நீட்டால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழக மாணவர்கள்

  Shalini Chandra Sekar   | Last Modified : 01 Sep, 2018 06:24 am
no-extra-marks-for-neet-students-sc

மாணவி அனிதா என்ற பெயரை தமிழகம் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அனிதாவின் தந்தை திருச்சி மார்க்கெட்டில் மூட்டைத் தூக்குபவர். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் அதிக முயற்சியுடன் படித்த அனிதா 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். இத்தனை ஏழ்மையிலும் அவர் எவ்வளவு சிரத்தையுடன் படித்திருப்பார் என்பது இதில் தெரியும். எந்த சொகுசு வாழ்க்கையும் இல்லாமல், லட்சியம் ஒன்றையே மூச்சாகக் கொண்டு படித்தவரின் மருத்துவர் கனவுக்கு தடைப் போட்டது நீட் எனும் எமன். 

அதுவரை தமிழகத்தில் எத்தனைப் பேருக்கு, இந்த நீட் பற்றித் தெரியும் என்பதை கை விட்டு எண்ணிவிடலாம். இந்தியா முழுக்க ஒரே கல்வி என்ற கருத்தை சொல்லி, நீட் தேர்வை தமிழகத்துக்கு அறிமுகப் படுத்தியது மத்திய அரசு. ஆனால் இங்கு அனைவரின் பொருளாதார நிலையும் சமமானதா என்றால் அதற்கு அவர்களிடம் பதிலில்லை. இன்னும் எத்தனையோ கிராமங்களில் பள்ளி இறுதி வரை படிக்கக் கூட வசதியில்லாத நிலை இன்றும் இருக்கிறது. பள்ளிக்குப் போவதற்குப் பதில் வறுமையைக் கருத்தில் கொண்டு, 13, 14 வயதில் கடைகளில் வேலை செய்பவர்கள் இங்கு ஏராளம். பொருளாதார நிலை இப்படி இருக்கும் போது பல லட்சம் செலவு செய்து, சாமானியனின் பிள்ளை எப்படி நீட் தேர்வுக்கு தயாராவது? 

பாதிக்கப் பட்டவர்களில் ஒருவராக இந்தத் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அனிதா. நீட் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சின்லிங் நடக்க, மனமுடைந்த அனிதா வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது நடந்து இன்றுடன் சரியாக ஒருவருடம் ஆகிறது. ஆம், கடந்தாண்டு செப்டம்பர் 1-ம் தேதி தான் நீட்டால் உயிரிழந்தார் அனிதா. 

"அடுத்த வருடம் எழுதலாமே, தைரியம் இல்லையா, கோழைத்தனமா" என்றெல்லாம் அனிதாவின் மரணத்தில் கேள்வியை எழுப்பினார்கள் அறிவாளிகள். வறுமையின் பிடியில் தனது ஒவ்வொரு நாளையும் யுகங்களாகக் கடக்கும் ஏழை மாணவிக்குத் தான் தெரியும் அதன் வலி. இறந்துப் போன அம்மாவின் கனவு, அப்பாவின் லட்சியம், அண்ணன்களின் விருப்பம் என ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கை தன்னால் கெட்டுவிட்டதே என்ற குற்றவுணர்வு. இப்படி பல விஷயங்கள் அனிதாவை மனது ரீதியாகப் பாதிக்க, அந்த அழுத்தத்தில் இப்படியொரு முடிவை எடுத்து, தனக்கும் தனது மருத்துவ கனவுக்கும் முடிவுரை எழுதிக் கொண்டார் அனிதா. 

தொடர்ந்து நீட்டுக்கு எதிராக எத்தனையோ போராட்டங்கள் தமிழகத்தில் நடந்தப் போதிலும் தங்களது கொள்கையிலிருந்து சற்றும் பின் வாங்கவில்லை மத்திய அரசு. இந்தாண்டு நடந்த நீட் தேர்விலும் ஏகப் பட்ட குளறுபடிகள். மருத்துவராக வேண்டும் என்றால் நீட்டை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் என தயாரான பிள்ளைகளை ராஜஸ்தானுக்கும், கேரளாவுக்கும் அலைக்கழித்து தமிழக மாணவர்களைப் பழி வாங்கியது மத்திய அரசு. 

