கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே!

  Shalini Chandra Sekar   | Last Modified : 31 Jul, 2018 03:30 am
kalaignar-s-kallakudi-protest

தொடக்கக் கல்வியை முடித்து விட்டு உயர்நிலை கல்விக்காக பத்து வயதில் பள்ளியில் சேர வருகிறார் கருணாநிதி. ஆனால் அந்த பிராமண ஆசிரியரோ, அவரை சேர்த்துக் கொள்ள மறுக்கிறார். நீங்கள் சேர்த்துக் கொள்ள மறுத்தால், தெப்ப குளத்தில் வீழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன், என சொன்னதோடு குளத்தில் விழவும் முனைகிறார். ஆம்! அங்கே அவரிண் போராட்டக் குணம் தொடங்கி விட்டது. அவரின் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்கள் பங்கு பெற்றிருந்தாலும், கல்லக்குடி போராட்டம் மிக முக்கியமானது. 

தி.மு.க-வின் தொடக்கக் காலம் அது. வடக்கை எதிர்த்து தெற்கான தமிழகத்தில் நிறையப் போராட்டங்கள் சூடு பிடித்தன. 1953-ஜூலையில் மும்முனை போராட்டத்தை அறிவித்தது தி.மு.க. அப்போதைய முதலமைச்சர் ராஜாஜியின் குலக்கல்வியை எதிர்த்து ஈ.வி.கே சம்பத் சாலை மறியல், அரியலூர் அருகே வட இந்தியரால் தொடங்கப் பட்ட  சிமென்ட் நிறுவனம், அந்த பகுதிக்கு டால்மியாபுரம் என பெயர் வைத்திருந்தது, அதை அழித்து விட்டு கல்லக்குடி எனப் பெயர் சூட்டுவது, தி.மு.க-வின் செயல்பாடுகளை 'நான்சென்ஸ்' எனக் குறிப்பிட்ட அப்போதைய பிரதமர் நேருவை கண்டித்து, ரயில் போராட்டம் ஆகிய மூன்றையும் முன்னிலைப் படுத்தி, மும்முனைப் போராட்டத்தை முன்னெடுத்தது தி.மு.க

இதில் கல்லக்குடி போராட்டம் தன் வாழ்க்கையில் இவ்வளவு முக்கியமானதாக இருக்கும் என அப்போது கருணாநிதிக்கு தெரியாது. திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதியில் சுண்ணாம்புக் கற்கள் ஏராளமாகப் புதைந்து கிடந்தது. சிமெண்ட் உற்பத்திக்கு  அது மிகவும் ஏற்ற இடமாக இருப்பதை 1930-களிலேயே கண்டறிந்த  டால்மியா நிறுவனம், அரியலூரிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் தனது தொழிற்சாலையை நாற்பதுகளின் தொடக்கத்தில் நிறுவியது. அதோடு அந்த இடத்திற்கு டால்மியாபுரம் எனவும் பெயர் வைக்கப் பட்டிருந்தது. அந்த வடநாட்டுக்காரர் தமிழ்நாட்டில் இருக்கும் இடத்திற்கு பெயர் வைப்பதா, எனக் கொதித்தெழுந்த தி.மு.க கல்லக்குடி போராட்டத்தை முன்னெடுத்தது. 

ஆனால் எந்த வன்முறையும் இல்லாமல், ரயில் நிலையத்தில் பொறிக்கப் பட்டிருந்த டால்மியாபுரம் எனும் பெயரை அழித்துவிட்டு, கல்லக்குடி என அச்சடிக்கப் பட்ட தாளை அதில் ஒட்ட வேண்டும் என்பது தான் போராட்டத்தின் செயல் வடிவமாக இருந்தது. ஒருவேளை ஒட்ட விடாமல் தடுத்தால், தடையை மீறி கைதாகி சிறை செல்ல வேண்டும்.  அப்போது தினமும் அந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில் காலை 9.50-க்கு வருகிறது. யாரும் எதிர்ப்பாக்காத நிலையில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துக் கொள்கிறார் கலைஞர். டால்மியாபுரத்திற்கு கல்லக்குடி எனப் பெயர் மாற்றாவிட்டால், ரயிலை விட மாட்டோம் என உறுதியாக இருக்கிறார்கள் கருணாநிதியும், அவருடன் தண்டவாளத்தில் படுத்துக் கொண்ட தி.மு.க-வினரும்.

உங்கள் கோரிக்கையை ரயில்வே துறைக்கு கடிதமாக எழுதுங்கள் என எவ்வளவோ சமாதானம் செய்ய முயல்கிறார்கள் அதிகாரிகள், ஆனால் எதிலும் பின் வாங்கவில்லை கருணாநிதி. பிறகு ரயிலை இயக்கச் சொல்கிறார்கள் அதிகாரிகள், பயந்து போய் எழுந்து விடுவார்கள் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் எதற்கும் அசையவில்லை கருணாநிதி. பதிலாக சில அடி தூரத்தில் ரயில் தான் பயந்து நின்றது. வேறு வழியின்றி கருணாநிதியையும், அவருடன் தண்டவாளத்தில் தலை வைத்தவர்களும் கைதாகிறார்கள். ஆனால் கொஞ்ச நேரத்தில் மதியம் 1.30 மணிக்கு கவிஞர் கண்ணதாசனின் தலைமையில் போராட்டம் தொடர்கிறது. பின்னர் அது பொது மக்கள் போராட்டமாக மாறுகிறது. நேரமாக நேரமாக போராட்டம் தீவிரம் அடைகிறது. காவல்துறையால் அதனை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அரியலூரில் கருணாநிதி தொடங்கிய அந்தப் போராட்டம் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருவண்ணாமலை, சிதம்பரம் என தீ போல் பரவுகிறது. தமிழகம் முழுக்க ஒரே நாளில் 5000 பேர் கைது செய்யப் படுகிறார்கள். கருணாநிதிக்கும் அவருடன் தண்டவாளத்தில் தலை வைத்தவர்களுக்கும் 6 மாத கடுங்காவல் தண்டனைக் கிடைக்கிறது. இந்த கொள்கையும் பற்றும் கருணாநிதிக்கு கட்சியிலும், பொதுமக்களிடத்திலும் நற்பெயரைப் பெற்று தருகிறது. ஒருவேளை ரயில் உங்கள் மீது பாய்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என கேட்டத்தற்கு, 'என் கழுத்தில் வழியும் ரத்தத்தை எடுத்து கல்லக்குடி என பெயர்பலகையில் அண்ணா எழுதியிருப்பார்' என கருணாநிதியிடமிருந்து பதில் வந்தது.   

இதோ இந்த நிமிடம் வரை இயற்கையிடம் போராடிக் கொண்டிருக்கிறார். அவர் முன்னெடுத்த எந்த போராட்டங்களும் தோல்வியை தழுவியதில்லை, அப்படி இந்த போராட்டத்திலும் அவர் வெற்றி பெற்று மீண்டு(ம்) வர வேண்டும் என்பதே அவரது உடன்பிறப்புகளின் விருப்பம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close