சிலைகடத்தல் சம்பவங்களும், தமிழக அரசின் மெத்தனமும்... பக்தர்களே எங்கே போய்வீட்டீர்கள்?

  பாரதி பித்தன்   | Last Modified : 21 Dec, 2018 12:08 am
statue-kidnapping-special-story

திங்கள் கிழமை சிவன் கோவில், செவ்வாய் கிழமை முருகன் கோவில், புதன் கிழமை சந்திரன் விழிபாடு,  வியாழன் தட்சிணா மூர்த்தி கோவில், வெள்ளிக்கிழமை துர்கை கோவில், சனிக்கிழமை நவகிரகவழிபாடு, ஞாயிற்றுக்கிழமை துர்கை, ராகு வழிபாடு இப்படி நிர்ணயத்துக் கொண்டு கோவில் கோவிலாக சுற்றி வருபவர்கள் இந்துக்கள். பால் அபிஷேகத்தில் குடம் குடமாக பால் ஊற்றும் போது தெய்வத்தை வணங்காமல், தான் கொண்டு வந்த  டம்பளர் பால் வரும் வரை காத்திருந்து அது ஊற்றப்படும் போது பத்துதலைமுறை பிரச்னைகளை தீர்க்க கோரி வேண்டிக் கொள்பவர்கள் நம் பக்தர்கள். ஆனால்  அதே கோவிலுக்கு பிரச்னை என்றால் தலை வைத்துக் கூட படுக்கமாட்டார்கள். இந்த மாதிரியான பக்தர்கள் கூட்டம் தான் சிலை திருட்டு கும்பலின் மூலதனமே.

இஸ்லாமிய படையெடுப்பாளர்கள், ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்து, எடுத்து சென்றது போக பல ஆயிரக்கணக்கான பாரம்பரிய சிலைகள் இன்றளவும் நம் கோவில்களில் உள்ளன. இதில் தங்கம், மரகதம், செம்பு, ஐம்பொன் என்று எல்லாவிதமான உலோக சிலைகளும், உயர்ரக ஜாதிக் கற்களில் செய்யப்பட்ட சிலைகளும் உள்ளன. நம்மை பொறுத்தளவில் அவை தெய்வத்தின் வடிவங்கள் தான். கற்பூரம் ஏற்றினால் போதும் கஷ்டத்தை தீர்த்துவிடும் அவ்வளவு தான் நமக்கும் கடவுளுக்கும் இருக்கும் தொடர்பு. நாம் கோவிலுக்கு போகாவிட்டாலும் வீட்டை தேடி வந்து அருள்பாலிக்கும் கருணை கொண்டவர் நம் கடவுள். அதைத் தாண்டி கோவில் பற்றிய அக்கறை பெரும்பாலனவர்களுக்கு கிடையாது. ஆனால் இந்த சிலைகளின் மதிப்பு வெளிநாடுகளில் பல கோடி. அதனால் தான் இவை திருட்டு போவது தொடர்கதையாகிவிட்டது. இது ஏதோ திட்டமிட்டு நள்ளிரவில் பூட்டை உடைத்து திருடியது மட்டும் அல்ல, அர்ச்சகர் தொடங்கி, அமைச்சர் வரை தொடர்பு வைத்துக்கொண்டு திருட்டு போக வைத்ததும் உண்டு.

இதையெல்லாம் கண்டு பிடிக்க வேண்டியது நம் காவல்துறையின் கடமை (பின்ன எதுக்கு சம்பளம் வாங்குகிறார்கள்). அவர்களோ சாதாரண தற்கொலை வழக்கில் பிரேதப் பரிசோதனைக்கு கடிதம் கொடுக்க கூட கார் வைத்து அழைத்தால் தான் வருவார்கள். வழக்கு பதிவுப் செய்ய வேண்டும் என்று ரொம்ப நல்ல போலீசிடம் சென்றால் கூட ஒரு குயர் பேப்பர், 4 கார்பன் சீட் கட்டாயம் கேட்பார்.

