உலகின் பழமைவாய்ந்த அணை எது தெரியுமா...?

  இளங்கோ   | Last Modified : 06 Jan, 2019 03:58 pm

kallanai-special-story

உலகின் பழமைவாய்ந்த அணை எங்குள்ளதென்றால் அது நமது தமிழகத்தில் தான். அதுவே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணை. தஞ்சை காவிரி மீது கட்டப்பட்டுள்ள இந்த கல்லணை சோழ மன்னர்களில் மாவீரனாக போற்றப்படும் கரிகால சோழனால் கட்டப்பட்டது. உலகில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளில் மிகப் பழமையானதும், பல நூற்றாண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருவதும் இந்த கல்லணை தான். இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் சங்ககாலத்தில் கட்டப்பட்டது.  

கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக்  கழனிகளை செழுமையாக்கியதை பழங்கால கல்வெட்டுகளிலும் பாடல்களிலும் இன்றும் காண முடிகிறது.  கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடி, இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 2000 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவதை எவராலும் மறுப்பதற்கு இல்லை.  

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு, அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். பின்னர் காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதையும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். இறுதியாக முதலில் வைக்கப்பட்ட பாறை கடினத்தளத்தை அடைந்த பிறகு, மேல் உள்ள பாறைகளுக்கு நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடும் போது  இரண்டும்  பாறைகளும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, அதி வேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும்,வறட்சியாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது 1829ஆம் ஆண்டில் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். பல காலம் கல்லணை மணல் மேடாக இருந்ததால் நீரோட்டம் தடைப்பட்டது. பல காலம் பயனற்று கிடந்த கல்லணையை, தைரியமாக சிறு சிறு பகுதிகளாக பிரித்து மணல் போக்கிகளை அமைத்தார். பின்னர் கல்லணையை பல ஆண்டுகளாக ஆராய்ந்து மேற்க்கண்ட விளக்கத்தை கண்டுபிடித்தார். இவரை இந்திய நீர் பாசனத்தின் தந்தை என்றும் போற்றப்படுகின்றனர். 

கல்லணையை  மெக்கன்சி ஆவணக்குறிப்புகளில்  அனணக்கட்டி  என குறிப்பிடப்பட்டுள்ளது. 1853ஆம் ஆண்டில் பேயர்டு சுமித்  என்ற ஆங்கில பொறியியல் வல்லுனர்  தென்னிந்தியாவின் பாசனம்  என்ற நூலில் கல்லணையை ஒரு மிகச் சிறந்த பொறியியல் சாதனை எனக் குறிப்பிட்டுள்ளார். காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை   தி கிராண்ட் அணைக்கட்  (  மகத்தான அணை ) என்று அழைத்தார்  சர் ஆர்தர் காட்டன் .  பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகிற்கு எடுத்து கூறினார். அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று.

பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திற்கும் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.  அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர்  கொள்ளிடத்திற்கு திருப்பி விடப்படுவதால், டெல்டா மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து  காப்பற்றப்படுகிறது. கல்லணை கட்டப்பட்டு ஏறத்தாழ 1900 ஆண்டுகள் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

1839 ஆம் ஆண்டில் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது.  இந்த பாலத்தை  காண பல்வேறு இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும்  விளங்குகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.