ஜெயலலிதா Vs கருணாநிதி!! ஒரு பார்வை!!

  சாரா   | Last Modified : 24 Feb, 2020 12:53 pm
jayalalitha-and-karunanidhi-rivalry

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவருக்கும் அவரது அரசியல் எதிரியான திமுக தலைவர் கருணாநிதிக்கும் இடையே இருந்த சர்ச்சைகள், சம்பவங்களை பற்றி பார்க்கலாம்...

கலைஞர் கருணாநிதியின் வசனங்களுக்கு உயிர் கொடுத்த ஒரு நடிகையாக இருந்த ஜெயலலிதா, பின்னாளில் அவரை எதிர்த்து நான்கு முறை முதல்வரானது காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாம். பல்வேறு தடைகளையும் தாண்டி அன்றைய ஆணாதிக்க உலகில், ஜெயலலிதா பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் இரண்டு பிரிவாக இருந்த அதிமுக, பின்னர் ஜெயலலிதாவின் பின் ஒன்றாக இணைந்தது. எதிர்க்கட்சித் தலைவராகவும் தனி ஒரு பெண்ணாகவும் சட்டமன்றத்திற்கு சென்ற ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய நாள், மார்ச் 25, 1989.

முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்து அறிக்கை வாசித்த போது, ஜெயலலிதா குறுக்கிட்டு வந்ததாக தெரிகிறது. அதன்பின் நடந்த சம்பவங்கள் மாநிலத்தின் தலைவிதியையே மாற்றும் விதமாக அமைந்தது. தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான செங்கோட்டையனிடம், கருணாநிதியை தாக்கச் சொல்லி ஜெயலலிதா ஆணையிட்டதாக திமுகவினர் கூறுகின்றனர். ஆனால். ஜெயலலிதாவின் பேச்சால் கடுப்பான முதல்வர் கருணாநிதி, தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடம் அவரை தாக்க உத்தரவிட்டதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கியதால், காயங்களுடன் தலைவிரி கோலத்துடன் சட்டசபையை விட்டு வெளியேறினார் ஜெயலலிதா. வெளியே வந்தவுடன் ஊடகங்களிடம் முதல்வராக மட்டும் தான் இந்த சட்டமன்றத்தில் மீண்டும் கால் வைப்பேன் என சவால் விட்டு சென்றார். இந்த சம்பவம் தமிழக மக்களுக்கு ஜெயலலிதாவின் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் இறந்த போதே ஜெயலலிதாவை அவரது உடல் அருகில் இருக்க விடாமல், எதிரணியினர் பலர் தாக்கியது, தமிழக மக்கள் நினைவில் இன்றும் உள்ளது. 

ஆணாதிக்க உலகத்தில் ஒரு பெண் தனியாக என்ன பாடு படுகிறார் என்று அளவுக்கு ஜெயலலிதாவின் மீது மக்கள் செல்வாக்கு கூடியது. அதன்பின் இலங்கை விடுதலைப் புலிகளுடன் நெருக்கமான உறவை கடைபிடித்து வருவதை சுட்டிக் காட்டி, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதன்பின், தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகள் அமைப்பினால் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து, 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது. அரசு கஜானாவை கருணாநிதி காலி செய்து விட்டதாக குற்றம் சாட்டிய ஜெயலலிதா, தான் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறப் போவதாக அறிவித்தார். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. 1995ம் ஆண்டு, வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு 100 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட திருமணம் செய்து காட்டினார் ஜெயலலிதா. இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

1996 தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. கலர் டிவி ஊழல் வழக்கில் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், 30 கிலோ தங்கம், ஆயிரக்கணக்கான சிலைகள், நூற்றுக்கணக்கான காலணிகள் என பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டன. அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கும் தொடுக்கப்பட்டு, 30 நாட்கள் சிறையில் இருந்தார். 

2001 தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் பல சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை மீண்டும் பிடித்தார் ஜெயலலிதா. இது கருணாநிதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வெற்றியோடு கருணாநிதியை பழிவாங்கும் வாய்ப்பும் ஜெயலலிதாவுக்கு கிடைத்தது. அதை பயன்படுத்தி 2001, ஜூன் 29ம் தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதியை போலீசார் கைது செய்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் செய்ததாக கலைஞர் கருணாநிதி, அவரது மகன் முக ஸ்டாலின், திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் டிஆர் பாலு, முரசொலி மாறன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். நிலைமை கையை மீறி சென்றதால், பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு அரசு குறுக்கிட்டது. 

இரண்டாவது முறை முதல்வராக இருந்தபோது, எஸ்மா சட்டப்படி அரசு அதிகாரிகளை பணியை விட்டு நீக்கியது, கோவிலில் மிருகங்களை பலி கொடுக்க தடை, உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள், ஜெயலலிதாவுக்கு எதிராக திரும்பின. ஆனாலும் தேர்தலில் கலைஞரின் வெற்றி உறுதியாகவில்லை. அதனால், ஆட்சியை பிடிக்க கலைஞர் கொண்டுவந்த தந்திரம்தான், இலவச கலர் டிவி. பின்னாளில் தமிழகத்தில் மாறி மாறி இலவச பொழிய, கருணாநிதியின் இந்த நடவடிக்கை முக்கிய காரணம்.

தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றார். ஆனால் திமுகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாமல், மைனாரிட்டி ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா, ஆட்சி முழுவதும் மைனாரிட்டி திமுக அரசு என குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். 2006 முதல் 2011 வரை கருணாநிதியின் ஆட்சி முழுக்க, குடும்ப ஆட்சியாக பார்க்கப்பட்டது. நில அபகரிப்பு, 2ஜி, குடும்ப அரசியல் போன்ற சர்ச்சைகள் தனக்கு உதவ, விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியைப் கைப்பற்றினார் ஜெயலலிதா. விஜயகாந்தின் தேமுதிகவை விட கம்மி இடங்களை மட்டுமே பெற்று, எதிர்க்கட்சி தகுதியை கூட இழந்தது திமுக.

இந்த முறை ஜெயலலிதாவுக்கு போதிய அரசியல் அனுபவமும், பக்குவமும் வந்துவிட்டதால், பெரும் சர்ச்சைகளை தவிர்த்து கட்டுக்கோப்பாக ஆட்சி நடத்தினார். இதுவே அவர் மீண்டும் 2016 தேர்தலில் வெற்றி பெற காரணமாக அமைந்தது.

2016ம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5ம் தேதி இயற்கை எய்தினார். கலைஞருக்கும் 2016ம் ஆண்டு உடல் நலக்குறைவால் ட்ரேக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசியலில் இருந்து பெரும்பாலும் விலகியே இருந்த கருணாநிதி, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close