கிருஷ்ணனுக்கு குழலூத மறந்து விட்டது: புத்தக மதிப்பீடு

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 05 Dec, 2018 01:37 am
krishna-krishna-book-value

கிருஷ்ணனுக்கு குழலூத மறந்து விட்டது...

அட நிஜம் தான்! நிஜமாகவே குழலையெடுத்து ஊதத் துவங்கியதும், நாதம் எழவில்லையாம். அதைக் கண்ட சிறுவர்கள் பரிகாசம் செய்கின்றனர். குழலூதத் தெரியவில்லை, நீர் என்னய்யா ஆண் என்று!
கிருஷ்ணன் சற்றே நாணித் தான் போகிறார். இந்தச் சம்பவம் நடந்தது பிருந்தாவனத்தில்.

ஒரே வித்தியாசம், குருஷேத்திரப் போர் முடிந்து 36 வருடங்கள் கழிந்து நடந்த சம்பவம் இது. வந்த வேலை எல்லாம் நிறைவடைந்ததும், கிளம்பும் முன், தனக்கே தனக்கென்று வாழ்ந்த வாழ்க்கையின் மீது மீண்டும் ஒரு வாத்சல்யம் ஏற்பட்டு, ராதையைக் காண ஆவலுற்று பிருந்தாவனத்திற்குச் செல்கிறார்.

அங்கே பல சிறார்கள் குழலூதி களித்துக் கொண்டிருக்கின்றனர். குழலிசையில் ஈர்த்து கிருஷ்ணன் அந்தச் சிறுவனிடம் போய் உன் பெயரென்னவென்று கேட்கிறார். அவன், “கிருஷ்ணன்” என்கிறான். ஆச்சர்யப்பட்ட கிருஷ்ணனிடம் அச்சிறுவன் மேலும் சொல்கிறான், பிருந்தாவனத்தில் பிறந்து வளரும் எந்த ஆண் குழந்தைக்கும் எட்டு வயது ஆகும் வரை கிருஷ்ணன் என்ற பெயர் தான். எட்டு வயதிற்கு மேல் மட்டும்  பெயர்கள் மாறும் என்கிறான்.  பிருந்தாவனத்திலிருந்து அக்ரூவருடன் கிளம்பிப் போனதற்குப் பிறகு கிருஷ்ணன் ஒரு முறை கூட பிருந்தாவனத்திற்குத் திரும்பி வரவேயில்லை. அவ்வளவு ஏன் ஒரு முறை கூட பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து அனுபவிக்கவேயில்லை.  

ஒரு முறை பிருந்தாவனத்திற்குச் சென்று வந்த பலராமர், கிருஷ்ணா நீயில்லாத கோகுலம் பொழிவிழந்து கிடக்கிறது என்று சொன்னாராம். அது தன்னை உயர்த்திப் பேசிய அன்பு வார்த்தைகள் என்று இப்பொழுது உணர்கிறேன் என்கிறார் கிருஷ்ணன்.  நிற்க! இதெல்லாம் எந்தப் புராணத்திலும், இதிகாசங்களிலும் இல்லாத செய்தியாக இருக்கிறதே என்று யோசிப்பவர்களை, #கிருஷ்ணா_கிருஷ்ணா என்ற புத்தகம் வாசிக்க பரிந்துரைக்கிறேன். கதை சொல்லும் விதம் என்பது ஆளாளுக்கு மாறுபடும்.  கதையை அப்படியே சொல்வது. இருப்பதை எளிமைப்படுத்திச் சொல்வது. மொழிச் சுவைக்காக சற்றே மறைபொருளாகச் சொல்வது, போன்ற பலவகைகளில், 

இந்திரா பார்த்தசாரதி அவர்கள் இதில் சொல்லியிருக்கும் கிருஷ்ண கதை, கிருஷ்ண சரிதம் வாசிக்கும் போது எழுதும் சிந்தனைத் தூண்டல்களை அப்படியே வார்த்திருக்கிறார். பல கறிகாய்களைச் சாப்பிட்டு, அதைப் பாலாக மாற்றிக் கொடுக்கும் தாயாக மிளிர்கிறார். கிருஷ்ண கதையைச் சுவராசியத்திற்காகச் சொல்வதும், பக்திக்காகச் சொல்வதுமாக அதிகம் நடைமுறையிலிருக்கும் காலத்தில், அதன் தத்துவார்த்தங்களை ஆழத்திலிருந்து பெயர்த்து வந்து சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கும் உப்பாக கலந்து கொடுத்திருக்கிறார். 

