ஆட்சியைப் பிடிப்பாரா ரஜினி? பிரபல ஜோதிடர்கள் கணிப்பில் ரஜினி ஜாதகம்

  கோமதி   | Last Modified : 19 Jul, 2018 05:21 pm

இன்னும் மூன்று ஆண்டுகளில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் களம் காணப்போவதாக ரஜினி அறிவித்துவிட்டார். (இந்த சட்டப்பேரவை மூன்று ஆண்டுகள் நீடிக்குமா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. திடீரென்று தேர்தல் வந்தால் என்ன செய்வார் என்று தெரியவில்லை) 1995 பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவில் ஆரம்பித்தது அவரது அரசியல் பயணம். 1996ல் தி.மு.க-வுக்கு வாய்ஸ் கொடுத்தார். அதில் இருந்து அவர் அரசியலுக்கு இப்போ வருவார், அப்போ வருவார் என்றே கடந்தது. 21 ஆண்டுகள் முடிந்துவிட்டன அவரது அரசியல் வருகையை உறுதி செய்ய... அதற்குள்ளாக விஜயகாந்த், சரத் குமார்... ஏன் விஷால் வரைக்கும் பலரும் அரசியலுக்கு வந்துவிட்டனர். ரஜினியின் அரசியல் வருகை எப்படி இருக்கும் என்று அரசியல் ரீதியாக அலசல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ரஜினியின் ஜாதகத்தை வைத்து அவரது அரசியல் வாழ்வு எப்படி இருக்கும் என்று பிரபல ஜோதிடர், பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடரிடம் கேட்டோம். கடகடவென, ரஜினியின் ஜாதகத்தைத் தயாரித்து, கிரக நிலைகளை கணித்து பலன்களை சொல்லிவிட்டார். ரஜினி அரசியலில் ஜெயிப்பாரா என்பதைப் பற்றி பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸியர் கணித்த விவரங்கள் அப்படியே...

ஸ்ரீமான் ரஜினிகாந்த் அவர்களுடைய ஜாதகம்: 12.12.1950; 11.55 இரவு; கிருஷ்ணகிரி. ரஜினிகாந்தின் ராசிக்கட்டம்

ரஜினிகாந்தின் நவாம்ச கட்டம்

அவர் பிறந்த நக்ஷத்ரம் - திருவோணம். பிறந்த லக்னம் - சிம்ம லக்னம். ஸ்ரீமான் ரஜினிகாந்திற்கு தற்போது 67 வயது பூர்த்தியாகி இருக்கிறது. அவருக்கு தற்போது சனி திசை பூர்த்தியாகி புதன் திசை ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்குகிறது.

அவருடைய ஜாதக விபரம்: சிம்ம லக்னத்தில் பிறந்த அவருக்கு தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, கேது - சுகஸ்தானத்தில் லக்னாதிபதி சூரியன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - ரண ருண ரோகஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - லாபஸ்தானத்தில் மாந்தி என கிரக சஞ்சாரம் இருக்கிறது.

கிரகங்களுடைய இருப்பைப் பொறுத்தவரை லக்னாதிபதி சூரியன் பகை வீட்டில் அமர்ந்திருக்கிறார். லக்னத்தை குரு பார்த்தாலும் ஸ்திர லக்னத்தில் பிறந்த செவ்வாயும் பார்க்கிறார். ஷட்பலத்தை எடுத்துக் கொண்டால் சூரியன் - சந்திரன் - புதன் - சனி கிரகங்கள் மிக வலிமையாக இருக்கிறார்கள். தற்போது ஆரம்பித்திருக்கும் புதன் திசை இவருக்கு மிகப் பெரிய நல்ல மாற்றத்தைத் தர காத்திருக்கிறது. ஏனென்றால், புதன் சுக்கிரனின் சாரம் பெற்று சஞ்சரிக்கிறார்.

