காற்றினிலே நாதம் தரும்.... சங்கு !

  இளங்கோ   | Last Modified : 08 Dec, 2018 06:55 pm

sangu-the-devotional-music-instrument-special-story

நம் நாட்டில் மிகவும் புனிதமாக பார்க்கப்படுவது சங்கு. ஆனால் சங்கு  என்பது  ஒரு  காற்று இசைக் கருவி.  தமிழர் மற்றும் இந்திய இசையில்,  பண்பாட்டிலும்,  கோயில் வழிபாட்டின் போதும் பயன்படுகிறது.  இந்து சமயம், வைணவ கடவுளான  விஷ்ணுவின் சின்னமாக  சித்தரிக்கப்படுகிறது. தமிழக   கோயில்களில்  சுவாமி  வழிபாட்டில்  சேகண்டியுடன்  சங்கொலியும்  இசைக்கப்படுகிறது. பழங்காலம் முதலே கோயில் வழிபாடுகளில்  இசைக்கப்பட்ட  மிக முக்கிய  இசைக்கருவியாகும்.  கோவில்கள்  மட்டுமல்லாமல்  வீடுகளில் பூஜை செய்யும் போதும்,  மங்கள நிகழ்ச்சியின்போதும்,  போர் துவங்குவதைக் குறிக்கவோ,  போரில் ஒரு படை வெற்றி  அடைந்ததை அறிவிக்கவோ சங்கு ஊதப்படுகிறது.  

மகாகவி பாரதியாரும்  சங்கு கொண்டே  வெற்றி  ஊதுவோமே  என்று  பாடி  வெற்றியை  பறை சாற்றும் பொருளாகச் சங்கை கொண்டிருக்கிறார்.  மஹாபாரதப்  போரின் போது  காலையில் போர் ஆரம்பிக்கும்  போதும் மாலை சூரியன் அஸ்தமிக்கும் போதும் போரை  முடிக்கும் போதும்  சங்கு ஊதப்பட்டதாக கூறப்படுகிறது. இது சங்கொலி  அதர்மத்தின்  அழிவையும்  தர்மத்தின்  வெற்றியையும் காட்டுகிறது.  நம் நாட்டு  சங்குகளை பல வகைகளாக பிரிக்கப்படுகிறது. அதில் வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு, சலஞ்சலம்,  பாஞ்சசன்யம் என்றெல்லாம் மக்களால் கருதப்படுகிறது. 

குறிப்பாக சலஞ்சலத்தின் உள்ளே வெள்ளி நிறத்தில் இருக்கும் மூன்று கோடுகள் மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்று சில சம்ஸ்கிருத நூல்களில் கூறப்படுகிறது. ஆனால் இன்றுவரை சலஞ்சலம், பாஞ்சசன்யம் என்று சொல்லப்படும் சங்குகளை எவரும் கண்டதாக சொல்லப்படவில்லை. ஏனென்றால் இவ்விரண்டும் மிக மிக அபூர்வமானது. ஆனால் வலம்புரிச் சங்கு மற்ற சங்குகளை விட மிக அரிதாகக் கிடைப்பவை.  கடலில் பிறக்கும் ஒரு சங்கில், சுருண்டிருக்கும் வரிகள் வாய்ப் பகுதியில் ஆரம்பித்து வலதுபுறமாக சுழன்று முடிந்தால், அது வலம்புரிச் சங்கு என்றும், காதில் வைத்துக் கேட்டால் அது 'ஓம்' என்ற சப்தத்தை எழுப்பினால் அது வழிபாட்டுக்குரிய சங்கு என்றும் கூறபடுகிறது. வலம்புரிச் சங்கு, தட்சிணாவர்த்த சங்கம் என்றும் இடம்புரிச் சங்கு வாமாவர்த்த சங்கம் என்றும் சொல்லப்படுகிறது. 

இதனால் சங்கை பூஜையறையில்  இறைவன் முன்  வைத்து  வணங்கப்படும்  அளவிற்கு  சங்கிற்கு  சிறப்பு  உண்டு. மங்கலகரமான பூஜை நேரத்தில் அமங்கலமான வார்த்தைகளோ பேச்சுக்களோ பக்தர்களின் காதுகளில் விழுந்து பக்தி மனோபாவத்தை குறைத்து  விடாதிருக்கவும்  சங்கு  ஊதப்படுகிறது.  மேலும்  சங்கு ஊதுவது  ஆன்மீக  ரீதியில்  மட்டுமல்லாமல்  ஆரோக்கிய  ரீதியாகவும் உதவுகிறது.  சங்கு  ஊதுவதினால்  மூச்சு  ஆழப்பட்டு,  நுரையீரல் செயல்படுவதும்  சீராகிறது. சங்கிற்கு   உடலை  பாதிக்கும் நுண்கிருமிகளை  அழிக்கும்  தன்மை  உள்ளது.  

அதனால்தான்  தீர்த்தம் சங்கில்  தரப்படுகிறது.   அக்காலத்தில்  குழந்தைகளுக்கு   மருந்தையும், பாலையும்  சங்கில்  ஊற்றித்  தரும்   வழக்கம்  நம்  வீடுகளிலும்  பார்த்திருக்கலாம். சங்குகள் நமக்கு சங்கு வளையல், மோதிரம் போன்ற அணிகலன்கள் செய்யவும், ஓர் அலங்கார பொருளாகவும் பயன்படுகிறது. வலம்புரிச் சங்கானது இறைப் பண்பு மிக்க சங்காக இந்தியாவில் மதிக்கப்படுகிறது. மஞ்சள் காமாலை, காசநோய், வயிற்று வலி மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து குணமடைய சங்குத்தூள் மருந்தாகப்  பயன்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் சங்கில் உள்ள சதைப்பகுதி உணவாகவும் பயன்படுகிறது.

நம் நாட்டில் சங்கு ஒரு புனிதமாகவே பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் வைத்து துளசியை அதில் போட்டு அந்த நீரை பருகினால் ஆயுள் விருத்தியாகும். வலம்புரி சங்கில் பசும் பால் வைத்து பூஜித்தால் பிள்ளை இல்லாத தம்பதியருக்கு பிள்ளை பிறக்கும் என நம்பப்படுகிறது. வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில், இடம்பிரி சங்கும்  வைக்கவேண்டுமாம்.

அப்படி வைத்தால்தான் பலன்கிட்டுமாம். பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு, அதில் வலம்புரிச் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவு பஞ்சம் ஏற்ப்படாது என்றும், வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை வலம்புரிச் சங்கில் இட்டு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும் எனவும், செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி, திருமணம் நடைபெறும் என இப்படி பல பரிகாரங்களுக்கும் சங்குகளை  பயன்படுத்துகின்றனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.