மரு போக்கும் திருமூர்த்தி மலை அமணலிங்கேஷ்வரர்  !

  இளங்கோ   | Last Modified : 23 Dec, 2018 01:00 am
thirumoorthy-malai-amanalingeshwarar-special-story

தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருமூர்த்தி மலை.  இவை உடுமலைப்பேட்டை அடுத்துள்ள ஆணைமலையையோடு உள்ள கோவிலின் அருகில் தோனி ஆற்றங்கரையோரம் மும்மூர்த்திகளாக  அமணலிங்கேஷ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார் சிவன். 

கைலாயத்தில் நடைபெற்ற இறைவனின் திருமண கோலத்தை குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே பஞ்சலிங்கம் என கூறப்படுகிறது. எனவே கைலாயக் காட்சியை இறைவன் திருமூர்த்தி மலையிலும் காட்டியதால், இத்தலம் தென் கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக காட்சியளிக்கின்றனர். இச்சன்னதியில் உள்ள மும்மூர்த்திகள் மீது சந்தனம் எறிந்தால் சகல பிரச்சனைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அமணலிங்கேஷ்வரர் கோவிலில் உள்ள மும்மூர்த்திகளை வழிபடும் பக்தர்கள் சந்தனத்தை வாங்கி கடவுள் உருவச் சிலையின் மீது எறிந்து விசித்திரமாக வழிபடுகின்றனர். அப்படி எறியும் சந்தனம் மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால் நினைத்த காரியம் உடனே நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இங்கு சிவன் ஞான குருவாக விளங்குகிறார்.  

திருமூர்த்தி கோவில் மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. இங்குதான் அத்திரி மகரிஷியும் அவரது மனைவியும் பஞ்ச லிங்கத்தை வழிபட்டு வந்ததாக பழங்கால கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இன்றும் இங்கு வரும் பக்தர்கள், இந்த பஞ்ச லிங்கத்தை அன்றாடம் வழிபட்டு செல்கின்றனர். பஞ்ச லிங்கத்தை அடுத்து சப்த கன்னியருக்கும் தனி சன்னதி உள்ளது. மற்றொன்று அத்திரி மகரிஷியின் மனைவி அம்மணமாக வந்து மும்மூர்த்திகளுக்கு உணவு அளித்த தலம் என்பதால்  இறைவன் அமண லிங்கேஸ்வரர் ஆனார் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை  நாளில் இங்கு பக்தர்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர். 

ஆடி, தை உள்ளிட்ட அமாவாசை நாளில் இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுக்கின்றனர். இக்கோயிலை சுற்றியுள்ள வனப்பகுதியில் அகத்தியர் தவமிருந்ததாக கூறப்படுகிறது. அகத்திய முனிவர் இறைவனின் திருமணக்கோலத்தைப் பொதியமலையில் கண்டு களித்ததை மீண்டும் ஒரு முறை காண வேண்டி அதற்கான இடத்தை இறைவன் குறிப்பால் உணர்த்திய இடமே திருமூர்த்தி மலை என கூறப்படுகிறது. 

அமண லிங்கேஸ்வரர் கோவிலுக்கு அருகே  உள்ள பாலாற்றில் நீராடிவிட்டு இங்கு உள்ள கன்னிமார்களை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் தான் மும்மூர்த்திகளும் வந்து தங்கியதாகக் புராண வரலாற்றில் கூறப்படுகிறது.  வடக்கு நோக்கி உள்ள பாறையில் மும்மூர்த்திகளின் உருவங்கள் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளதால் அமணலிங்ககேஸ்வரர் என போற்றப்படுகிறது. பாறையைக் குடைந்து கருவறை அமைக்கப்பட்டுள்ளது. 

அமணலிங்ககேஸ்வரர் கோயிலின் முன்புள்ள முப்பதடி உயரமுள்ள தீபகம்பம் சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. உடலில் மரு உள்ளவர்கள் ஒரு துணியில்  உப்பு, மிளகை கட்டி கோயிலுக்கு பின்னால் உள்ள மருதம் மரத்தில் கட்டி விட்டு கோயிலை மும்முறை வலம் வந்து தரிசித்தால் மரு உதிர்ந்து விடுமாம். அப்படிபட்ட சக்தி அமணலிங்கேஸ்வரருக்கு உண்டு என்பது மக்களின் நம்பிக்கை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close