எவரும் கண்டுகொள்ளாத மாமண்டூர் குகைகள்...!

  இளங்கோ   | Last Modified : 03 Dec, 2018 12:18 am

mamandoor-caves-special-story

இந்திய வரலாற்றின் பக்கங்களில் தென்னக வரலாற்றுக்கு சிறப்பான பங்கு உண்டு. அதில் தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், சோழர்கள் ஆகியோருக்கு நிலையான பங்களிப்பு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. பல்லவர்கள் ஆட்சியில், பாறைகள் எல்லாம் எழிலோவியமாக ஏற்றம் பெற்றன. இந்த பட்டியலில் மாமண்டூர் ஏரியும், குடைவரை கோயில்களும் அதிகளவில் சுற்றுலா பயணிகளையும், வரலாற்று  ஆர்வலர்களையும் கவர்ந்திழுக்கின்றன திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரி மாமண்டூர் ஏரி. 

இந்த ஏரியை சுற்றிலும் தொடர்ச்சியாக மூன்று மலைகள் இயற்கையாகவே அமைந்து அழகாகக் காட்சியளிக்கின்றன. தஞ்சைக்கு அடுத்தாற்போல் நெற் களஞ்சியத்துக்கு திருவண்ணாமலை மாவட்டம் பேர்பெற்றது. அந்த வகையில் மாமண்டூர் ஏரி 4500 ஏக்கர் பரப்பளவு கொண்டு நன்செய் பூமியை செழிக்க வைக்கிறது.  இங்கு உள்ள மூன்று மலைகளில் முதல் மலையில் முற்று பெறாத நிலையில் 3 கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது  மலையில் பாறையை குடைந்து 5 கருவறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மலையின் உச்சியில் இரண்டு கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றில் சிவலிங்கம் வைத்து வழிபட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. 

மற்றொரு கோயிலில் நாய் வாகனத்துடன் பைரவர் வடக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மூன்றாவதாக உள்ள மலையில் தூண் வரிசையுடன் 3 கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  கருவறையில் சிதைந்த நிலையில் ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது. .  சில குகைகளில் பூ வேலைப்பாடுகளுடன் அழகிய தூண்களையும் காணமுடிகிறது. சுவரில் கல்வெட்டுகள் சிதைந்து காணப்படுகின்றன. வடக்கு குகையில் தென்சுவரில் மகேந்திரவர்மன் நாடக நூல்கள் எழுதியதற்கான குறிப்புகள் உள்ளது.  இங்கு கல்வெட்டுக்கள் நிறைந்த குடைவரை கோயில்கள்  இருந்தாலும், இங்கு உள்ள குடைவரையை அமைத்தது யார் என்பது பற்றிய தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.  

ஆனால் கட்டடக்கலைப் பாணியை ஆராய்ந்தும், குடைவரையில் கிடைத்த கல்வெட்டு ஒன்றை அடிப்படையாக வைத்தும் இது முதலாம் மகேந்திர வர்மனால் கட்டப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தொல்லியல்துறை மாமண்டூர் குடவரை கோயில்களை அதற்கான வரலாற்று தகவல்களுடன், குடைவரை கோயில்களை சுற்றியுள்ள இடங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் விதமாக  பூங்காக்களை  அமைத்தால் பண்டைய பாரம்பரிய வரலாற்றை வரும் சந்ததிக்கு தெரியபடுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். 

ஆனால் தற்போது இந்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில் மாமண்டூர் மலையை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டாலும், போதிய பராமரிப்பின்றி காணப்படுவதே உண்மை. அரசு தரப்பில் காவலர் அறை இருந்தும் காலவர் இல்லாத நிலையால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது மாமண்டூர் குகைகள். இனியாவது அரசு இதைக் கட்டிக் காக்க முயற்சிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்...!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.