சிலிர்க்க வைக்கும் ஆகாயகங்கை...!

  இளங்கோ   | Last Modified : 02 Jan, 2019 11:34 pm
aagaaya-gangai-special-story

நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் உள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது ஆகாயகங்கை அருவி. இது கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது. 2000 மீட்டர் உயரம் கொண்ட மலையில் இருந்து  கொட்டும் இந்த அருவி, மிக உயரமான பாறைகளில் இருந்து  இடையூறு ஏதுமின்றி நேரடியாக கொட்டுகிறது.  அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.  

கொல்லிமலைக்கு சுற்றுலா செல்பவர்கள் ஆகாயகங்கையை தவிர்க்கவே மாட்டார்கள்.  அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கிறது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. கொல்லியின் மைய சிற்றூரான செம்மேட்டிலிருந்து 12 கி.மீ தொலைவில், மலைகளுக்கிடையே உள்ள ஓர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. மலையிலிருந்து கிட்டதட்ட ஆயிரம் படிக்கட்டுகள் இறங்கிய பிறகே அருவியைக் காண முடிகிறது.   இங்கு நீர்வீழ்ச்சிக்கு இறங்கும் இடத்தில் முடவாட்டு கால் கிழங்கு சூப் கிடைக்கிறது.

முடவாட்டு கால் என்பது கொல்லியில் விளையும் ஒரு கிழங்கு வகை. அதை பார்ப்பதற்கு ஆட்டின் கால்களைப் போல இருப்பதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.  இது மூட்டு வலிக்கு உகந்தது என்றும் கூறுகிறனர். எனவே, படிக்கட்டுகளில் இறங்குவதற்கு முன்போ அல்லது ஏறிய பிறகோ சூப் குடிப்பது நல்ல பலனை தருமாம்.  ஒரு காலத்தில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல படிக்கட்டுகள் எல்லாம் இருந்ததில்லை. ஆனால் ஆகாய கங்கை அருவிக்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலாத் துறை படிக்கட்டுகள் அமைத்துள்ளது. முறையான படிக்கட்டுகள், பிடிப்புக்கு இரும்புக்கம்பிகள், ஆங்காங்கே இளைப்பாறுவதற்கு ஏற்ற இடங்கள்  உள்ளிட்ட வசதிகளும் இங்கு உள்ளன.  

கங்கைக்கு செல்லும் போது குடிநீரும், தேவைப்பட்டால் க்ளுக்கோஸ் மற்றும் முதலுதவி பொருட்களையும் கொண்டு செல்வது நல்லது என்று கூறுகின்றனர்.  படிகட்டுகள்  மூலம் இறங்கும் போது அருவியின் சத்தம்  கேட்டதும்  நம் உடல் களைப்பை மறக்கடித்து அருவியின் மடிக்கு அழைத்துச் செல்கிறது. ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியை காணும் அந்த நொடியில் இவ்விரு உணர்வுகளும் நமக்கு ஒருங்கே கிடைக்கிறது.  தண்ணீரின் அளவு அதிகமானால் அருவிக்கு அருகே கூட செல்ல முடியாது. ஏனென்றால்  அருவியின் சாரலும் கடுங்குளிரும் இணைந்து நாம் அங்கு செல்லாத வகையில் தடுத்து நிறுத்துகிறது. அருவியின் சீற்றம் குறைந்துவிட்டால் நேரடியாக அருவிக்கே செல்லலாம். கொட்டும் அருவியில் காயமேற்படாமல் கற்களால் அடிப்பது போல பொத பொதவென்று ஊற்றுகிறது அருவி. கொல்லி மலையில் உள்ள பல்வேறு மூலிகைகளை கடந்துவந்து அருவியாக வந்து கொட்டுவதால்  மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.   

அருவியில் குளித்துவிட்டு படியேறும்போது சற்று சிரமம்மாக இருந்தாலும்  ஆகாய கங்கை தரும் அனுபவம் அந்த சிரமத்தை  முழுமையாக குறைத்து விடுகிறது. ஆகாய கங்கை தவிர்த்து கொல்லியிலேயே வேறு சில அருவிகளும் உண்டு என்று  சொல்கின்றனர்.  இங்கு ஒரு உயிரியல் பூங்காவும், படகு சவாரியும் உள்ளன. மேலும் அங்கு உள்ள அரப்பளீஸ்வரர் கோவிலையும் தரிசித்து விட்டு செல்லாலாம். கொல்லிமலையில் வாழ்ந்த சிவனடியார்கள் இவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்றினை வைத்து வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அறை என்றால் சிறிய மலை என்று பொருள்.  அறைப்பள்ளி என்றால் மலைமேல் உள்ள கோவில் என்றும், இறைவன் ஈஸ்வரர் என்பதால் அறைப்பள்ளி ஈஸ்வரர் என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் காலபோக்கில் மருவி அறப்பளீஸ்வரர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இவ்விடம் விளைநிலமாக மாறி, சிவலிங்கம் மண்ணுள் புதைந்ததாகவும், பின்னாளில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது அவருடைய கலப்பை சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் பட்டு அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு மக்கள் இங்கு கோவில் கட்டி வழிபட்டதாக கூறப்படுகிறது. இப்பொழுதும் கூட அறப்பளீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் அத்தழும்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close