வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை!

  Dr.தர்மசேனன்   | Last Modified : 22 Oct, 2018 08:57 pm
one-more-allegation-on-vairamuthu-today

வைரமுத்துவின் மீது பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் புகார் கூறியுள்ள நிலையில் (சரியாக சொன்னால் இதுவரை 12 பேர்), தற்போது புவனா சேஷன் என்ற மேடை பாடகியும் தன் பங்கிற்கு, அவரை வெளுத்து வாங்கியுள்ளார். அவர் தன்பேஃஸ்புக் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்ததை வாசகர்களுக்காக மொழி பெயர்த்துள்ளோம்.

---

பொறுப்புத் துறப்பு:

1. நான் இங்கு எல்லா ஆண்களையும் பற்றி குறிப்பிடவில்லை, எனக்கு சில அருமையான ஆண் நண்பர்கள் உள்ளனர்

2. குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கு எதிராகவும் இவ்வாறான குற்றங்கள் நடைபெறுவதை அறிவேன். அனைவருக்கும் எனது ஆதரவு உண்டு. (என் ஆதரவு) பாலினம் சார்ந்ததல்ல

3. என்னுடைய நண்பர்கள் யாருக்கேனும் இந்த அறிவிப்பு மலிவாக அல்லது வெட்கங் கெட்டதாகத் தோன்றினால், தயவுசெய்து என்னை (பேஃஸ்புக்), அவர்களது நண்பர்கள் பட்டியலில் இருந்து விலக்கி விடவும். நான் உங்கள் கருத்தை மதிக்கிறேன், ஆனால் நீங்கள் என்னை மதிக்க வேண்டும்

4. இதற்கு (புகாருக்கு) சாதி அல்லது மத வர்ணம் பூச வேண்டாம். நான் புவனா, ஓர் பெண்ணாக பேசுகிறேன்

எனது 16 வயது மகன் அத்வைதுக்கு நன்றி, அவரே என்னை வெட்கமின்றி உண்மையை பேச தைரியமூட்டி உடன் இருக்கிறார்.

இந்த விஷயத்தை வெளிப்படுத்தி அதன் மூலம் என்னை ஊக்கப்படுத்திய சின்மயிக்கு என் நன்றி.

என் தனிப்பட்ட வாழ்க்கையும் குணமும் படுகொலை செய்யப்படும் என தெரியும், ஆனால் உங்களுக்கு வேறுவேலை இல்லை என்றால் என் மீது அவதூறு பரப்பி இன்பம் கொள்க. ஆனால் உங்கள் நடத்தை என்னை வேதனை கொள்ளச் செய்யும்.

__

எனக்கு(ம்) வைரமுத்துவுடன் ஓர் மோசமான அனுபவம் உண்டு. 20 வருடங்களுக்கு முன் நடந்ததன் வலியை மனதில் சுமந்து திரிகிறேன், ஒவ்வொரு முறையும் வைரமுத்துவின் அருவெறுப்பான முகத்தை தொலைக்காட்சியில் பார்க்கும்போதும் நடுங்குகிறேன்.

நான் அப்பொழுதே ஏன் சொல்லவில்லை? பயம் தான் காரணம், ஆனால் எனக்கு பக்க பலமாயிருக்கும் நெருக்கமான நண்பர்களுக்கு இதை தெரிவித்தேன். கடந்த காலங்களில் மக்களின் மனப்பான்மை இப்போதிருப்பதைவிட குறுகியே இருந்தது.

இப்போது ஏன்? (இதைச் சொல்கிறேன்)

இதை கூறியதற்காக சின்மயி எப்படி தரக்குறைவாக விமர்சிக்கப் பட்டார் என்பதையும் நான் பார்த்தேன். மற்றவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை அல்லது முடிவுகளில் எனக்கு அக்கறையில்லை. ஆனால் இப்படிப்பட்ட வலி எவருக்காவது ஏற்பட்டிருந்தால் நாம் அவருக்குத் துணையாக இருக்க வேண்டும். என் மகன் என்னைப் பற்றி தவறான விமர்சனங்களை பார்க்க நேரிடுமே என யோசித்தேன், ஆனால் அவர்தான் என்னை இதைப்பற்றி பேச ஊக்கப்படுத்தினார் என்பதில் பெருமை கொள்கிறேன்.

