தமிழகமும் 'நீட்' முடிவுகளும்: சீரமைப்பா... சீரழிப்பா?

  நாச்சியாள் சுகந்தி   | Last Modified : 05 Jun, 2018 03:32 pm
social-views-on-neet-results-and-tamilnadu

நீட் தேர்வு முடிவுகள் தமிழகத்துக்கு வேதனையையும் சோதனைகளையும்தான் கொடுத்து வருகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 6-ம் தேதி வெளியாகும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே முடிவுகளை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

ஒருவேளை, நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கேள்வித்தாளில் 60-க்கும் மேலான கேள்விகளில் பிழை இருந்தது என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தால் என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கை உணர்வால், முன்கூட்டியே முடிவுகளை அறிவித்திருக்கலாம்.

தமிழக மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வை எழுதி வருகிறார்கள். 2017-ம் ஆண்டு நீட் எழுதிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில்  38.4 சதவீத மாணவர்களே வெற்றி பெற்றனர். அதில் தேசிய அளவில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. 

இந்த ஆண்டு 40 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் படித்த கீர்த்தனா என்ற மாணவி தேசிய அளவில் 12-வது இடத்தைப் பெற்றுள்ளார். இவரது பெற்றோர் இருவருமே மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் கீர்த்தனா தனியார் கோச்சிங் மையத்தில் சில லட்சங்களைக் கொடுத்து பயிற்சி பெற்றதனால் இந்த வெற்றி சாத்தியமானது என்று அவரே கூறியுள்ளார். 

தொடரும் தற்கொலைகள் 

நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து இதுவரை இரண்டு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆனால் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி, எலி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவருடைய மரணம் மிகுந்த அதிர்ச்சியை அவரது பெற்றோருக்கு மட்டும் அல்ல… சமூக நீதிக்காக போராடும் அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளது. 

பிரதீபா ப்ளஸ் டூ-வில் 1125/1200 மதிப்பெண்களையும், பத்தாம் வகுப்பில் 495/500 மதிப்பெண்களையும் வாங்கியிருந்தார். அதிக மதிப்பெண்களைப் பெற்றதால் நிச்சயம் தான் மருத்துவர் ஆகி விடலாம் என்று கனவு கண்டிருந்தார். அதன் காரணமாக, 2017-ம் நீட் தேர்வில் எழுதி 155 மதிப்பெண்களைப் பெற்றார். அந்த மதிப்பெண்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததால், பொருளாதார பிரச்னையின் காரணமாக அவர் சேரவில்லை. இந்த ஆண்டு மீண்டும் 'நீட்' எழுதி வெறும் 35 மதிப்பெண்கள் வந்ததால் மனமுடைந்து இனி தன் கனவு நனவு ஆகாது என்ற அச்சத்திலும் விரக்தியிலும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீட் குளறுபடிகள்

இந்தாண்டு தமிழகத்தில் தேர்வு நடைபெற்ற பல இடங்களில் குளறுபடி நடந்தது. மதுரையில் ஒரு தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு தமிழில் தேர்வுத்தாள் தராமல் இந்தியில் கொடுத்ததால் மாணவர்கள் சுமார் ஒரு மணிநேரம் கழித்தே தேர்வை எழுதினார்கள். அதுமட்டுமில்லாமல் பல்லாயிரம் மாணவர்களை வெகுதூரம் பயணித்து தேர்வு எழுத வைத்து அதீத மன உளைச்சலை சிபிஎஸ்இ நிறுவனம் கொடுத்தது.

இந்தக் கொடுமையெல்லாம் மேல் என்று நினைக்கும் அளவுக்கு சிரமப்பட்டு வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து பரீட்சை எழுத போன மாணவர்களுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கேள்வித்தாளில் சுமார் 60 கேள்விகளுக்கும் மேலாக தவறாக இருந்தது என்று மாணவர்கள் அதிர்ச்சியுடன் கூறினர். அவர்களில் சிலர் சிபிஎஸ்இ நிறுவனத்துக்கு கடிதம் எழுதியும் அவர்கள் அதற்கான பொறுப்பான பதிலைத் தராமல் சட்டென முடிவை அறிவித்துவிட்டார்கள். 

தற்கொலையால் இறந்த பிரதீபாவும் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார் என்பது எத்தனை வேதனை. இந்தத் தவறுகளுக்கு யார் பொறுப்பேற்று பதில் சொல்வார்கள்? மத்திய மனித வளத்துறை அமைச்சகமும், உயர் கல்வித்துறை அமைச்சகமும் கவனமாக அமைதி காத்து வருவது வெட்கக் கேடு.

குலையும் சமூக நீதி

நீட் தேர்வை எதிர்த்த அத்துனை பேரும் ஒட்டுமொத்தமாகச் சொன்ன ஒரே குற்றச்சாட்டு, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவர் ஆக முடியாது. மேல்தட்டு பிள்ளைகள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிவரும் முடிவுகள் இதனை உண்மை என்றே நிரூபித்து வருகின்றன. 

கீர்த்தனா உள்ளிட்ட பணக்கார மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவர் ஆகும் சாத்தியம் அதிகரித்து வருவது கண்கூடு. 'அதெல்லாம் பொய்' என்றுகூறிய நீட் ஆதரவு அரசியல் கட்சிகளும் ஆதரவாளர்களும் ஏழைகள் கனவு கலைந்து போவதை வேடிக்கை பார்த்துக்கொண்டே, 'இன்னும் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன' என்று எந்த மனசாட்சி உறுத்தலும் இல்லாமல் கூறுகிறார்கள். 
ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் இருவருக்கும் ஒரே கல்வியும் வாய்ப்பும் கொடுக்க வேண்டியதுதான் சமூக நீதி. அந்த சமூக நீதியை நீட் தேர்வால் குலைத்துப் போட்டு… எதை காக்க நினைக்கிறார்கள்? யாரைக் காக்க நினைக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள்?

- நாச்சியாள் சுகந்தி, தொடர்புக்கு: natchimakal@gmail.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close