ஆட்சி எவ்வளவு நாளோ... பதுக்கும் ஓ.பி.எஸ் - தர்மயுத்தத்துக்கு ஆதரவு தந்தவர்கள் அதிர்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 08 Sep, 2018 11:55 pm
is-ops-didn-t-consider-his-supporters

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி ஓ.பி.எஸ் ‘தர்மயுத்தம் தொடங்கியபோது பெரும்பாலான அடிமட்ட தொண்டர்கள் அவரது பக்கம் நின்றார்கள். ஜெயலலிதா இருந்தபோதே சசிகலாவால் ஓரம்  கட்டப்பட்ட முக்கிய புள்ளிகளும் ஓபிஎஸ்சுக்கு துணை நின்றனர். அவர்களில் மாஃபா.பாண்டியராஜன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, சண்முகநாதன், செம்மலை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களில் கடைசி நான்கு பேர் ஜெயலலிதா அமைச்சரவையில் பல்வேறு கட்டங்களில் அமைச்சர்களாக இருந்தவர்கள்.  மாஃபா.பாண்டியராஜனோ ஓ.பி.எஸ் அணியில் இணைந்ததன் மூலம் தன்னுடைய அமைச்சர் பதவியை இழந்தார். சசிகலா சிறை சென்ற பிறகு, இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் திகார் சிறை சென்ற பிறகு இரண்டாக பிளவுபட்டு இருந்த அ.தி.மு.க இணைந்தது. 

பலவித நிபந்தனைகளை விதித்து மீண்டும் ,எடப்பாடியுடன் கைகோர்த்தார் ஓபிஎஸ்.இதனால்  இரட்டை இலை சின்னம் கிடைத்தது. கட்சி பெயர் அவர்கள் அணிக்கே வந்தது. ஆனால், ஒ.பி.எஸ் விதித்த நிபந்தனைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றவர், எந்தவித அதிகாரமும் இல்லாத ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை என்றதும் அடங்கிவிட்டார். தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பதவிகள் வேண்டும் என்றார்... ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்த மாஃபா.பாண்டியராஜனுக்கு எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் மட்டுமே உப்பு சப்பில்லாத அமைச்சர் பதவி கிடைத்தது.

இணைப்புக்கு முன்னர் பேசிய படி சண்முகநாதன் மற்றும் செம்மலைக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. நத்தம் விசுவநாதனுக்கு கட்சி பொறுப்பு கொடுக்கப்படவில்லை.

கே.பி. முனுசாமிக்கு மட்டும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் எதிர்ப்பார்ப்பது கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பதவி. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கே கட்சியில் முக்கியத்துவம் இல்லாத நிலையில், துணை ஒருங்கிணைப்பாளரை யார் மதிக்கப்போகிறார்கள் என்பது அவர் வேதனை.

 கட்சியில் இணைந்த  ஆரம்ப நாட்களில் ஒ.பி.எஸ் தான் ஏற்கனவே விதித்த நிபந்தனைகளை எடுத்துக் கூறி தனது ஆதரவாளர்களுக்கு பதவி கொடுக்க வலியுறுத்தினார். கட்சியின் அவைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பன்னீர் வசம் இருந்தும் அவரால் பதவிகளை பெற்றுத்தர முடியவில்லை. அம்மா நியமித்தவர்களே இருக்கட்டும் என சொல்லி  நாளை கடத்திய எடப்பாடி இப்போது, அந்த கோரிக்கைகளை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டார்.

அதேநேரத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தும் கட்சியில் தொண்டர்கள் ஆதரவு இல்லாமல் சோர்ந்து போயிருந்தார் எடப்பாடி பழனிசாமி. தற்போது என்ன மாயம் நிகழ்ந்ததோ ஜெயலலிதா போலவே தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் என்ற கனவில் எடப்பாடி பழனிசாமி மிதப்பதாக சிரிக்கின்றனர் அ.தி.மு.க ரத்தத்தின் ரத்தங்கள்.

முதலமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை, நம்பி வந்தவர்களுக்கு பதவியும் பெற்றுத்தர முடியவில்லை, தொண்டர்களின் ஆதரவும் போய்விட்ட சூழலில் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இப்போது தனது ஆதரவாளர்களை கண்டுகொள்ளாமல் தான் மட்டும் ‘சேப்டி’யாக இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டாராம். இவரைப் போய் நம்பினோமே என்று சண்முகநாதன், செம்மலை, கேபி முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகிய நால்வரும் ஓ.பி.எஸ் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளார்களாம்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் பதவி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு, மேற்கண்ட 4 பேரும் கூட்டாக ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கப்போவதாக தனது ஆதவாளர்களிடம் தெரிவித்துவருகின்றனர்களாம். 

எடப்பாடி பழனிச்சாமி தலைக்கு மேல் கத்தி தொங்குவது நிதர்சனம்.   

- பா.பாரதி

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close