கற்களாக மாறிவரும் மரங்கள்...இயற்கையின் அதிசயத்தைப் பாருங்கள்...!

  இளங்கோ   | Last Modified : 13 Dec, 2018 06:48 pm
trees-are-changing-as-stone-special-story

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையில் வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களுக்கிடையே மிகவும் பிரபலமானதாகும். இவை பாடல் பெற்ற சிவன் கோவிலாகும். ஆனால் கோவிலுக்கு சில மைல் தொலைவில் ஒரு பெரிய இயற்கை அதிசயம் இருப்பது பலருக்கும் தெரியாது. அது தான்  கல் மரப் பூங்கா, இங்கு சுமார் இரண்டு கோடி ஆண்டுகள் பழமையான கல் மரங்கள்  காணப்படுகின்றன. திருவக்கரை தேசிய கல் மர பூங்கா ஒரு புவியியல் பூங்காவாகும். இந்த பூங்கா இந்தியா புவியியல் ஆய்வு மையத்தால் பராமரிக்கபட்டு வருகிறது.

ஐரோப்பாவை சேர்ந்த இயற்கையியலர் சொன்னேரெட் என்பவரால் தான் முதலில் இங்கு கல் மரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டு  1781 ஆம் ஆண்டு ஆவணப்படுத்தப்பட்டது. அந்த நாள் முதல் திருவக்கரை உலக வரை படத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தது என்றே சொல்ல வேண்டும்.  இங்கு  சுமார் 200 கல் மர தண்டுகள் 247 ஏக்கரில்  பரவி காணப்படுகிறது. மரங்கள் அனைத்தும் 3 முதல் 15 மீட்டர் நீளமும் 5 மீட்டர் சுற்றளவும் கொண்டதாக  உள்ளது. இங்கிருந்த மரங்கள் சுமார் பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட பெரு வெள்ளங்களால் வேரோடு சாய்ந்து இருக்க கூடுமென கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு இங்குள்ள கல் மரங்கள் பெரும்பாலானவை படுக்கை நிலையில் உள்ளதை சான்றாக  ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சில கல் மரங்களின் குறுக்குவெட்டுத் தோற்றதில் சுருள் வளையங்களை நம்மால் பார்க்க முடியும். இந்த சுருள் வளையங்களை எண்ணிக்கையை கொண்டு மரங்களின் வயதை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகின்றனர்.  கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் காடுகளில் இருந்த சில மரங்கள் மட்டும் காலப்போக்கில் கற்களை போல மாறி விடுகின்றன. அதாவது மரத்தில் இருந்த செல் போன்ற உயிருள்ள பகுதிகளில் சிலிகா எனப்படும் மணல் புகுந்து கற்கள் ஆகி விடுகின்றன. ஆனால் தோற்றத்தில் மரங்கள் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கும். இவ்வாறு 30 மீட்டர் நீளம் வரை மரங்கள் இருக்கின்றன. மேலும் இந்த மரங்கள் எல்லாம் பக்கத்திலுள்ள காடுகளில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்படுகிறது. ஏன் என்றால் இந்த மரங்களின் கிளைகள், இலைகள் இல்லாததால் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டிருக்கும் என்று கணிக்கின்றார்கள்.

இந்த மரங்கள் எந்த வகையை சார்ந்தது என்று பார்க்கும் போது ஒன்று  பூக்கும் தாவரங்கள் மற்றொன்று பூவாத் தாவரங்கள் ஆகிய இரண்டு வகையைச் சேர்ந்தவையாக இருக்கும் என்கின்றனர்.

உலகில் இப்படிப்பட்ட பல பூங்காக்கள் பல இடத்தில் இருக்கின்றன. அதில் தமிழ்நாட்டில் கூட அரியலூர் அருகில் ஒரு கல் மரப் பூங்கா உள்ளது. கல்லாகிப் போன மரங்களில் கூட ஆண்டுதோறும் ஏற்படும் வளையங்கள் இருப்பதால் இவை எவ்வளவு பழமையான மரங்கள் என்பதும் அக்கால காலநிலை எப்படி இருந்தது என்பதும் தெரிந்து கொள்ளமுடிகிறது. 

சில பகுதிகளில், கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு, வறட்சி முதலியனவற்றை அறியக்கூட கல் மரங்கள் உதவுகின்றன. அறிவியல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை பாதுகாத்திட 1957ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியப் புவியியல் துறையின் சார்பில் தேசிய கல்மர பூங்கா தொடங்கப்பட்டது. திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன் கோயிலுக்கு வரும் பலரும் கல்மரப் பூங்காவிற்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close