இதுவரை செய்திராத சாதனை! கஜா புயலை சிறப்பாக எதிர்கொண்ட தமிழக அரசு!

  முத்துமாரி   | Last Modified : 16 Nov, 2018 05:36 pm
tn-govt-wins-over-gaja-cyclone

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயல் நேற்று தமிழகத்தை நெருங்கிய நிலையில் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று நள்ளிரவில் தீவிர புயலாக இருந்த கஜா புயல், இன்று காலை 9.30 மணியளவில் கஜா புயல் தஞ்சாவூர் அதிராம்பட்டினத்தில் முழுமையாக கரையை கடந்த நிலையில் புயலின் வலு குறைந்துள்ளது. மேலும், இந்த புயலானது பிற்பகல் 3 மணியளவில் தமிழக எல்லையை கடந்து அரபிக்கடலை சென்றடைந்துள்ளது.

கஜா புயலினால் ஏற்பட்ட கனமழையால் தமிழகத்தில் 13,000 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மரங்கள் சரிந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சுமார் 82,000 பேர் 473 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கஜா புயலினால் 11 பேர் இறந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் இன்றே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

கஜா புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதிகமான உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கு தமிழக அரசு முன்கூட்டியே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது தான் காரணம் என மக்களிடையே பேசப்படுகிறது. 

வானிலை ஆய்வு மையம், வருவாய்த்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் நேற்று விடிய விடிய மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் முன்னதாகவே களத்திற்கு சென்று மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களில் சுமார் 82,000 பேர் கரையோரப்பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர். 

அதேபோன்று ஊடகங்களும் தொடர்ந்து நேரடியாக சென்று செய்தி சேகரித்து களப்பணியாற்றின. ஊடகங்களில் வரும் செய்திகளே வைத்தே சிறப்பான நடவடிக்கையை எடுத்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பில்லாமல் மக்கள் நிம்மதியாக உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருந்தார். அதை பேச்சாக இல்லாமல் அதிகாரிகளும், அமைச்சர்களும் இன்று செய்தும் காட்டியுள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலும் அமைச்சர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டு வருகின்றனர். 

ஏன்? தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்கட்சித் தலைவர்களே பாராட்டியுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாமகவின் ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தமிழக அரசின் நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டியுள்ளனர். 

கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து, 4 தினங்களுக்கு முன்பில் இருந்தே, எம்மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளனர். முன்னதாக வர்தா, ஒக்கி புயல் பாதிப்பை  மனதில் கொண்டு அதுபோன்ற ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது மக்கள் மத்தியில் தமிழக அரசு நன்மதிப்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் இது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. 

இதன் மூலம் வருங்காலத்தில் தமிழகம் எந்த ஒரு பேரிடரையும் எதிர்கொள்ளும் என்றே கருதப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close