மந்திரிகுமாரி, பராசக்தி... கருணாநிதியின் திரைப் பயணம்!

  Shalini   | Last Modified : 27 Jul, 2018 05:12 pm
karunanidhi-s-cinema-life

கருணாநிதியின் சாதனைகள் என புத்தகமே எழுதும் அளவுக்கு, அரசியல் தாண்டி பல சாதனைகளைப் படைத்திருக்கிறார் இந்த 94 வயது இளைஞர். அதில் முக்கியமான ஒன்று அவரது திரைப்பயணம். 

பள்ளியில் படிக்கும் போதே நாடகங்களை எழுத ஆரம்பித்த கருணாநிதி, வெள்ளித்திரையில் கால் பதித்தது ராஜகுமாரி படத்தில். இதனை ஜூபிடர் பிக்சர்ஸ் தாயாரித்திருந்தது. ஏப்ரல் 11, 1947-ல் இந்தப் படம் வெளியானது. அதாவது சுதந்திரம் கிடப்பதற்கு முன்பே தொடங்கிய இவரது திரைப்பயணம், ராமனுஜர் வரை தொடர்ந்தது. இந்த விஷயத்தில் அண்ணாவுக்கே கலைஞர் சீனியர் தான். அண்ணா சினிமாவுக்கு வந்தது 1949-ம் வருடம். ராமனுஜருக்கு கதை, வசனம் எழுதத் தொடங்கும் போது கருணாநிதிக்கு வயது 92. உடல் ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால், கடந்த ஒன்னே முக்கால் ஆண்டுகளில் இன்னும் பல விஷயங்களை செய்திருப்பார் கருணாநிதி. நம்மைப் பொறுத்தவரை அது வெறும் ஒன்னே முக்கால் ஆண்டு, ஆனால் அவருக்கு அது 21 மாதம், 638 நாட்கள். ஆம்! ஒரு நொடியைக் கூட வீணாக்காமல் செயல்படுவதை இந்தத் தலைமுறையினர் அவரைப் படித்துக் கற்றுக் கொள்ள வேண்டும். 

இவர் எழுதிய முதல் படமான ராஜகுமாரியில் கதாநாயகனாக நடித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரை ஆரசியல்வாதியாக மக்கள் ஏற்றுக் கொள்ள முதன்மையான காரணம் கலைஞரின் வசனங்கள் தான். 1948-ல் அபிமன்யூ, 1950-ல் மருத நாட்டு இளவரசி, என சினிமாவிலும் பொது வாழ்க்கையிலும் நூலிழை கூட இடைவெளி விடாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தார் கருணாநிதி. 

அதே 1950-ல் வெளியான மற்றொரு படம் தான் மந்திரி குமாரி. திராவிட இயக்க வசனங்கள் ஒவ்வொன்றும் பொறி தட்டின. டைட்டில் கார்டைப் பார்க்காமலே இந்த வசனங்களை எழுதியது கருணாநிதி தான் அனைவராலும் உணர்ந்துக் கொள்ள முடிந்தது. ராஜா ராணி கதையான இந்தப் படத்திலும் எம்.ஜி.ஆர் தான் ஹீரோ. 'ஆண்டவன், ஆச்சார அனுஷ்டானங்கள், வைதீகம்..' என்றெல்லாம் சொல்லி நாட்டு மன்னனை பொம்மையாக ஆட்டி வைக்கும் ராஜ குருவின் நரித்தனமும் அவரது மகனின் கொள்ளை அட்டூழியங்களுமே இப்படத்தின் மையக் கரு. சமூகத்தில் வேரோடிப் போயிருந்த மூட நம்பிக்கைகளை வேரறுக்க, ஜாலி கேலியான வசனங்களை எழுதினார். 

கருணாநிதி வசனம் எழுதினால், அந்தப் படம் அமோக வெற்றியுடன், அதிக லாபத்தை ஈட்டித் தரும் என்ற எண்ணம் தயாரிப்பாளர்களுக்கு எழத் தொடங்கியது. இதன் விளைவாக அவருக்கு படங்கள் குவியத் தொடங்கின. 