இந்த போலீஸ்தான் சிலை கடத்தலை தடுக்கும் என்று எண்ணினால் அதைவிட கோமாளித்தனம் ஏதும் இல்லை. நமக்கும் கூட பிள்ளையார் சிலையை திருடிட்டு போய்ட்டாண்டி, ஆமாண்டி என்பதுடன் அது பற்றிய கவலை பறந்து போய்விடும்.  ஸ்டேஷனில் புகார் கொடுக்கவோ, அது பற்றிய கேள்வி எழுப்பவோ நேரம் இருப்பதில்லை.

இது போன்ற சூழ்நிலையில் தான் எந்த சாமி செய்ய புண்ணியமோ வக்கீல் யானை ராஜேந்திரன் களம் இறங்குகிறார். யானை ராஜேந்திரனுக்கு கோவில் சிலைகளை பற்றி எதுவும் தெரியாது. ஒரு நாள் அவர் காரின் முன்கண்ணாடியில் சிலைகள் கடத்தல் தொடர்பான பேப்பரை எவரோ முகமறியாத நபர்கள் வைத்து செல்கிறார்கள். அதை படித்துபார்த்த அவர் இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்கிறார். வழக்கு தொடர்ந்த போது அவர் சிபிசிஐடி அல்லது சிபிஐ தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

ஆனால் கடவுளின் நேரம்  பொன் மாணிக்கவேல் வந்து சிக்குகிறார்.  1983ம் ஆண்டு பெருகிய சிலைகடத்தல் குற்றங்களை தடுக்க தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்படுகிறது. அதில் இருந்து பொன் மாணிக்கவேல் பொறுப்பு ஏற்கும் வரை எத்தனை சிலை கடத்தல் வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டன. அதில் எத்தனை மீட்கப்பட்டுள்ளன என்று பார்த்தாலே பொண்மாணிக்கவேல் சிந்திய வியர்வை தெரியும். கடந்த 2012ம் ஆண்டில் அவர் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டார். பி்ன்னர் 2015 ஆண்டில் ஐஜியாக பதவி உயர்வு பெற்று இதே பிரிவில் தொடர்ந்தார்.  பின்னர் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டபோது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

அப்போது தொடங்கியது அரசுக்கும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையிலான மோதல். இதில் அரசின் நிலைப்பாடு என்பது விருப்பத்தின் பேரில் அல்ல, நிர்பந்தத்தின் பேரில் என்பதுதான் உண்மை. நம்மை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிட்டால் நாம் யார் யாரை பிடிப்போம், அதில் இருந்து தப்பிக்க என்ன என்ன நுாதன வழிமுறைகளை கடைபிடிப்போம் என்பதை யோசித்தால் இதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

அந்த வழக்கில் கோர்ட் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு தலைவராக பொன்.மாணிக்கவேலை பதவியில் நீடிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது மட்டுமின்றி, அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பின்னர் அவர் குஜராத் அகமதாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலை ஆகியவற்றை மீட்டுக்கொண்டு வந்தார். இதற்கு முன்பு இந்த சிலைகளை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. 

 எப்படி இருந்தாலும் இன்னும் 2 மாதம் தான் அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்ற நினைப்பில் பொன். மாணிக்கவேல் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் தமிழக அரசு இருந்துவந்தது. ஆனாலும் வெளியே தெரியாமல் உள்குத்துகள் நடந்து வந்தன. ஆனால் அவ்வப்போது நீதிமன்றம், உள்குத்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வழக்கு தொய்வுஅடையாமல் பாதுகாத்தது.

எதிர்பார்த்தபடியே பொன்மாணிக்கவேல் ஓய்வு பெற்றார். அதற்கு முன்பாகவே டிஜிபி அந்தஸ்தில் அதிகாரி ஒருவரை சிலைதடுப்பு பிரிவுக்கு மாநில அரசு நியமனம் செய்தது. அதாவது ஏதாவது அதிசயம் நிகழ்ந்து பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு கிடைத்தால், அவர் அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ள அதிகாரியிடம்  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கையை மாநில அரசு செய்தது.