எந்தவொரு இலக்கியப் படைப்பும், அந்தந்தக் காலத்திலிருக்கும் வாசிப்பாளனின் வாழ்க்கை முறைக்கேற்ப அறிவுப் பெருக்கத்தை உருவாக்க உறுதுணையாக இருக்க வேண்டும். சிந்தனையை விசாலப்படுத்த, அன்றைய வாழ்க்கைத் தடுமாற்றத்திற்கு ஊன்றுகோலாக துணை நிற்க வேண்டும். அப்படியான ஓர் அற்புதமான படைப்பாக இருக்கிறது இந்தப் படைப்பு. கிருஷ்ணர்  தன் இறுதிக் காலத்தில் பிருந்தாவனத்திற்கு ராதையைச் சந்திக்கச் சென்றாரா என்பதை விசாரப் பொருளாக எடுக்காமல், 

 “கோகுலமும், பிருந்தாவனமும் கொண்டாடியது  வசுதேவ மைந்தன் கிருஷ்ணனை மட்டுமல்ல. நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் கிருஷ்ணன் மதுராவுக்குச் சென்று விட்ட பின் கோபிகைகள் தங்கள் கொண்டாட்டங்களையும், ஆனந்தக் கூத்துகளையும் இழந்து விடவில்லை. அவர்கள் கோகுலத்தின் ஒவ்வொரு குழந்தைக்குள்ளேயும், “அவர்களது” கிருஷ்ணனைக் கண்டு அனுபவிக்கிறார்கள். பிருந்தாவனத்தை விட்டு தான் கிருஷ்ணன் வெளியே போனான். கோபிகைகளின், யசோதைகளின் மனதை விட்டு அல்ல! கிருஷ்ணன் ஸ்தூல உடம்பல்ல. அவன் மாயன். மாயக்கிருஷ்ணன் எனக்குள்ளேயும் உனக்குள்ளேயும் வியாபித்தே இருக்கிறான். அவனது சீய்ங்குழலோசை நமக்குக் கேட்காமல் தடுக்கும் புறக்காரணிகளை நீக்காமல் இருப்பது நம் தவறே!” – என்றுணர்த்த முனைகிறார் என்பதாக இருக்க வேண்டும்.  ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதால, 200 பக்க புத்தகத்தில் ஒரேயொரு பத்தியை மட்டும் இங்கே பதப் பொருளாக உங்கள் முன் வைத்திருக்கிறேன். மற்றவையெல்லாம் நீங்களே படித்துணருங்கள்.

பொதுவாக, ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது நமக்குள் ஓர் உணர்வு எழும். அது தவறோ சரியோ அந்தப் புரிதலில் ஒரு புளகாங்கிதம் கொள்வோம் இல்லையா?. அந்தப் புளகாங்கிதத்தை அப்படியே ஒரு புத்தகத்தில் போட்டுக் கொடுத்தால் எப்படி இருக்கும்? அது தான் கிருஷ்ணா கிருஷ்ணா எனும் புத்தகம். கிருஷ்ணப் பரிமாணத்தை, பெரும் ஆச்சார்யர்கள், ஓஷோ, பாரதி, போன்றோர் விரித்துரைத்த வரிசையில் இந்திரா பார்த்தசாரதியையும் நிச்சயம் சேர்க்கலாம்.

ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம், சென்னை
பக்கம்: 214
விலை: ரூ.180/-

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close