வருமானவரியை ஒட்டுமொத்தமாக நீக்குகிறது மத்திய அரசு?

  Padmapriya   | Last Modified : 14 Nov, 2018 06:54 pm
125-000-retired-income-tax-officers-aged-58-61-years-have-been-recalled-by-modi

நவம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 3 நாள் பயிற்சி வகுப்புக்கு ஓய்வு பெற்ற 1,25,000 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு  மத்திய அரசு அமைதியான முறையில் ரகசிய அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது எதற்கான அழைப்பாக அமைய வாய்ப்புள்ளது என்ற யோசனை பலருக்கும் தோன்றலாம். இதற்கு, அனுபவம் வாய்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மிக முக்கிய பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய அரசுடன் நெருக்கமான தொடர்பில் உள்ள வட்டாரங்களில் நம் தரப்பு சார்பாக  மேற்கொண்ட  விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 அதற்கான தரவுகளை விபரமாகவும் வரிசைக்கிரமமாகவும் நாம் பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் முடிய நிதியாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை ஆங்கிலேயர் ஆட்சி காலமான 1867-ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. இதனை மாற்றி 2018-ம் ஆண்டிலிருந்து ஜனவரி முதல் டிசம்பர் வரையில் நிதியாண்டை கணக்கிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  

இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்ததையடுத்து நிதியாண்டை மாற்றுவதற்கு தேவையான பணிகளை மத்திய அரசு செய்து வந்தது.  அவ்வாறு நிதியாண்டு ஜனவரிக்கு மாற்றப்பட்டால், இந்த ஆண்டு நவம்பர் இறுதியிலேயே அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு வரை பிப்ரவரி மாத கடைசி வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இந்த நடைமுறையை மத்திய அரசு இந்த ஆண்டு மாற்றியது. இதன்படி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

நிதியாண்டை மாற்றுவது அவசியம் என நிதி ஆயோக் அமைப்பும் தெரிவித்துள்ளது. இப்போது நிதியாண்டு கணக்கு நடை முறையால் வேலைச் சூழலை குறைந்த அளவே பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. இந்த நிதியாண்டு நடைமுறை நாட்டின் எந்தவொரு தேசிய கலாச்சார மற்றும் பாரம்பரிய ரீதியிலான காரணமும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது என்று நிதி ஆயோக் கூறியது. எனவே இது குறித்த அறிவிப்பு டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகலாம். 

இதனை முன்னிட்டு பார்த்தால் ஜனவரி முதல் டிசம்பர் வரையில் நிதியாண்டை கணக்கிடுவதோடு, 2019 ஆம் ஆண்டு முதல் வருமான வரி வருமான வரித் தாக்கலிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கறுப்புப் பண மீட்பு நடவடிக்கையை ஒப்பிட்டு அதற்கான வியூகமாக இதனை நிதித் துறை நிபுணர்கள் பார்க்கின்றனர். இத்தகைய பணிகளுக்காகவே அனுபவம் வாய்ந்த வருமான வரித்துறை அதிகாரிகளை நியமனம் செய்ய மோடி முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இது அவரது முக்கிய வாக்குறுதியான கறுப்புப் பண மீட்பு நடவடைக்கைகளின் படிகளில் ஒன்று எனவும் இதனை நிபுணர்கள் வியூகிக்கின்றனர். 

1.  ரூ .500, ரூ .1000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்கி அதனை மதிப்பிழக்கம் செய்ததன் மூலம ரூ .14,20,000 கோடியை கணக்கிற்குள் கொண்டு வந்தது மத்திய அரசு.

2. ரூ.2000, ரூ. 500 மற்றும் ரூ. 100 நோட்டுகளை அச்சிட்டு சந்தையில் மாற்றாக அந்த நாணயங்களை புழங்கவிட்டது. 

3. ரொக்க பண பரிவர்த்தனையை தடுக்க பான் அல்லது ஆதார் எண் இல்லாமல்  ரூ. 10000 அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளமுடியாது என்ற உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாவும் நம்பகமான அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

4. சம்பளம் மற்றும் அனைத்து வணிக செலவினங்கள் அனைத்தும் பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறு நிறுவனங்களும்  காசோலை அல்லது ஆர்டிஜிஎஸ் முறைப்படியே மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் இவை அனைத்தும் வருமான வரி கணக்கீட்டில் வந்தடையும். மேலும் பெரும்பாலான ரொக்க பண பரிவர்த்தனை முற்றிலும் தவிர்க்கப்படும் என்ற உத்தரவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

5. தனிநபர்கள் அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ.50,000 மட்டுமே ரொக்கமாக கொடுக்க முடியும். 