ஆனால் கோர்ட் அதற்கும் ஆப்பு வைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அரசு சுப்ரீம்கோர்ட்டில் அப்பீலுக்கு போனது ஆனால்.சுப்ரீம்கோர்ட் அதற்கும் ஆப்பு வைத்துபொன்.மாணிக்கவேலைக் காப்பாற்றியது. இதனால் அரசு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதற்கு அவர்கள் காவல்துறை வழக்கமாக செய்யும் நடைமுறையையே கடைபிடித்தது தான் வேதனையான விஷயம்.

பொதுவாக திருட்டையோ, .கொள்ளை போன்ற சம்பவங்களிலோ அல்லது விபச்சார தடுப்பு வழக்கு போன்றவற்றில் கூட நேரடியாக காவல்துறை குற்றவாளியை பிடித்தால் கூட அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்காக போலீஸ் சொன்னால் செய்யக்கூடிய நிர்பந்தத்தில் உள்ளவர்களை பிடித்து, அவர்களிடம் கேட்டு வாங்கி புகார் பதிவு செய்வார்கள். அவர்கள் தான் சாலை ஓரமாக நடந்து சென்ற போது அழகிகள் உடலுறவுக்கு அழைத்ததாகவும்,தான் மிகவும் நல்லவனாக இருப்பதால் நேரே போலீஸ் ஸ்டேஷன் வந்து அழகியை பற்றி புகார் செய்ததாகவும் தெரிவிப்பார். உடனே போலீஸ் பாய்ந்து சென்று அந்த அழகியை கைது செய்யும்.

இதே போன்று தான் பொன் மாணிக்கவேல் தொடர்பாகவும் நடந்தது கடந்த 2012ம் ஆண்டில் அவர் நியமிக்கப்பட்டதில் இருந்து எவ்விதாமான புகாரும் கூறதா தமிழக காவல்துறை அதிகாரிகள் தற்போது   பொய் வழக்கு போட வற்புறுத்துகிறார். இழிவாக பேசுகிறார் என்றெல்லாம் குற்றம்சாட்டி உள்ளனர். ஏற்கனவே அறநிலையத்துறை சங்கங்கள் பொன்மாணிக்கவேலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்த போது மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற முடியவில்லை. ஆனால் அவர்களுக்குள்ளாவே தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு பொன்மாணிக்கவேல் ஊடங்களில் பதில் கொடுத்துள்ளார். இவை அனைத்தும் தற்போது மக்கள் மத்தியில் பரவி உள்ளன.

சம்பவங்களின் தொடர்ச்சியாக எழும் கேள்வி இது தான் பொன்மாணிக்கவேலை வீட்டிற்கு அனுப்பி விடலாம். அதற்கு பதிலாக யார் வந்து இந்த வழக்குகளை தொடர்ந்து நடத்துவார். அல்லது அனைத்திற்கும் சுபம் போட்டுவிட்டு கடந்து செல்வார்களா? இது நடக்கத்தான் பெரும் வாய்ப்பு உள்ளது. சிலைகடத்தல் காரணமாக லாபம் மட்டும் தான் என்பதால் யாரும் அதை தடுக்க வேண்டும் என்றும் கருதப்போவதில்லை. இந்த நேரத்தில் தான் பக்தர்கள் களம் இறங்க வேண்டும். காணாமல் போனது உன் வீ்ட்டில் நடந்த நல்லது, கெட்டதுக்கு ஆதரவாக இருந்த கடவுள். அவரை காப்பாற்றும் முயற்சியில் நாம் களம் இறங்காவிட்டால் இனி அந்த ஆண்டவன் கூட நம்மை காப்பாற்ற முன்வர மாட்டான்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close