முண்டாசைக் கட்டிக்கிட்டு முறுக்கு மீசையுடன் கண்களை உருட்டிக்கிட்டு (பகுதி-1)

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 11 Dec, 2018 02:55 pm
bharathi-is-my-lover-part-1

முண்டாசைக் கட்டிக்கிட்டு முறுக்கு மீசையுடன் கண்களை உருட்டிக்கிட்டு,

“பயமெனும் பேய்தனை யடித்தோம் - பொய்மைப்  பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்”

என்று பாடித் திரிந்த பாரதியை நினைத்தாலே முரட்டு உருவம் தான் நம்மில் பலருக்கும் மன தரிசனம்.
 
காதற் கணவனாய், கண்ணம்மா காதலனாய் அவன் முகத்தை உருவகப்படுத்த பலரும் முனைந்திருக்க மாட்டோம். ஏனெனில், நமக்கு சமூகப் போராளி பாரதி தான் தேவைப்பட்டது/தேவைப்படுகிறது. அவனை, இரண்டு குழந்தைகளைப் பெற்ற அப்பனாக, இளமையிலும் வறுமையையே கொடுத்தாலும் தன்னை விட்டு இம்மியும் விலகாத அளவிற்கு அன்பைப் பொழிந்த கணவனாகப் பார்க்காமல் விட்டு விட்டோமோ? இல்லை அவனது இல்ல(ற)ம் புகுந்து நோக்கினால் அவனைப் பட்டினியாய்ப் போட்ட குற்றம் வந்து குடைந்து விடும் என்ற அச்சமோ?
 
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே” என்று தன் தந்தையின் இல்வாழ்க்கையை எதார்த்தமாகப் பாடியவனின் இன்பத்துப் பாலாடையை மட்டும் உதைக்கும் கன்றுகளா நாம்?
 
மோகத்தீயில் மோட்சம்: மோகத் தீயில் புழுக்கம் தாளாத புழுவாய்த் துடிக்கிறான். எப்படியெல்லாம் உருகுகிறான் பாருங்கள்…

 ”திருவே! நினைக் காதல் கொண்டேனே - நினது திரு
உருவே மறவாது இருந்தேனே - பலதிசையில்
தேடித் திரிந்து இளைத்தேனே - நினக்கு மனம்
வாடித் தினம் களைத்தேனே - அடி நினது
பருவம் பொறுத்திருந்தேனே - மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந்தேனே - இடைநடுவில்
பையச் சதிகள் செய்தாயே - அதனிலும் என்
மையல் வளர்தல் கண்டாயே - அமுதமழை
பெய்யக் கடைக்கண் நல்காயே - நினதருளில்
உய்யக் கருணைசெய்வாயே - பெருமைகொண்டு
வையந் தழைக்க வைப்பேனே - அமரயுகம்
செய்யத் துணிந்து நிற்பேனே - அடிஎனது
தேனே! எனது இருகண்ணே - எனை உகந்து
தானே! வரும் திருப்பெண்ணே ! “
 
அடி நினது
பருவம் பொறுத்திருந் தேனே - மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந் தேனே நீ தயாராகும் வரை பிரம்மச்சர்ய கர்வத்துடன் காத்திருந்தேனே!

இடைநடுவில் பையச் சதிகள் செய் தாயே - அதனிலும் என்
மையல் வளர்தல் கண் டாயே -//  வாய்ப்பு கிடைத்தும் வர மறுத்தாயே அபொழுதும் கூட உன் மீதான என் மயக்கம் வளர்வதைத் தானே பார்த்தாய்?
 
நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே - பெருமைகொண்டு
வையந் தழைக்க வைப் பேனே -

(நம்மாளு ரொம்ப ரீஜெண்ட்டான ஆளுப்பா. என்னா நாசூக்கா கெஞ்சுறார் பாருங்க) 
கொஞ்சம் இடம் கொடு போதும் நமக்கு புத்திரபாக்கியம் உருவாக்கி விடுகிறேன். அடி தேனே எனது இரு கண்ணே (இரண்டு கண்களுமே அவள் தானாம்).
 
கண்ணம்மா பாட்டுகளைப் பார்க்கும் முன், இங்கே முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டியது இருக்கிறது. கண்ணம்மா என்பது பாரதியின் இளமைக்கால தோழி என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தன் மனைவி பக்குவமாகி வரும் வரை (1897ல் திருமணம். 1904ல் தான் மனைவியுடன் கூடுகிறார். அந்த காலகட்டத்தில் தான் 1902ல்  “தனிமை இரக்கம்” எழுதப்பட்டது.) தன் இச்சையைப் பொறுத்துக் கொண்டிருப்பவனா மற்றொரு பெண்ணின் நினைவில் திரிந்திருக்கப் போகிறான்? கண்ணம்மா என்பவளை தன் கற்பனைக் காதலியாக மட்டுமல்ல கற்பனைக் குழந்தையாகவும் பாடியிருக்கிறான். (சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே) கண்ணம்மா என்று காதல் ரசம் சொட்டப் பாடியது எல்லாம் செல்லம்மாள் என்றே பாடியது தான். பிற்காலத்தில், பாரதியின் பாடல்களைத் தொகுத்த போது, சிறுங்கார ரசத்தில் தன் தங்கை பெயரை ஊரார்கள் உச்சரிக்கும் சங்கடங்களைத் தவிர்க்கவே செல்லம்மாவின் அண்ணன் திரு.அப்பாதுரை அவர்கள், செல்லம்மா என்ற இடங்களிலெல்லாம் கண்ணம்மா என்று திருத்தியிருக்கிறார். ஆகவே காதல் பாடல்களில் கண்ணம்மா எல்லாம் செல்லம்மா தான்.

“கற்பு நிலை என சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்று சொன்னவனா மனைவி இருக்கும் போதே மற்றொருத்தியை காமுற்றுப் பாடுவான்?

பகுதி-2க்கு இங்கு கிளிக் செய்யவும்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close