6. இது போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து சில மாதங்களில் ரொக்க பண பரிவர்த்தனைகள் கட்டுப்படுத்தப்படும் நிலையில், புதிதாக புழக்கத்தில் விடப்பட்ட ரூ.2000 நோட்டுகள் மதிப்பிழக்கம் செய்வதற்கு அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

7. அதன்பின்னர் சந்தையில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே பணமாக நிதிப் புழக்கம் இருக்கும்.  இதன் மூலம் வரிஏய்ப்பு மற்றும் கருப்புப்பண பதுக்கல் ஆகியன முற்றிலும் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கருதுவதாகவும் தெரிய வந்துள்ளது.

8. பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியை முன்னெடுக்கும்போது, அதிலிருந்து தப்பிக்க தங்கத்தில் அபரிமிதமான முதலீடுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதனை தடுக்க, தங்கத்தின் உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படவும் வாய்ப்புல்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. 

தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகள் மீது சில நிபந்தனைகள் விதிக்கப்படலாம். நபர் ஒருவருக்கு 500 கிராம் தங்கம் மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என்ற உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்படும். மற்ற தங்க உபகரணங்களுக்கும் அளவுகோள் விதிக்கப்படும். அதிலும் பாரம்பரிய மற்றும் நடவடிக்கைக்கு முன் கையிருப்பில் இருக்கும் தங்கத்தின் மீது எந்த விதிகளும் விதிக்கப்படாது. 

குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர், கணக்கில் காட்டப்படாத அனைத்து தங்கங்களும் அரசுக்கு போய் சேரும். 

9. நிலம், கட்டடம்  மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பங்குகள் ஆகிய சொத்து வகைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளில் உடைமையாளர்கள் தாக்கல் செய்திட வேண்டும். குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பின், கணக்கில் காட்டப்படாத அனைத்து சொத்துகள் மற்றும் பங்குகள் அனைத்தும் மாநில அரசின் உடைமையாக்க வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

இதன் உச்சகட்டமாக தனிநபர் வருமான வரி விதிப்பு முற்றிலும் விலக்கிக்கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. 2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஆட்சி ஏற்படுவதற்கு சில மாதங்கள் முன்னதாகவே, நாட்டில் உள்ள பொருளாதார நிபுணர்களுடன் தற்போதைய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மேற்கொண்ட தொடர் உரையாடல்களின் முடிவை அப்போது வெளியிட்டிருந்தார்.

அதன்படி வருமான வரியை விலக்கிக்கொண்டு அதற்குப்பதிலாக வங்கி பரிவர்த்தனை ஒவ்வொன்றுக்கும் குறைந்த அளவிலான வரிவிதிப்பதன் மூலம் மத்திய அரசின் வருமான வரி விதிப்பு இழப்பை ஓரேயடியாக ஈடுகட்ட முடியும் என்ற ஆலோசனைகளும்,  அது தொடர்பான தரவுகளும் அப்போது வெளியாகின.

அந்தத் திட்டம் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய நிதியறிக்கையில் பிரதிபலிக்கும் என்றும் மத்திய ஆட்சிக்கு நெருக்கமான நிபுணர்கள் கருதுகிறார்கள். வருமான வரி நீக்கம் என்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான ஆதரவையும் மத்திய  அரசுக்கு பெற்றுத்தரும் என்று கருத்து பாஜக வட்டாரத்தில்  ஏற்கெனவே நிலவி வரும் கருத்தாக உள்ளது.

அதுமட்டுமின்றி அக்கட்சியின் எம்பியான சுப்ரமணியசுவாமி சமீபத்தில் பாஜகவின் கருத்தை வலுப்படுத்தும் விதமாக வருமான வரியை நீக்கவேண்டும் என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

இத்தகைய நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொள்வதன் மூலம் கருப்புப் பணப் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படலாம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுவே மோடியின் அரசின் அடி மேல் அடி அதிரடி நடவடிக்கைகளாக இருக்கலாம் என்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளுடன் நெருக்கமான வட்டாரங்கள் நமக்கு தெரிவித்துள்ளன.. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close