மனதை மயக்கும் இயற்கை எழில்....பரளிக்காடு

  இளங்கோ   | Last Modified : 23 Nov, 2018 11:17 am
special-story-kovai-parilikkaadu

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் மேட்டுபாளையம் மற்றும்அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மலையின் அடிவாரம் மேட்டுபாளையம். மாசுபடாமல்  எங்கும் கொட்டி கிடக்கும் இயற்கை வளம், காணுமிடமெல்லாம் பசுமை, இப்படி ஒரு  மிக அரிய பொக்கிஷம் தான் மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்னும் இயற்கை மாறாமல் இருக்கும் கிராமம் தான் பரளிக்காடு.

மனதை மயக்கும் இயற்கை எழில், தூய்மையான காற்று, அடர்ந்து வளர்ந்த மரங்கள், மலை முகடுகளில் வளைந்து நெளிந்து நளினமாய் ஓடும் ஆறு, இதில் தாகம் தீர்க்கும் வனவிலங்குகள், மண் மனம் மாறாத பழங்குடியின மக்கள் என முற்றிலும் இயற்கை அன்னையின் அரவணைப்பால் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகில் நிரம்பி உள்ளது. வழியெங்கும் கொட்டி கிடக்கும் இயற்கை அழகு...பரளிக்காடு !

இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் புகைபிடித்தல், பிளாஸ்டிக்பொருட்களை பயன்படுத்த கூடாது போன்ற சில கட்டுப்பாடுகளை வித்துள்ளனர் வனத்துறையினர். காட்டு வழி பயணத்திற்கும் அங்கு பகல் பொழுது முழுவதும் ரசித்து மகிழவும் பாதுகாப்பிற்கு வனத்துறையும் உறுதுணையாக பழங்குடியின மக்களும் உத்திரவாதம் அளிக்கின்றனர். தமிழக-கேரள எல்லையோரம் பில்லூர் அணைப்பகுதியில் அமைந்துள்ள பரளிக்காட்டுக்கு கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக காரமடை என்ற இடத்தை அடைந்த பின் அங்கிருந்து மீண்டும் பயணிக்கும் போது  சட்டென அடர்ந்த மலைக்காடுகள் வழியே, கொட்டி கிடக்கும் இயற்கை அழகை ரசித்தபடி பயணித்தால் பரளிக்காடு வந்தடையும். அங்கு சென்றடைந்தவுடன் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக உள்ளூர் மலைவாழ் மக்கள் சூடான சுக்கு காப்பி கொடுத்து வரவேற்கின்றனர். 

பரிசல் பயணம்:

ஆளை மயக்கும் பரிசல் பயணத்திற்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பில்லூர் அணையின் பின்புறம் பெரும் ஏரி போல் தேங்கி நிற்கும் பவானி ஆற்று நீரில் பயணிக்க பரிசல்களும்,  ஓட்டுனர்களும் தயார்நிலையில் இருக்க, வழக்கமான மூங்கில் அல்லாமல் பாதுகாபிற்காக பைபரால் செய்யப்பட்ட பரிசலில் ஏறும் பெரியவர்கள் அனைவருக்கும் கட்டாயமாக லைப் ஜாக்கெட் அணிவிக்கப்படுகிறது. இப்பரிசல்களை இயக்கும் வனத்துறையால் நியமிக்கப்பட்ட உள்ளூர் பழங்குடியின இளைஞர்கள் பரிசலை இயக்கி கொண்டே அப்பகுதியின் காடு, வன விலங்குகள், தங்களின் வாழ்க்கை முறை பற்றி சுற்றுலா பயணிகளின் கேள்விகளுக்கு சளைக்காமல் சுவைபட விவரிக்கின்றனர்.   பயணத்தின் போதே கரையோரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகளையும், தாகம் தீர்க்க வரும் மான் மற்றும் காட்டெருமை கூட்டங்களையும் கண்டு ரசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். சுமார் ஒன்றரை மணிநேர பரிசல் பயணத்திற்கும் பின்னர் பசுமை காட்டுக்குள் சற்று இளைப்பாற்றுவதற்கு வாய்ப்பும் கிடைகிறது.  

மலைவாழ் மக்கள் :

மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பழங்குடி இன மக்களின் கலாச்சார முறைப்படி தயாரிக்கப்பட்ட ராகி களி, கீரை, கோழிக்கறி, போன்ற சுவையான உணவு அங்குள்ள பெண்களால் பரிமாறப்படுகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது.  சுற்றுலா வருபவர்களிடம் பெறப்படும் கட்டணத் தொகை செலவு போக முழுவதுமாக அங்குள்ள பழங்குடியின மக்களின் கல்வி, சுகாதாரம் போன்ற மேம்பாட்டு பணிகளுக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. இது வர்த்தக ரீதியில் லாப நோக்கத்தில் தொடங்கப்படவில்லை. 

சுற்றுலா பயணிகள் வழங்கும் முழுத்தொகையும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறதாம். சற்று நகர வாழ்க்கையில் இருந்து விலகி, பரபரப்பு இல்லாம இப்படி அமைதியா இயற்கையோட ஒரு நாளை நீங்கள் கழிக்க விரும்பினால் அதற்கு சரியான இடம் பரளிக்காடு. சுற்றிலும் மலைகள் சூழ, குளுமையான வானிலையில் சுத்தமான காற்றை சுவாசித்து, சுவையான, சத்தான உணவை உண்டு, இதமாய் இயற்கையை ரசிப்பதில் இருக்கும் சுகம் எதிலும் இருப்பதில்லை அமைதியாய் இயற்கையோடு ஒன்றியிருக்கும் சுகம் பரளிக்காட்டில் கிடைப்பதாக அனுபவித்து கூறுகின்றனர் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close