சாதகமா? பாதகமா? அரசியலில் வருவதற்கு மூன்று கிரகங்கள் மிக வலிமையாக இருப்பது அவசியமாகிறது. சூரியன் - செவ்வாய் - சனி ஆகிய கிரகங்கள் வலிமையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ரஜினியின் ஜாதகத்தில் சூரியன் பகை வீட்டில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் உச்சமாக இருந்தாலும் அவர் இவரது ஜாதகத்திற்கு பாதகாதிபதியாக இருக்கிறார். அதனால் எப்போதுமே ரத்தம் சம்பந்தமான உறவுகள் இவருக்கு எதிராகவே வேலை செய்வார்கள்.

மேலும் பாதகாதிபதி லக்னத்தைப் பார்ப்பதால் தன்னைச் சுற்றி பாதகம் செய்பவர்களையே வைத்திருப்பார். அடுத்ததாக சனியின் ஸ்தானம் நட்பாக இருந்தாலும் அவரின் சாரம் என்பது பகை கிரகமான சூரியனின் சாரமாக இருக்கிறது. நல்லது செய்யக்கூடிய கிரகங்களான சந்திரன் வலிமையாக இருப்பதன் மூலம் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டார்.

குருவைப் பொறுத்தவரை அவர் சப்தமஸ்தானத்தில் இருந்தாலும் அவரது சாரம் என்பது சனியின் சாரமாக இருப்பதால் அதிக தடைகள் இருக்கும். ஜோதிட விதிப்படி அஷ்டமாதிபதி லக்னத்தைப் பார்க்கக் கூடாது. அதே போல் பாதகாதிபதி வலுத்திருக்கக் கூடாது. இவரது ஜாதகத்தில் இரண்டுமே இருக்கிறது. மிகப் பெரிய பலம் என்பது இவரது ஜாதகத்தில் சூரியனுடைய நிலையும், சந்திரனுடைய நிலையும்தான், ஆனால் இது அரசியலுக்கு வலு சேர்க்காது. இப்போது அவரின் ஜாதகப்படி புதன் திசை என்பது மிக வலிமையைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. கோச்சார ரீதியாக ராசிப்படி ஏழரை சனி தொடங்கியிருக்கிறது. ராசியில் கேது இருக்கிறார். லக்ன ரீதியாக அனைத்து கிரகங்களும் வலிமையைக் கொடுக்கிறது.

முடிவாக அரசியலில் ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் வெற்றி பெற இயலாது. ஆட்சிக் கட்டிலின் தலைமைப் பீடத்தில் உட்கார்வதற்கான யோகம் என்பது அவருக்கு இல்லை. வேண்டுமானால் கௌரவ பதவி கிடைக்கலாம். வேறு யாராவது ஒருவர் ஆட்சிக் கட்டிலில் அமர உதவி செய்யலாம்' என்கிறார் ராமகிருஷ்ண ஜோஸியர்.

இது மட்டுமல்ல... இந்தியா முழுக்க பிரபலமான உடுப்பியை சேர்ந்தவர் பிரகாஷ் அம்முன்னாய என்ற ஜோதிடர் கணிப்பும் கூட இதேபோலதான் இருக்கிறது. இது குறித்து பிரகாஷ் கூறுகையில், "ரஜினிகாந்த் கிங் மேக்கராக இருக்க வேண்டுமே தவிர, கிங் நாற்காலிக்கு ஆசைப்படக்கூடாது. கட்சி தலைவராக இருந்து கொண்டு கை காட்டுபவரை முதல்வராக்க வேண்டும். அப்படி செய்தால், ரஜினிகாந்த் கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்" என்றார்.

இவை எல்லாம் ரஜினிக்கும் தெரியும்... இதற்கு தகுந்த பரிகாரங்களை அவர் செய்துவிட்டதாக சொல்கின்றனர் ரஜினி தரப்பினர். எது எப்படியோ, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் யார் வந்தாலும் அவர்களை தமிழக மக்கள் வரவேற்கத் தவறியதே இல்லை. அதனால், ரஜினி வெற்றிபெற வேண்டும், தமிழகத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம். அதற்கு அவருக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close