கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் இடையில் பயங்கரவாதிகளை கையாள்வதில் மிகப் பெரிய வேறுபாடு இருந்தது. பயங்கரவாதிகளுக்கும், அவர்கள் சார்ந்த மதத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை, ஜெயலலிதா நன்கு புரிந்து வைத்திருந்தார்.
கருணாநிதியோ பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால், சிறுபான்மையினர் ஓட்டுகள் போய்விடும் என்று பயந்தார். இதனால், பயங்கர தீவிரவாதிகள் சுந்திரமாக செயல்பட்டனர். இதன் விளைவுதான், கோவை குண்டு வெடிப்பு உட்பட பல சம்பவங்கள்.
இருந்தாலும் கருணாநிதி கடைசிவரையில் தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை. ஆனால் ஜெயலலிதா இந்திய இறையான்மைக்கு எதிராக நினைத்தால் கூட, அரசியல் சட்டத்தின் அனைத்து பிரிவுகளிலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார். இவரின் நடவடிக்கையால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது.
தற்போது அவர்கள் இருவரும் இல்லை. அரசியல் வெற்றிடம் இருக்கிறது; அதை நான் நிரப்புவேன் என்று பலர் களம் இறங்கியதைப் போலவே , பயங்கரவாதிகளும், பிரிவினை வாதிகளும், இவர்களைப் போல நானும் என்று காட்டிக் கொள்பவர்களும் களத்தில் இறங்கி கூச்சல் இடத் தொடங்கி உள்ளார்கள். அவர்களில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ் இனத்திற்கு, தன்னைத் தானே மேசியாவாக அறிவித்துக் கொண்ட சீமானை கூட சில விசிலடிச்சான் குஞ்சுகள் நம்பி வலம் வருகின்றன. அவர்களை உசுப்பேற்றி விட்டே பழக்கப்பட்ட சீமான், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் "ராஜீவை கொன்றது நாங்கள் தான். அது சரி, எதிர்காலத்தில் எங்கள் பிள்ளைகள் தமிழர்களின் எதிரி ராஜீவை கொன்று ஒழித்தோம் என்று வரலாற்றை மாற்றி எழுதுவார்கள். பிரபாகரன் படத்தை பச்சை குத்திக் கொண்டு சட்டசபை, லோக்சபா ஆகியவற்றில் நுழைவார்கள்" என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
எந்த ஒரு நாட்டிலும், இது போல பேச முடியாது. அவ்வளவு ஏன் ஜெயலலிதா இருந்தால் கூட இதுபோன்றவர்கள் மவுனம் தான். இதே சீமான் ஜெயலலிதாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ, மக்கள் திசை திரும்பாமல் தடுத்துவிடுவார். அவர்கள் இல்லாததால் சீமான் சீறிப்பாய்கிறார்.
"ராஜீவ் தமிழர்களின் விரோதி, அவர் அமைதிப்படையை அனுப்பி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். அதனால் விடுதலைப் புலிகள் அவரை கொலை செய்து விட்டார்கள்" என்று சீமான் போன்றவர்கள் பேசி வருகிறார்கள்.
ஆனால் இலங்கையில் தமிழர்களின் அழிப்புக்கு காரணமான அந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர் போன்ற ஒருவரைக் கூட விடுதலைப் புலிகள் வீழ்த்தவில்லை என்பதால், அவர்களை விடவா ராஜீவ் தமிழர்களுக்கு எதிரியாக மாறிவிட்டார் என்ற கேள்வி எழுகிறது. இலங்கை ஆட்சியாளர்கள் என்ன தமிழர்களை பாலுாட்டியா வளர்த்தார்கள்.
இந்த பிரச்னைக்கு மூலகாரணமே அவர்கள் தானே, அடுத்த நாட்டு பிரதமரைக் கொள்ளும் வலிமை மிக்க அமைப்பு, தன்நாட்டில் அதையே செய்ய முடிவில்லை, அல்லது முயற்சிக்க வில்லை என்பதன் பின்னணி குறித்து சந்தேகமாக இருக்கிறது.
ராஜீவ் கொலையின் போது, லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதில் நாடுமுழுவதும் பாஜக வெற்றி பெறும் என்ற அலை பரவி இருக்கிறது. அந்த நேரத்தில், ராஜீவ் கொல்லப்படுகிறார். அதற்கு முன்பு தேர்தல் நடந்த இடங்களில் பெரும்பான்மையாக பாஜ வெற்றி பெற்றது.
அதன் பின்னர் தேர்தல் நடந்த இடங்களில் ஒன்று இரண்டில் தான் வெற்றி பெற்றது. இது தான் ராஜீவ் கொலைக்கான முதன்மைக் காரணம் என்று கூட சிலர் சொல்வார்கள். விடுதலைப்புலிகள் வெறும் அம்புதான். இதற்கு கூலி கொடுத்தவர்கள் வேறு. தமிழ் உணர்வு என்பது எல்லாம் சும்மாதான்.