வைரமுத்துவும் திருச்சி சாரதாஸும்

சாரதாவின் (திருச்சி ஜவுளி நிறுவனம்) மேல் எனக்கு எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. நான் பெயரை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் சாரதாஸின் விளம்பரத்திற்காகத்தான் நான், வைரமுத்துவை சந்திக்க நேர்ந்தது. ரங்கராஜபுரம் ஜாய் ஸ்டுடியோவில் (நிறுவனம் மூடப்பட்டு விட்டது, ஆவணப்படுத்துவதற்காக குறிப்பிடுகிறேன்) தான் 'ரெக்கார்டிங்'. வைரமுத்துவே பாட்டெழுதி விளம்பரத்தையும் தயாரித்தார். என் குரலும் தமிழ்ப் புலமையும் அவரை 'இம்ப்ரெஸ்' செய்ததாக கூறினார்.

(பின்னர்) என் தொலைபேசி என்னை வாங்கிக் கொண்டு அவரது (டிரஸ்ட்புறம்) அலுவலகத்தில் வந்து சந்திக்கச் சொன்னார். (அங்கே சென்று) நான் அவருக்கு பாட்டை பாடிக் காண்பித்தேன். அதன் பின்னர் அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சுவாரசியமான பேச்சுகள். பாரதி, தி. ஜானகிராமன், சிவாஜி கணேசன், எம்.எஸ்.வி, இளையராஜா என பேச்சு தொடர்ந்தது. மெல்ல பன்மை(சொற்கள்) ஒருமை ஆனது. நான் ஆட்சேபிக்கவில்லை. ஒரு நாள் நான் நல்ல பாடகி மட்டுமல்ல ஒரு புத்திசாலியான பெண் என்று கூறினார். "ஒரு அறிவுபூர்வமான பெண்ணை நான் தேடிக் கொண்டிருந்தேன், என் தேடல் உன்னில் முடிவடைந்துவிடுமோ!". என்றார் . அதைக் கேட்டதும் எனக்கு சற்றே சங்கோஜமாக இருந்தது. "உன் கண்கள் என்ன கூர்வாளா? என் கவிதை துண்டு துண்டாகி உன் காலில் கிடக்கிறதே" (என்றார்).

சங்கடமாய் இருப்பதாக கூறினேன். மறுநாள் மீண்டும் அழைத்தார், மலேஷியா செல்வதாக கூறி, நானும் வருகிறேனா எனக் கேட்டார். "பாடவா அல்லது நிகழ்ச்சியை நடத்தித் தரவா?" எனக் கேட்டேன். இரண்டும் இல்லை என்றார்.

(அவர் சொல்வது) புரிந்தாலும் புரியாத மாதிரியே அவரிடம் பேசினேன். அப்பொழுதுதான் அஸ்திரத்தை வீசினார் "இது கூட புரியலையா... நீ என்ன சின்னப் பெண்ணா... பட்டும் படாம நடந்துக்கிட்டு உன் லைஃப் செட்டில்ட்" என்றார். மரியாதையுடன் அவர் சொல்வதை நிராகரித்தேன்.

AR. ரஹ்மான் (படத்தில் பாடல்), பணம் என ஆசை வார்த்தை கூறினார். அவரை மீண்டும் அழைக்க வேண்டாம் எனக் கூறி (தொடர்பைத் துண்டித்தேன்).

ஒரு வாரம் கழித்து மீண்டும் அழைத்தார், "கடைசியா கேக்கறேன், மலேஷியா டிக்கெட் போடறேன், வரியா இல்லையா". "கடைசியா என்ன முதல்லெந்தே சொல்றேனே, நோ" என சொன்னேன். அதன் பின் மிரட்டல்கள் ஆரம்பித்தன "நீ இந்த இண்டஸ்ட்ரில இல்லாமே பண்ணிடுவேன். உனக்கு எல்லா கதவும் சாத்திடுவேன். என்இன்ஃப்ளுயென்ஸ் இந்த இண்டஸ்ட்ரில என்னன்னு தெரியுமா. உன்ன ஒன்னும் இல்லாம பண்ண முடியும்" எனக் கூறி மிரட்டினார்.

