தி.மு.க - பா.ஜ.க கூட்டணி காலத்தின் கட்டாயம்!

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2018 03:52 pm
an-alliance-of-dmk-and-bjp-is-inevitable

மக்களவை தேர்தலுக்கான ‘கவுன்ட் டவுன்’ தொடங்கிவிட்டது என்றே கூறவேண்டும். காங்கிரசும் பா.ஜ.க-வும் பொது அரங்குகளில் கடந்த சில நாட்களாக – தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ஆக்ரோஷமாய் மோதிக்கொள்வது தேர்தல் நெருங்குவதையே உணர்த்துகிறது. 

கூட்டணியைக் கட்டமைக்கும் பணிகளை இரு கட்சிகளுமே தொடங்கிவிட்டன. இந்தத் தேர்தலில் பா.ஜ.க நிலை சிக்கல் என்பது நிதர்சனம். கடந்த தேர்தலில் நாடு முழுவதிலும் சுழன்றடித்த மோடி அலையை மட்டும் நம்பியிருக்க முடியாது. பண மதிப்பிழப்பும், ஜி.எஸ்.டி என நாட்டை முன்னேற்றும் நடவடிக்கையின் பலனை ஒரே நாளில் எதிர்பார்க்க முடியாது. அது பற்றிய எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள் பா.ஜ.க ஓட்டு வாங்கியை பலமாகச் சிதைத்திருப்பது நிஜம். 2009-ல் பா.ஜ.க.வுடன் இருந்த கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாய் கழன்று கொண்டுவிட்டன. மிக நம்பிக்குரிய கூட்டணி கட்சியாக இருந்த தெலுங்கு தேசத்தைப் பா.ஜ.க இழந்துவிட்டது. சிவ சேனா தனித்துப் போட்டி என்ற மனநிலையில் உள்ளது. எனவே புதிய கூட்டணியை உருவாக்கித் தேர்தலை எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு அந்தக் கட்சி தள்ளப்பட்டுள்ளது. 

தேசிய அளவில் யார் யாருடன்? என்பது குழப்ப நிலையில் இருக்க - புதிய கூட்டணியை தெற்கே இருந்து ஆரம்பிக்கும் உத்தேசத்தில் உள்ளது பா.ஜ.க மேலிடம். தெற்கே என்று நாம் குறிப்பிடுவது தமிழகத்தைத் தான். இங்கே - கடந்த தேர்தலில் உறவு வைத்திருந்த பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க போன்ற கட்சிகள் மீண்டும் பா.ஜ.க-வுடன் கை கோக்க தயாராக இல்லை. கூட்டணிக்குத் தயாராக இருக்கும் அ.தி.மு.க-வுடன் உறவு வைக்கப் பா.ஜ.க-வுக்கு ஆர்வம் கிடையாது. அ.தி.மு.க-வின் அடிமட்ட தொண்டர்கள் டி.டி.வி.தினகரன் பக்கம் இருப்பதால், அ.தி.மு.க கூட்டணி தங்களை கரை சேர்க்காது என்பதை பா.ஜ.க மேலிடம் உணராமல் இல்லை. 

இப்போது தமிழகத்தில் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக இருக்கும் ஒரே கட்சி தி.மு.க மட்டுமே. தலைப்பில் சொன்னது போல் தி.மு.க - பா.ஜ.க கூட்டணி காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. இந்தக் கூட்டணி யாருக்குக் கட்டாயம் என்று கேள்வி எழலாம். இதற்கான பதில் இருவருக்குமே என்பதுதான். 

ஏன்? 

பா.ஜ.க-வின் நிலை பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம்... தி.மு.க விவகாரத்துக்கு வருவோம். தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை உயிர்ப்பிக்கச் செய்வதும், நீர்த்துப் போகச் செய்வதும் மோடியின் கைகளில் இருப்பது நிதர்சனம். எனவே பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டவே தி.மு.க விரும்புகிறது. இந்த நெருக்கத்தைப் பகிரங்கப்படுத்தும் நோக்கிலேயே வருகிற 30ம் தேதி சென்னையில் நடைபெறும் கருணாநிதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க அமித் ஷா அழைக்கப்பட்டுள்ளார். 

அவர் பெயரைப் போட்டு அழைப்பிதழும் தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் சில கட்சிகள் இதைப் பிரச்னையாக்கி வருகின்றன. 

பா.ஜ.க-வுடன் தி.மு.க நெருக்கம் காட்டுவதைக் காங்கிரஸ் விரும்பவில்லை. இதனால் தான் இந்த அஞ்சலி கூட்டத்தை ராகுல்காந்தி புறக்கணித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. பா.ஜ.க - தி.மு.க கூட்டணிக்கான அச்சாரமே இந்த அஞ்சலி நிகழ்வு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். 

- பா.பாரதி

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close