குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ! 

  இளங்கோ   | Last Modified : 14 Dec, 2018 12:38 am
kulasekarapatnam-dasara

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்று குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில். இது  திருச்செந்தூர் சுப்புரமணியசுவாமி  கோவிலை இணைந்த கோவிலாகும்.  குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் உறவு முறை ஏற்பட்டதாகவும், இதனால் தான் தசரா திருவிழா மைசூர் போலவே குலசையிலும் தோன்றியதாக கூறப்படுகிறது. இக்கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது. பெரும்பாலும் கோவில்களில் லிங்கத்தை நோக்கியபடி நந்தி இருக்கும். ஆனால் குலசையில் உள்ள அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நந்திக்கு பதில் சிம்மம் அமைந்துள்ளது.

அன்னை முத்தாரம்மன் ஞானமூர்த்திஸ்வரரோடு வடதிசை நோக்கி அமர்ந்து அருள்புரியும் காட்சி காண கிடைக்காத ஒன்று. ஒரே கல்லில் அன்னையும் அப்பனும் சேர்ந்து அருள்பாலிக்கும் அற்புத ஸ்தலம். அன்னையின் சிரசில் ஞானமுடி சூடி கண்களில் கண்மலர் அணிந்து, வீரப்பல் புனைந்து , மூக்கில் புல்லாக்கும் மூக்குத்தியும் அணிந்து , கழுத்தில் தாலிக்கொடியுடனும், வலது காலை மடித்து சந்திரகலையுடனும் காட்சி தருகிறாள் முத்தாரம்மன். அருகில் அமர்ந்திருக்கும் அப்பன் ஞானமூர்த்திஸ்வரர் ஒரு கையில் செங்கோல் தாங்கியும், மறு கையில் விபூதி கொப்பரையும் வைத்து இடது காலை மடித்து சூரியகலையுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கோவில் எதிரில் அமர்ந்திருக்கும் கொடிமரம் 32 அடி உயரம் செப்புத்தகட்டினால் கொடிமரம் வேயப்பட்டுள்ளது.

இங்கு ஆண்டுதோறும்  நவராத்திரி   திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவை வட்டார வழக்கில் தசரா என்று அழைக்கின்றனர். முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றதாகும். மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர். நவராத்திரி விழாவே இங்கு தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழாவின் போது தமிழ்நாட்டில் உள்ள எல்லா வகை இசைக் கருவிகளையும் குலசை தசரா திருவிழாவில் பார்க்க முடியும்.

விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம் நிகழ்ச்சி :

அகத்திய முனிவரின் சாபத்தால் எருமை தலையும், மனித உடலும் பெற்ற வரமுனி தனது விடாமுயற்சியால் பற்பல வரங்களை பெற்று, மகிஷாசூரனாக மாறி தேவர்களை துன்புறுத்தினார். மகிஷாசூரனின் இடையூறுகளை தாங்க இயலாத தேவர்கள், அன்னையை நோக்கி வேள்வி நடத்தினர். வேள்வியில் இருந்து தோன்றிய அன்னை பராசக்தி, மகிஷாசூரனை அழித்த நாள் தசரா திருவிழாவாக ஆண்டுதோறும்  கொண்டாடப்படுகிறது. சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவதால் 12-வது நாள் 108 பால்குடம் அபிஷேகம் செய்து அம்பாள் ஆவேசத்தை தணிக்கின்றார்கள். லட்சக்கணக்கான மக்கள் கூடி கொண்டாடும் இவ்விழா தமிழகத்திலேயே முதலிடத்தை பெறுகிறது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் போது பல  நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் காப்பு அணிந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில், பல்வேறு கோலங்களில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக ஒவ்வொரு ஊரிலும் கோவிலின் அருகில் தசரா குடில் அமைக்கப்பட்டு உள்ளது.   தூத்துக்குடி மாவட்ட மக்கள் குலசை முத்தாரம்மனிடம் வேண்டிக் கொண்டு முட்டை, கோழி, மாடு, ஆடு போன்றவற்றை தானமாக கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பக்தர்கள் கொடுக்கும் மாடுகளை பராமரிப்பதற்கு என்றே குலசையில் கோசாலையும் உள்ளது. திருவிழாவின் போது கொலுசு,வளையல் மற்றும் (ஒப்பனை) மேக்கப் பொருட்களை வாங்கி காளி வேடம் போடுபவர்களுக்கு தானமாக கொடுப்பதை  தூத்துக்குடி மாவட்ட மக்கள் வேண்டுதலாக நிறைவேற்றுகிறார்கள்.

அதுமட்டும்மல்லாமல் காளி வேடம் அணிந்து வருபவர்களை மதியம் வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போட்டு அவர்களுக்கு ஆடைகளும் வாங்கி கொடுக்கின்றனர். தசரா குழுவினரின் சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதனால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதி மக்கள் தங்கள் வயலில் அறுவடை நடந்ததும் முதல் படி நெல்லை குலசை முத்தாரம்மனுக்கு கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close