்பதாகவும், இது போன்ற நல்ல செய்திகளை ஊடகங்கள் பரப்ப வேண்டும் எனவும் தெரிவித்த அவர், முத்தலாக் மசோதாவை ஆதரித்த கட்சிகள் எல்லாம் பெண் உரிமையை பேணுகிற கட்சிகள் என்றும் எதிர்த்த கட்சிகள் பெண் அடிமை தனத்தை போற்றுகின்ற கட்சிகள் எனவும் தெரிவித்தார்.
ரஜினி பாஜகவில் இணைவேன் என கூறினாரா என கேள்வி எழுப்பிய அவர், பல மாதிரியான வதந்திகள் தான் வந்துள்ளது என்றும் கருத்து வரவில்லை எனவும் குறிப்பிட்டார். பாஜகவில் இணைவதாக ரஜினி கூறாத நிலையில், அதை பற்றி பேசுவது இருவருக்கும் மரியாதையாக இருக்காது என்று கூறினார்.
என்.ஐ.ஏ மீது குற்றச்சாட்டு கூறுவது பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள் மட்டும் தான் எனவும், அவர்கள் தான் என்.ஐ.ஏ சட்டத்தை பலப்படுத்துவதை எதிர்ப்பதாகவும் குற்றம்சாட்டினார். பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள், நாட்டிற்கு எதிரான தீய சக்திகள் என்றும் என்.ஐ.ஏ சட்டத்தை பலப்படுத்துவதை எதிர்ப்பவர்கள் தேசபற்று அற்றவர்கள் எனவும் ஹெச். ராஜா கூறினார்.
newstm.in