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மருத்துவ கல்லூரிகளும், படிப்பதற்கேற்ற வசதிகளும் அதிகம். ஆனால் சொந்த மாணவர்களை படிக்க விடாமல், ஏதோ ஒன்றை மனதில் வைத்து பழிவாங்கியது அரசு. நோயாளிகளின் பிரச்னைகளை வாஞ்சையுடன் புரிந்துக் கொண்டு, சிகிச்சை தரும் இன்றைய பல பிரபல மருத்துவர்கள் கிராமப் பின்னணியில் படித்து வளர்ந்தவர்கள் தான். நம்மில் ஒருவர் மருத்துவராக பட்சத்தில் மருத்துவர் - நோயாளி என்ற உறவைத் தாண்டி மனதுக்கு நெருக்கமாக முடிகிறது. 

இப்படியொரு உணர்வை பஞ்சாபிலிருந்து வந்த மருத்துவரோ, கொல்கத்தாவிலிருந்த மருத்துவரோ நமக்குத் தர முடியாது. இதுக்கும் சிகிச்சைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? நம்மில் ஒருவராக இருந்தவருக்குத் தானே நமது மொழியைப் புரிந்துக் கொண்டு நோயை கண்டறிய முடியும். வேற்று மாநிலத்தில் இருந்து வரும் மருத்துவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கலாம், ஆனால் தமிழக சாமானியனுக்கு? இப்படி பல விஷயங்கள் இந்த நீட் தேர்வில் இருக்கின்றன. 

சரி இந்த வருட விஷயத்துக்கு வருவோம். தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தவறான மொழிப்பெயர்ப்புடன் கேள்வித்தாள் கொடுக்கப் பட்டிருந்தது. மொத்தம் 49 கேள்விகள் அப்படித் தவறாகக் கேட்கப் பட்டிருந்ததால், கேள்விக்கு 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கருணை அடிப்படையில் வழங்க வேண்டும் என மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதோடு ஜூலை 10-ம் தேதி இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனுவும் தாக்கல் செய்திருந்தார்.  

சமீபத்தில் வெளியான இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதில் நீட் வினாத்தாள் குளறுபடியால் தமிழ்க மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் 196 மதிப்பெண்கள் வழங்க முடியாது எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்சநீதி மன்றம். நீட் விஷயத்தில் நியாயமான விஷயங்களுக்குக் கூட தமிழகத்திற்கு அநீதி இழைக்கப் படுகிறது. 

உணவிருந்தும் சாப்பிட முடியாதது போல, மருத்துவம் படிக்க அத்தனை வசதிகள் இருந்தும், அது சொந்த மாணவர்களுக்கு பயனில்லை என்பது தான் கொடுமை.  
 
ஒரு மொழி கொள்கையை நோக்கிப் போகும் மத்திய அரசின் விலக்கு இந்தியா முழுவதும் இந்தியை கட்டாய மொழியாக்க முற்படுவது இதில் தெளிவாகிறது. நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கையை செயல்படுத்த முயற்சிக்கும் இவர்கள் சி.பி.எஸ்.சி-யில் அனைவரையும் படிக்க சொல்கிறார்கள். மூட்டை தூக்கும் அப்பா, வீட்டு வேலை செய்யும் அம்மா என நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் உள்ளவர்களால் எப்படி அது சாத்தியமாகும். அதை விடக் கொடுமை, பிள்ளைக்கு சீட் கொடுப்பதற்கு பெற்றோர்கள் நேர்க்காணலில் தேர்வாக வேண்டும். கை நாட்டு வைக்கும் பெற்றோர்கள் எப்படி இதில் கலந்துக் கொள்வார்கள். அப்படியெனில் பணக்கார மட்டத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் படிக்க முடியும். இல்லை இலவசமாக அனைவரையும் சி.பி.எஸ்.சி-யில் சேர்த்துக் கொள்ளத் தயாரா என்பதைப் பற்றி மத்திய அரசு தான் விளக்கம் தர வேண்டும். மாடு மேய்ப்பவனின் பிள்ளை மருத்துவராகக் கூடாது என்பது தானே உங்களின் எண்ணம்?  

இல்லை கட்டாயம் நீட் தான் என்றால், அதற்கான பயிற்சி வகுப்புகளையாவது தரமாகத் தர முன் வாருங்கள். 
www.newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close