தெற்காசியாவிலேயே மிக உயரமான பாலம்..நம்ம ஊரு "தொட்டிப் பாலம்" 

  இளங்கோ   | Last Modified : 21 Nov, 2018 02:20 pm
special-story-thotti-paalam-south-asia-s-highest-bridge

தொட்டி பாலமா? அது எங்க இருக்குன்னு கேக்குறீங்களா? கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் கிராமத்தில் உள்ளது தொட்டிப் பாலம். இந்த பாலம் திருவட்டாறு அருகே இருக்கிறது.  தெற்கு ஆசியாவிலேயே  மிக உயரமான பாலமாகவும் கருதப்படுகிறது. இந்த பாலம் பாரலீ நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது.     திருவட்டாறு அருகே    இருக்கும்  தொட்டிப் பாலம்  சுற்றுலாத் தலங்களை கவரும் வண்ணமாக இருக்கின்றன. பாரலீ மற்றும் கோதை என்னும் இரண்டு ஆறுகள் மூவட்டமுகம் என்னும் இடத்தில் இந்த பகுதியை சுற்றி உள்ளதால் இப்பெயர் வரக்   காரணமாக மாறிவிட்டது என சொல்லப்படுகிறது.   'திரு' என்றால் புனிதம், 'வட்டம்' என்றால் சுற்றியிருப்பது 'ஆறு' என்றால் நதி, எனவே திருவட்டாறு என்றால் புனித நதிகளால் சூழப்பட்ட இடம் என்று பொருள்.  

திருவட்டாறு அருகே உள்ள மாத்தூர் என்னும் சிறிய கிராமத்தின் பெயரை இந்த பாலத்திற்கு சூட்டி இருக்கிறார்கள்.  வறட்சியிலிருந்து தப்பிக்கவும் விவசாயத்துக்குப் பயன்படுத்தவும் கட்டப்பட்டது மாத்தூர் தொட்டிப் பாலம். இதைத் தொங்கும் கால்வாய் என்றும் தொட்டில் பாலம் என்றும் கூட அழைக்கின்றனர் அப்பகுதி மக்கள். 

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள  மகேந்திரகிரி  மலையில்  உற்பத்தியாகிறது  பறளியாறு. அருகில் இருந்த மலைகளால் பறளியாறு  மாத்தூர் பகுதில் பாய முடியாமல் போனதால் அந்த பகுதியில்  வறட்சி  ஏற்பட்டது.  தண்ணீரை கொண்டு செல்வதற்காக மலைப்பாங்கான காடிகளான கணியான் மலையையும் கூட்டு வாயுப்பாறை மலையையும் ஒரு கால்வாய் மூலம் இணைத்தால், நடுவில் இருக்கும்; பள்ளத்தாக்கு வளம் பெறும் என்ற எண்ணத்தில் இந்தத் தொட்டிப் பாலம் கட்டப்பட்டது என பெரியோர்களால் சொல்லப்படுகிறது. வறட்சியை தீர்ப்பதற்காக 1962-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த காமராஜரால் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொட்டிப் பாலம், 1969-ம் ஆண்டு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.

இந்தப் பாலத்தின் நீளம் 1204 அடியாகவும்  உயரம் 104 அடியாகவும். 28 தூண்கள் இந்தத் தொட்டிப் பாலத்தைத் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் 32 அடி சுற்றளவு கொண்டது. நீங்கள் என்றும் காணாத அளவிற்கு  இந்தப் பாலம் வழியாகத் தண்ணீர், ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு எடுத்து செல்லப்படுகிறது.  கால்வாய் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் கால்வாய் மேல் கான்கிரீட் பலகைகள் போடப்பட்டுள்ளதால், மக்கள் அந்தக் கால்வாய் மீது நடந்து செல்கிறார்கள். தண்ணீர் செல்லும் பகுதியில் பெரிய பெரிய தொட்டிகளாகக் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தொட்டியும் ஏழு அடி அகலமும் ஏழு அடி உயரமும் உள்ளது. இரு மலைகளுக்கு இடையே தொட்டில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருப்பதால், இது தொட்டில் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. 

அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது. மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர் மக்களுக்கும், இரு வட்டங்களில் உள்ள விவசாய நிலங்களின் நீர்பாசனத்துக்குப் பயன்படுகிறது.
மாத்தூர் தொட்டிப் பாலத்தால் பல ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. குறிப்பாக  தரிசு நிலங்களை, விவசாய நிலங்களாக மாற்றியப் பெருமை மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு உண்டு.

இப்போது ஒரு புகழ்பெற்ற தென்னிந்திய சுற்றுலா தளமாக மாறிவிட்டது மாத்தூர் தொட்டிப் பாலம்.   இந்த மாத்தூர் தொட்டிப் பாலத்தை சுற்றி இருக்கும் இடங்கள் ஆண்டு முழுவது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணமாக இருக்கிறது. பாலத்தின் மேல் நின்று பார்க்கும் போது விளைநிலங்களையும், மேற்கத்திய மலைத்தொடர்களையும்,  தென்னை, ரப்பர், வாழை மரங்களும், நெல் வயல்களும் கண்களுக்கு விருந்தாக இருக்கின்றன.   எங்கு நோக்கினாலும் பசுமையாகவே காணப்படுகிறது.      பாலத்திலிருந்து  இறங்க படிகள் உள்ளன.  அருகில் குழந்தைகள் விளையாட ஒரு சிறிய பூங்காவும் இருக்கின்றன.

தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமான இந்த மாத்தூர் தொட்டிப் பாலத்தை  தமிழக அரசு மேலும் பொலிவுடன் பேணி பரமரிக்க வேண்டும் என்பதே மக்களின்  விருப்பமாக உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close