ஆனால், இதன் பின்னர் தமிழர்கள் மனதில் இருந்து விடுதலைப் புலிகள் அகன்று விட்டார்கள். இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் இன்னும் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வைகோ போன்றவர்கள் போராடி வருகிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் மீறி சீமான் நாங்கள் தான் ராஜீவை கொன்றோம் என்று வெளிப்படையாக அறிக்கை விடுகிறார். அதற்கு காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டம் குறித்து கிண்டல் செய்கிறார். இதற்கும் கூட ஒரு பின்புலம் இருக்கிறது. சீமான் தமிழர்கள் மீது உள்ள பற்றால் இதை பேச வில்லை. மலேசியாவில் நடக்கும் ஒரு செயல் அவரை இப்படி பேச வைத்திருக்கிறது.
மலேசியா நாட்டில் தற்போது விடுதலைப் புலிகள் தொடர்பில் இருந்தவர்கள் கைது செய்யப்படுகிறர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு மலாக்கா, நெரிசெம்பிலான், கெடா, கோலாலம்பூர், பேராக் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும், சிலாங்கூரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மலாக்கா மாநில நிர்வாக மன்ற உறுப்பினர் சுவாமிநாதன். சிரம்பான் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோரும், சிரம்பானில் நெகிரி செம்பிலான் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
இதன் தொடச்சியாக மலேசிய நாட்டில் உள்ள பிரிவினைவாதிகளுடன் சீமான் கொண்ட தொடர்பு பற்றி அந்த நாட்டு அரசு ஆய்வு செய்து வருகிறது. சீமான் பல முறை மலேசியாவிற்கு வந்து இங்குள்ள தலைவர்களை சந்தித்தது போலீசாருக்கு தெரியும் என்று புகிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் துணை ஆணையர் அயுப் கான் கடந்த 14ம் தேதி தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டவர் என்று சந்தேகப்படும் அரசியல்வாதிகளுடன் அவர் தொடர்பு கொண்டு விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்பிக்கும் முயற்சி மேற்கொண்டார். தேவைப்பட்டால் அவருக்கு விசா வழங்குவற்கு தடைவிதிக்க கோருவோம். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறி உள்ளார்.
இந்த விசாரணையின் முடிவு விபரீதமாக இருக்கலாம் என்ற பயம் காரணமாகத்தான், சீமான் ராஜீவ் கொலை பற்றிய சிக்கல்களை அவிழ்ந்துவிட்டுள்ளார். இதன் காரணமாக தமிழக சிறையில் அவர் அடைக்கப்பட்டால், புகழும் கிடைக்கும், மலேசியா நாட்டின் நடவடிக்கையும் இருக்காது என்பது தான் அவரின் தமிழர் பாசத்திற்கு காரணம்.
இது ஒரு புறம் இருந்தாலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இது தொடர்பான விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் கல்யாணசுந்தரம், தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உருவப்படுத்துடன் கூட துண்டு அணிந்து, அவர் முகம் வெளிப்படையாக தெரியும் அளவிற்கு தன்னை அடையாளப்படுத்துகிறார்.
தடைசெய்யப்பட்ட இயகத்தலைவரின் படத்தை, வெகுஜன தொலைக்காட்சியில் காட்டி விவாதம் நடத்துவது சட்டவிரோதம் இல்லையா. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இது பற்றிய சிந்தனையே விவாதம் நடத்தியவர்களிடம் இல்லை என்கிறபோது, அவர்களும் சீமான் போன்றவர்களின் கருத்துக்கு உடன்பட்டவர்கள் தானா என்ற கேள்வியும் எழுகிறது.
எது எப்படியோ, இந்த விவகாரம் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். அதை முதல்வர் பழனிசாமி செய்ய வேண்டும். ஜெயலலிதாவிற்கு பின்னர் அதிமுக கட்சியை, ஆட்சியை வழிநடத்துவதில் தற்போது மக்கள் மத்தியில் பெயர் பெற்று வரும் முதல்வர், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர் புகழ் மங்கும்.
மேலும், எதை செய்தாலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்காது என்று எண்ணி, கோவை குண்டு வெடிப்பு போன்ற ஒரு சம்பவத்தை சிலர் முன்னெடுக்கவும், முதல்வரின் மவுனம் காரணமாக அமையலாம் . அதற்கு இடம் கொடுப்பாரா, மாட்டாரா என்பது சீமான் மீது அவர் எடுக்கும் நடவடிக்கை தான் வெளிப்படுத்தும். அது விரைவில் இருக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு.
Newstm.in