இந்த டீலிங் நல்லா இருக்கே...

  பாரதி பித்தன்   | Last Modified : 02 Dec, 2018 06:57 pm
this-dealing-is-good-special-story

ஒரு பெற்றோர் பத்துபிள்ளைகளை வளர்த்து விடுவார்கள். ஆனால் பத்து பிள்ளைகள் சேர்ந்து ஒரு பெற்றோரை பாதுகாக்க முடியவில்லை. சமீபகாலத்தில் ஒரு பிள்ளை என்றால் பெண் கொடுப்பவர்கள் கூட யோசிக்கிறார்கள். என் பெண்ணு மாமனார் மாமியாரை பார்த்துக் கொண்டு ரொம்ப சிரமப்படுவாள். 2 பேர் இருந்தா 6 மாதம் பார்த்துக் கொண்டால் போதும். இல்லாவிட்டால் அப்பா இங்கே, அம்மா அங்கே என்று பெற்றோர் உட்பட அனைத்தும் பாகப்பிரிவினை செய்யப்படுவார்கள். 

விருந்தினரை கூட முகம் கோணாமல் பார்த்துக் கொண்ட சமுதாயத்தில் இன்று முதியோர் இல்லங்கள். ஒரு காலகட்டத்தில் மருமகன் வீட்டில் வாழ்வது இழிவு என்று நினைத்தன் விளைவாகவோ என்னவோ, பெற்றோரை வைத்துக் கொள்ள மறுக்கும் பிள்ளைகள் கூட மாமியார், மாமனாரை தாங்கும் சூழ்நிலை. அப்பதானே மனைவி சோறு போடுகிறார். 

இவை எல்லாம் ஒருவ்வொரு வீட்டிலும் நடப்பது தான். அதைவிடக் கொடுமை பெற்றோர் சொத்தை பிடுங்கிக் கொண்டு அவர்களை விரட்டி அடிப்பது. 

லஞ்சம் வாங்காத அரசு ஊழியர்( இன்னும் ஒரு சிலர் இருக்காங்க நம்புங்க பாஸ்) ஓய்வு பெற்றதும் கையில் உள்ள காசைக் கொண்டு வீடு கட்டுவார், அல்லது பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பார். அதன் பின்னர் அவர் கஞ்சிக்கு பென்ஷன் மட்டும் தான் வழி. தனியார் ஊழியர்களுக்கு அதுவும் கிடையாது. இன்னொரு புறம் ஏதோ ஒரு பிளாட், சிறிது வயல் என்று வாங்கி போட்டு இருக்கும் பெரியவரிடம் இருந்து வளைத்து பிடித்து அதை எழுதி வாங்கி கொண்டு விரட்டி விடுகிறார்கள். நம்ம வாரிசுதானே, நமக்கு பின்னால் அவனுக்கு தானே, கடைசியாக கொடுப்பதை இப்போது கொடுப்போம் என்று முடிவு செய்து தருவது தான் யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் செயலாக மாறிவிடுகிறது. 

ஒரு கட்டத்தில் கல்லானாலும், கணவன், புல்லானாலும் புருஷன் என்று மண்ணாலும் மனைவி என்று எவ்வளவு கொடுமை அனுபவித்தாலும் குடும்பமாக தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. விவகாரத்து சட்டம் வந்த பின்னர் இது போன்ற தம்பதிகளுக்கு விடுதலை கிடைத்தது.

அதற்கு இணையாக தற்போது பரவி வரும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் அவர்கள் வாழ்வில் ஒளி காட்டி உள்ளது.  வெறும் ஏட்டளவில் இருந்த சட்டத்தை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி நடைமுறைக்கு கொண்டு வந்தார். 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்துார் தாலுகா வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(75). இவர் மனைவி பூங்காவனம். இவர்கள் மகன் பழனி(40). செல்வம்(37) பழனி அரசு பஸ் கண்டக்கடர், செல்வம் கட்டிடத் தொழிலாளி. கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை கடநத 7 ஆண்(டுகளுக்கு முன்பு 2 மகன்களுக்கும் பிரித்து தான செட்டில்மென்ட் பத்திரம் எழுதி அதை பதிவும் செய்தார். 
ஆனால் பிள்ளைகள் பெற்றோருக்கு சோறுகூட போடவில்லை. செல்வம் அவர்களை அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கண்ணன் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் புகார் கொடுக்க, அதை விசாரித்து பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பராமிப்பு மற்றும் நல சட்டத்தின் கீழ் தான் செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்யப்பட்டது. செல்வம் தன் பங்கை வேறு ஒருவருக்கு விற்றிருந்தார். அதுவும் ரத்து செய்யப்பட்டு நிலம் கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கலெக்டர் கந்தசாமியின் முன்னெடுப்பு இது போன்ற முதியோர்களுக்கு புது விதமான வாசலை திறந்துள்ளது. 
அசாம் மாநிலத்தில் பெற்றோரை கைவிடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதத்தை பிடித்து அவர்கள் பெற்றோருக்கு கொடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.  பெரும்பாலான நாடுகளில் பெற்றோரை பிரிந்த பிள்ளைகள், முதியவர்கள் ஆகியோரை பாதுகாக்கும் பொறுப்பு அரசையே சாரும். அதனால் அவர்கள் பலவிதமான திட்டங்களை தீட்டி நிதி ஏற்பாடு செய்துள்ளார்கள். 

இந்தியாவில் இது குடும்பத்தின் கடமை. வயதான பெற்றோர், வேலைக்கு செல்லாத வாலிபர், திருமணமாகாத வேலைக்கு செல்லத பெற்றோரை இழந்த பெண், விதவைகள் போன்றவற்றை எதைப்பற்றியும் யோசிக்காமல் குடும்பங்கள் தான் பராமரித்து வந்தன. கூட்டு குடும்பம் சிதைந்து தனிக் குடும்பம், தற்போது அதுவும் சிதைந்து வரும் நிலையில் குடும்பங்களின் பொறுப்பு முழுவதும் அரசு தலையில் விழுந்து விட்டது. அவர்கள் இதற்கு தேவையானவற்றை செய்தாலும், குடும்பங்களின் பங்களிப்பும் அவசியம். 

அதற்கு முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமிப்பு சட்டத்தின் அடிப்படையில் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி போன்றவர்களின் முன்னேடுப்பு அஸ்திவாரமாக அமைந்துள்ளது. இன்னும் பல படிகள் செல்ல வேண்டும். அதற்கு சமூக ஆர்வலர்கள் களம் இறங்கி பணியாற்ற வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close