1300 மீட்டர் உயரம் கொண்ட கொல்லி மலை...!

  இளங்கோ   | Last Modified : 06 Jan, 2019 06:29 pm

namakkal-kollimalai-special-story

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர்தான் கொல்லிமலை. மலையில் உள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் அதை தாண்டி ஒரு சிறந்த சுற்றுலா தளம் என்று நாம் அனைவரும் அறிந்ததே. 

ஆனால் கொல்லிமலை சித்தர்கள் வாழ்ந்த  ஒரு புனித தளம் என வரலாறுகள் கூறுகின்றன.  கொல்லிமலையின் மறைபொருளை இங்கு காணலாம்.  

முன்பொரு காலத்தில் தவம் மேற்கொள்ள அமைதியான ஓரிடத்தை தேடி அலைந்த முனிவர்களுக்கு ஒரு சிறந்த இடம் அமைந்தது அதுதான் கொல்லிமலை. அப்போது முனிவர்கள் தவம் மேற்கொண்டிருக்கும் போது, தவம் செய்ய விடாமல் அரக்கர்கள் தொடர்ச்சியாக இடையூறு  செய்துள்ளனர். அரக்கர்களின் அட்டூழியத்தை எப்படி தடுத்து நிறுத்துவது என்று எண்ணி கொண்டிருந்த வேளையில் கொல்லிப்பாவையிடம் முனிவர்கள் முறையிட்டதாக கூறப்படுகிறது.  

ஆதிகாலத்திலிருந்தே கொல்லிமலை  எட்டுக்கை அம்மன் என்று அழைக்கப்படும் கொல்லிப்பாவை அம்மனால் பாதுகாக்கப்பட்டு வருவதால், அப்போது எட்டு கைகளுடன் தோன்றிய கொல்லிப்பாவை அரக்கர்களை வதைத்ததாகவும்,  பின்னர் முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று கொல்லிப்பாவை இம்மலையிலேயே நிரந்தரமாக தங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இம்மலை கொல்லிமலை என்று அழைக்கப்படுகிறது. 

இயற்கையையின் அழகை உள்ளடக்கிய  கொல்லிமலை, 1000 முதல் 1300 மீ உயரம் மற்றும் 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், இன்றும் கொல்லிமலை இயற்கை எழிலுடனே காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. 

கொல்லிமலை பகுதியை பழங்கால பாடல்களில் மன்னன்  ஒருவன் ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். மேலும் இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள மதுவனம் எனும் மலைப்பிரதேசம் கொல்லிமலையாக இருக்கக்கூடும் என்றும் சிலர் கூறுகின்றனர்.  

கொல்லிமலை உள்ள பள்ளத்தாக்கு தலை சுற்றவைக்கும். ஆனால் கொல்லிமலையின் இயற்கை சூழலில் நெடுந்தூரம் நடப்பதில் ஆர்வமுள்ளவர்கள், மலையேற்றத்தில் ஆர்வமுள்ளவர்கள்  மற்றும் இயற்கை ஆர்வலர்களால் கொல்லிமலை தொடர்ந்து  போற்றப்பட்டு வருகிறது.  கொல்லிமலையைச் சுற்றிலும் சுற்றுலாத்தலங்களாக,  ஆகாய கங்கை அருவி, அறப்பளீஸ்வரர் கோயில், வாசலூர்பட்டி படகுத் துறை, மாசிலா அருவி ஆகியவை விளங்குகின்றன.  26 கிலோ மீட்டர் தூரம் உடைய இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.  சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருக்கிறது. இயற்கை சூழலை ரசிக்கும் அளவிற்கு ஏற்ற இடம் என்றால், தமிழ் நாட்டில் கொல்லிமலையும் ஒன்று என்பதை நம்மால் மறுக்க இயலாது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.