• விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

பிறந்த நாள் பரிசு முதல் சொத்துக்குவிப்பு வரை... மறைந்த முதல்வர் ஜெயலலிதா சந்தித்த வழக்குகள்!

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 11:09 am

former-tn-cm-jayalalitha-cases

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2வது ஆண்டு நினைவு நாள் இன்று. அவரது அரசியல் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. அதே போல பல சர்ச்சைகளும் நிறைந்தது. முக்கியமாக அவர் அரசியலில் இருந்த அதே காலக்கட்டத்தில் அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டன. 

அந்த வழக்குகள் குறித்தும் தீர்ப்புகள் குறித்தும் பார்ப்போம்...

வண்ணத் தொலைக்காட்சி வழக்கு

1995ம் ஆண்டு ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் பெற்றதாகக் தொடரப்பட்ட இவ்வழக்கில் ஜெயலலிதா, சசிகலா நடராசன், சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், அதிகாரிகள் ஹெச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.

அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேரை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை 2000ம் ஆண்டு மே 30 அன்று விடுவித்தார். அதேசமயம் அமைச்சர் செல்வகணபதிக்கும், அதிகாரிகளுக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. 

டான்சி நில வழக்கு

1992ம் ஆண்டு சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

2000ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்குகளுக்குமாகச் சேர்த்து ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பிற்குத் தடை விதித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்யவில்லை. இது 2001ம் ஆண்டு ஒரு சட்ட சிக்கலுக்கு வித்திட்டது. 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, எனவே அவர் பதவியேற்கக் கூடாது என வழக்குகள் தொடரப்பட்டன, இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகினார். 2003ல் சென்னை உயர்நீதி மன்றம் அவரை விடுவித்த பின்னர் ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். இவ்வழக்கின் காரணமாக ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து நீங்கிய போது ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார்.

பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு

1991-96 வரையிலான ஆட்சிக்காலத்தில் கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.  சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர்.  

அப்போது தருமபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர். தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மூன்று அதிமுகவினருக்கு சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர்கள் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர். 

நிலக்கரி இறக்குமதி வழக்கு

1993ம் ஆண்டு தமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன், மின்வாரியத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த வழக்கில் சுப்ரமணியம் சுவாமியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். ‘700 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்திருந்த சுப்ரமணியம் சுவாமியால், விசாரணையின்போது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடவோ, விளக்கவோ முடியவில்லை' என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

பிறந்த நாள் பரிசு வழக்கு

1992ம் ஆண்டு 57 பேரிடமிருந்து 89 வரைவோலைகள் மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் தனது பிறந்த நாளன்று பரிசாகப் பெற்றதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்பு குற்றச்சாட்டுப் பதிவு செய்தபோது 21 பேரிடமிருந்து 1.48 கோடி ரூபாய் என்று அதைக் குறைத்துவிட்டது. இந்த வழக்கில் அன்றைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த மொத்தக் குற்றசாட்டுக்களையும் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார்.

பத்தாண்டுகளாகியும் சி.பி.ஐ. விசாரணையை முடிக்காமல் காரணமின்றி இழுத்தடிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட எவரும் புகார் அளித்து, சி.பி.ஐ. இந்த வழக்கைத் தொடரவில்லை என்றும், ஜெயலலிதா அவரது வருமான வரி தாக்கலின் போது பிறந்தநாள் பரிசுகள் குறித்துக் கொடுத்திருந்த தகவலை அடிப்படையாகக்கொண்டே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே அவர் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கு

கடந்த 1996ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் தற்போதைய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தமிழக முதல்வர் பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும், அதனால் ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். 

இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி 27.6.1996ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். காவல்துறையும் விசாரணையை துவக்கியது. 

இந்த நிலையில் தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா சார்பில் 14.8.1996ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே 07.9.1996ம் தேதி இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக நல்லமநாயுடு நியமிக்கப்பட்டார். 

விசாரணை அதிகாரி நல்லமநாயுடு உத்தரவின் பேரில் 18.9.1996ம் தேதி ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மறுநாள் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை செய்யப்பட்டன. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வீடுகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். 

இந்த வழக்கில் 07.12.1996ம் தேதியன்று ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். 19 வாகனங்கள், 7,109 சேலைகள், 389 ஜோடி செருப்பு, 214 சூட்கேஸ், 26 கிலோ தங்க-வைர நகைகள், 1,116 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் வழக்கில் சேர்க்கப்பட்டன. ஜெயலலிதா தனது வருமானத்தை விட ரூ.66 கோடியே 64 இலட்சத்து 42 ஆயிரத்து 318 மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. 

தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல் நபரான ஜெயலலிதா தமிழக முதல்வராக இருப்பதால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு கருதி தனி நீதிமன்றத்தை பெங்களூர் பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும் என்றும் ஜெயலலிதா சார்பில் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கு ஆவணங்களை மாற்ற வசதியாக வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். செப்டம்பர் 27ம் தேதி அன்று முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலா, இளவரசி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வழங்கப்பட்டது. 

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.