சோத்துப்பாறை அணை.... பெயர்க்காரணம் என்ன?

  இளங்கோ   | Last Modified : 29 Dec, 2018 11:27 am
sothuppaarai-special-story

தேனி மாவட்டம் இயற்கையிலேயே பசுமையான ஒரு மாவட்டம். இம்மாவட்டத்தில் அணைகளும், ஆறுகளும், ஏரிகளும் நிறைந்தவண்ணம் உள்ளது. இங்கு சுருளி அருவி, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி, எலிவால் அருவி என பல அருவிகள் உள்ளன‌. பலருக்கு தெரியாத ஒன்று தமிழகத்தின் இரண்டாவது உயரமான அணை சோத்துப்பாறை அணை என்பது. ஆம் இன்று நாம் சோத்துபாறை அணை பற்றி தான் பார்க்கப் போகிறோம்…. 

சோத்துப்பாறை என்று பெயர் வரக் காரணம் என்ன? 

பண்டைய காலத்தில் சோத்துப்பாறையில் மழை பொழியாவிட்டால் 12 கலம் நெல்லைக் குத்தி அனைவருக்கும் பொதுவாக அன்னதானம் வழங்குவார்களாம். பிரார்த்தனைக்குப் பிறகு பாறையைக் கழுவி, வடை பாயசத்தோடு சாப்பிட்ட உடன்  மழை கொட்டுமாம். இப்படியொரு மூடநம்பிக்கையின் காரணமாகவே சோத்துப்பாறை எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.  
கி.பி.1891 ஆம் ஆண்டு சுகாதாரப் பொறியாளராக பணியாற்றிய ஜோன்ஸ் என்பவரால் பெரியகுளம் நகருக்குத் தேவையான குடிநீர்திட்டம் ஒன்றை தயார் செய்து மதராஸ் கவர்மெண்டிற்கு அனுப்பினார். கி.பி.1895 ஆம் ஆண்டு மேற்குமலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள பேரீஜம் ஏரியிலிருந்து தண்ணீரை பெரியகுளத்திற்கு கொண்டு வருவதற்கு அன்றைய ஜமீன்தார் திவான் பகதூர் வெங்கிட்ட ராமபத்ர நாயுடு நடவடிக்கை மேற்கொண்டார். சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து குழாய்த்தொட்டி என்ற இடத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இவை சோத்துப்பாறை அணைக்கு கொண்டுவரப்படுகிறது.  

இரண்டு உயர்ந்த மலைகளுகளுக்கிடையே வருகின்ற ஆற்றை மறித்து அணைக்கட்டும் திட்டம் உருவாக்குவதற்காக சோத்துப்பாறை அணைத்திட்டத்திற்குத் தேவையான வனப்பகுதி  நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.  இரண்டுமலைகளுக்கு இடையே அணைக்கட்டுமானம் பணி துவங்கி 2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.  அணையின் மொத்த நீளம் 345 மீட்டர் மற்றும் நீர்வரத்தின் பரப்பு 38.40 சதுரகிலோ மீட்டர் ஆகும். நீர்வரத்தின் முழுக்கொள்ளவு 100 மில்லியன் கன அடி. அணையின் அதிகபட்ச உயரம் 57 மீட்டரும், அணையின் மேல்மட்ட அகலம் 7.32 மீட்டரும் உள்ளது. 2001 ஆம் ஆண்டு முதன்முதலாக‌ அணை நிரம்பியது. 

அணையின் பின்புறம் காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரை அருந்துவதற்கு ஏற்ற இடமாக உள்ளது. சோத்துப்பாறை அணையால்  பல கிராமங்கள் பயனடைகின்றன. சோத்துப்பாறை அணை கூட்டுக்குடிநீர் திட்டதின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்கிறது. சோத்துப்பாறை அணை சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு ரம்மியமாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது.

சோத்துப்பாறை அணையிலிருந்து பார்த்தால் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரைக் காணலாம். அணைக்கு மேலே டைகர் பால்ஸ் என்ற அருவி உள்ளது. அணையில் பல பூங்காக்கள் உள்ளன‌. கண்ணுக்கு எட்டிய வரை மாந்தோப்புகள் அதிகம் இருப்பதால் சொல்லவா வேண்டும், படித்தவுடன் அணையை சுற்றிபார்க்க வேண்டும் என்று தோனுகிறதா? வராக ஆற்றின் குறுக்கே கட்டபட்டுள்ள இந்த அணையை பார்க்க பெரியகுளம்,தேனி,அல்லிநகரம், கொடைகானல், மற்றும் மதுரை வழியாக செல்லலாம்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close