சினிமாவில் நுழைந்து பின் நாட்களில் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரின் வெற்றியிலும் கருணாநிதியின் பங்கும் இருக்கிறது. ஆம்! சிவாஜிக்கு பராசக்தி, எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி, மலைக்கள்ளன். 

மந்திரி குமாரிக்கு அடுத்து வெளியானது தான் 'பராசக்தி'. இந்தப் படத்தைப் பற்றி பேசாதவர்களே இருக்க முடியாது. ஆத்தீகத்தை எதிர்த்து நாத்தீகர் கருணாநிதி எழுதிய வசனங்களில் அனல் பறந்தன. உண்மையில் படம் சாதாரணமானது தான். ஆனால் அதை மாபெரும் வெற்றியடையச் செய்தது கருணாநிதியின் வசனங்கள் என்றால் அது மிகையல்ல. சுதந்திரத்தையும் தேசிய கீதத்தையும் போற்றும் படங்கள் வந்துக் கொண்டிருந்த சமயத்தில் திராவிடத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தது இந்தப் படம்.

" யார்... அம்பாளா பேசுவது?" 

"முட்டாள்... அம்பாள் என்றைக்கடா பேசியிருக்கிறாள்?" , 'கோயில் கூடாது என சொல்லவில்லை, அது கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதே என் வருத்தம்' 'ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினாள்' என ஒவ்வொரு வசனத்திலும் திராவிட தீ பற்றி எரிந்தது. 

குறிப்பாக இந்தப் படத்தில் வரும் கோர்ட் சீன் அற்புதமாக இருக்கும். இதில் தொடங்கிய சிவாஜி-கருணாநிதி காம்போ இனி நிச்சயம் தமிழ் சினிமாவில் உருவாகப் போவதில்லை. இந்த வசனத்தை பேசிக் காட்டி நடிப்பு சான்ஸ் கேட்ட பலர் இருக்கிறார்கள்.

மனோகரா, ராஜா ராணி, புதையல், புதுமை பித்தன், காஞ்சி தலைவன், பூம்புகார், இருவர் உள்ளம் என தொடர்ந்து சினிமா, அரசியல், இலக்கியம்,ம் பத்திரிக்கை பணி என கருணாநிதியின் பேனா மின்னல் வேகத்தில் முன்னேறிச் சென்றுக் கொண்டிருந்தது. பாவம் இந்த ஒன்னே முக்கால் ஆண்டாக அதற்கும் விடுமுறை கிடைத்திருக்கிறது. ஆனால் நிச்சயம் அது இப்போது தான் அழுத்தத்தில் இருக்கும். 

21 நாடகங்களை எழுதிய கருணாநிதி, 69 படங்களில் பணியாற்றியிருக்கிறார். இவற்றில் கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9. 

கருணாநிதியின் திரைப்பயணத்தையும் ஒரு கட்டுரையில் கவர் செய்து விட முடியாது. அந்தக் காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் திரைப் பிரபலமாக அவர் இருந்தார். அதாவது படத்தின் ஹீரோவை விட அதிக தொகையை ஊதியமாகப் பெற்றார். 1969-ல் அவர் முதன் முறையாக முதலமைச்சர் ஆவதற்கு முன்பே 25 படங்களுக்கு மேல் பணியாற்றி இருந்தார்.

ஹீரோவை விட அதிக ஊதியம் பெற்ற கருணாநிதி, முதலமைச்சராவதற்கு முன்பே பணக்காரர்தான். அப்போதே கோபாலபுரம் வீட்டை வாங்கி விட்டார், கூடவே காரும். அந்த காலத்தில் அவர் லட்சங்களில் பெற்ற சம்பளம் இன்று பல கோடிகளுக்கு சமம். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை நோக்கி எரியப் படும் பந்துகள் அனைத்தையும் சிக்ஸர்களாக மாற்றும் வித்தையை அவர் நன்றாகக் கற்றிருந்தார். அரசியல், சினிமா, இலக்கியம், பத்திரிக்கை என எல்லாவற்றிலும் ஒருவர் சிறந்து விளங்க முடியுமா என்றால்? ஆம்! முடியும் அவர் பெயர் கருணாநிதி!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close