நாகக் கன்னிகள் 21 மாதங்கள் வழிபாடு செய்த அவிநாசியப்பர் கோவில்...!

  இளங்கோ   | Last Modified : 08 Jan, 2019 06:20 pm

avinachiappar-kovil-special-story

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்று அவிநாசி அவிநாசியப்பர் கோவில்.  தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது.  

இக்கோவில் சுமார் 2000 வருடங்கள் பழமையான கோவிலாகும். இக்கோவில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு திசையில் 7 நிலை ராஜ கோபுரத்துடன் நிலை கொண்டுள்ளது.  இங்கே அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு கருணாம்பிகை காட்சி தருகிறாள் அம்பாள். சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். ஏனென்றால் விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பித்து விடுபடலாம் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 

ஒரு நாள்  சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்த போது எதிரும் புதிருமாக இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அமங்கல ஒலியும் எழ அதன் காரணத்தைக் கேட்டார்.  அப்போது  ஐந்து வயதுள்ள இரு அந்தச் சிறுவர்கள் மடுவில் குளிக்கச் சென்றதாகவும், அவர்களில் ஒருவனை மடுவில் இருந்த முதலை விழுங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.  மேலும் தப்பிப் பிழைத்த சிறுவன் வீட்டில் சடங்குகள் நடக்கும் விழா ஒலி என்றும், இறந்த சிறுவனின் வீட்டில் சோகத்தால் அழும் ஒலி என்றும் கூறினர். இறந்த சிறுவனின் பெற்றோர் சுந்தரர் வந்திருப்பதை அறிந்து அவரின் உதவியை நாடினர். அப்போது சுந்தரர் எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகம் பாடினார். 

இறைவனுக்கு கட்டளை இடும் வகையில் பாடும் போது சிவபெருமான் அருளினால் நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அதனூடே வந்து சுந்தரரிடம் சிறிய வயது பாலகனாக உண்ட சிறுவனை இப்போது பெரிய வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது. இத்தகைய அற்புதம் நிகழ்ந்த சிவஸ்தலம் தான் அவிநாசி என்று அழைக்கப்படும் திருப்புக்கொளியூர் ஆகும். 

அவிநாசியப்பர் கோவிலின் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோவில் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு. பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது.

இக்கோவிலின் உள் பிரகாரத்தில் நுழைந்தால் மூலவர் அவிநாசியப்பர்  சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளுவார். உள் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சிற்பங்கள் உள்ளன.  நடராஜர் மண்டபத்திலுள்ள ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனி எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் அளவில் அமைந்துள்ளது. ஸ்ரீகாலபைரவர் சந்நிதியும் இத்தலத்தில் சிறப்பிற்குரியது. இத்தலத்தில்  நாகக் கன்னிகள் 21 மாதங்கள்  வழிபாடு செய்ததாக  கூறப்படுகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.