தயவு செய்து அதை செய்யுங்கள் என்றேன், அதன் பின் 3 வெளி நாடு பயணங்களும், சில 'ரெகார்டிங்' வாய்ப்புகளும்பறிபோயின. ப்ரடக்க்ஷன் மேனேஜரின் பாஷையில் சொல்ல வேண்டுமானால் "சாரிமா... மேலிடத்து பிரஷர்". ஒருவாரம் விரக்தியில் இருந்தேன் ஆனால் அதன் பின் அதை மறந்து (இயல்பு நிலைக்குத் திரும்பினேன்). ஆனால் அந்த நிகழ்ச்சியினால் நான் பின்னணி பாடும் ஆசையை துறந்தேன். மேடைப் பாடகியாகவே இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இது இந்த 'இண்டஸ்ட்ரியில்' சகஜமில்லையா? வைரமுத்து மட்டுமே இதை செய்தார் எனக் கூற முடியுமா?

ஆமாம், இந்த துறையில் இதை எதிர்கொண்ட போதெல்லாம் வாய்ப்புக்களை நிராகரித்தேன். என் வாழ்க்கையில்' அதை'க் கேட்ட பல பேரைச் சந்தித்தேன். ஆனால் நான் நிராகரித்தால் மன்னிப்பு கேட்டு விட்டு விலகிச் சென்று விடுவார்கள். அதற்காக அவர்கள் செய்தது சரி என வாதாடவில்லை...

அவர்கள் யாரும் என்னை மிரட்டவில்லை. (ஆனால்) வைரமுத்து என்னை மிரட்டியதால் நான் என் வாழ்வின் கனவையும் விட்டுக் கொடுத்தேன். நான் பின்னணி பாடுவதை நிறுத்தி விட்டு மேடை பாடகியாகவே இன்றும் தொடர்கிறேன்.

இப்பொழுது ஏன் இதைக் கூறுகிறேன் (?)

நான் தோற்றுப் போனவள் என முத்திரை குத்தப்பட்டேன். 60 வயதிலாவது திரைப்படத்தில் நான் பின்னணி பாடுவேனா(?) என்று என்னை கேலி செய்தவர்கள் ஏராளம். நான் தோற்றுப் போனவள் என அனைவரும் நினைக்கின்றனர்... தோற்றுப்போனவள் என்ற முத்திரையும், வைரமுத்துவின் வார்த்தைகளும் என் மனதை சிதைத்து விட்டது.

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், ஒற்றை ஆளாகவே என் மகனை வளர்த்தாலும் அவனை நன்றாக வளர்த்துள்ளேன் என்பதில் நான் பெருமை அடைகிறேன். என் மனதில் எழும் கேள்வி இதுதான்...

'எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தால்?' என் வாழ்நாள் முழுவதும் அவளை இது போன்ற மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவதிலியே கழிந்திருக்கும். தொல்லைக்கு பயமுறுத்தலுக்கும் ஆளாகும் மற்ற இளம் பெண்களின் கதி என்ன? அப்பாவி சின்னப் பெண்கள்... இந்த நாட்டின் மகள்களுக்காக என்னால் செய்ய முடிந்தது இதுதான். இதை பற்றி உரக்க கூற வெட்கப்படவேண்டிய நிலை தான், இந்த ஓநாய்களுக்கு (இதைச் செய்ய) தைரியமூட்டுகிறது.

எனது கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் நான் மற்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தைரியம் வந்தால், நான் சந்தோசம் அடைவேன்.

நான் இங்கே நீதி போதிக்க வரவில்லை. மற்றவர்களின் வாழ்க்கையில் எட்டிப் பார்க்கும் எண்ணம் இல்லை, இருவருக்கு இடையில் இசைவுடன் நடக்கும் அந்தரங்கங்களை பற்றி(யும்) பேசவில்லை. இங்கே கட்டாயப்படுத்திப் பெண்ணை படுக்கையில் வீழ்த்தும் பலாத்காரத்தை பற்றி த்தான் பேசுகிறேன்... படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே வாய்ப்பு என்பதை கேள்வி கேட்க விரும்புகிறேன்,

என முடிகிறது அவரது பதிப்பு.

---

சோசியல் மீடியாவில் இவ்வளவு குற்றச் சாட்டுக்கள், மேலும் செய்தியாளர்கள் சந்திப்பு என #MeToo விஷயத்தில் தொடர்ந்து பரபரப்புகள் நிலவி வரும் நிலையில், நீதிமன்றம் இதை ஒரு பொது நல வழக்காக கருதி தானாக முன் வந்து விசாரிக்குமா என்பதே இப்பொழுது பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close