பச்சை ரோஜா மலரும் குன்னூர் சிம்ஸ் பூங்கா...!

  இளங்கோ   | Last Modified : 08 Jan, 2019 07:26 pm

green-rose-flower-at-kunnoor-sims-park

நீலகிரி மாவட்டம் என்றாலே சுற்றுலா தளம் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் இங்கு அரிய வகை தாவரங்கள், மூலிகை செடிகள் மற்றும் அபூர்வ, பழமை வாய்ந்த மரங்கள்  போன்றனவை அதிகம் உள்ள பகுதி என்றால் குன்னூர் சிம்ஸ் பூங்கா தான். 

இவை இயற்கையாகவே தோன்றியது. ஜே.டி.சிம் என்பவரின் பெயரால் நிறுவப்பட்ட இந்தப் பூங்கா ஒரு தோட்டக்கலை மையமாகும். 1874-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிம்ஸ் பூங்கா, சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இவை அரசு மலர் கண்காட்சி மைதானத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ளதால் மேலும் அழகு சேர்கிறது சிம்ஸ் பூங்காவுக்கு. இங்கு பல வெளிநாட்டு மரங்களும், செடிகளும் பயிரிடப்படுகின்றன. 

இங்கு உள்ள பூங்காவில் அரிய வகைச் செடிகொடிகளை பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை தருகிறது. இப்பூங்காவில் 86 தாவரக் குடும்பங்களை சார்ந்த 1200 வகையான தாவரங்கள் உள்ளன. மிக அரிதான மரங்கள் இப்பூங்காவில் காணப்படுகின்றன. பன்னிரண்டு ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா ஆயிரத்துக்கும் அதிகமான தாவரங்களின் இருப்பிடமாக உள்ளது. இங்கு மேடு பள்ளங்கள் உடைய நிலப்பகுதியுடனும் பல்வேறு விரும்பத்தக்க அம்சங்களுடனும் இப்பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா ரம்மியமான பள்ளதாக்கின் அடிவாரத்தில் அமையப் பெற்றுள்ளது. 

நகரத்தின் ஈர்ப்புமிக்க மையப் பகுதியில் அமைந்துள்ளதால் பார்வையாளர் எவரும் இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்காவினைப் பார்த்து மகிழும் வாய்ப்பினை விட்டு விடுவதில்லை. இங்கு அரிய வகை தாவரங்கள், மூலிகை செடிகள் மற்றும் அபூர்வ, பழமை வாய்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளதால், நீலகிரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவிற்காக அழைத்து வரப்பட்டு பூங்காவின் வரலாறு குறித்து எடுத்து கூறப்படுகிறது. 

ஜப்பானிய முறைப்படி உருவமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவில் கமேலியா ,மக்னோலியா, பைன் போன்ற அரிய மரங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன. குன்னூரின் குளிர்ச்சியான காலநிலையில் செழித்து வளரும் இம்மரங்கள் ஆண்டுமுழுவதும்  ரசிக்கத் தக்க அழகுடன் காணப்படுகின்றன.  

பச்சை ரோஜா பூக்களை குன்னூர் அரசு சிம்ஸ் பூங்காவிலும் வளர்க்க தோட்டக்கலைத் துறையினர் முடிவெடுத்தனர். ஆனால் அது முயற்ச்சி தொல்வியில் முடிந்தது.   தற்போது பசுமை குடிலில் மிதமான தட்பவெட்ப நிலையில் பச்சை ரோஜா செடிகள் வளர்த்து  சில தினங்களுக்கு முன்பு  நடவு செய்யப்பட்டது. தற்போது ஒரு பச்சை ரோஜா பூத்துக்குலுங்குகிறது. இந்த பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆச்சரியத்துடன் இந்த பச்சை ரோஜாவை பார்த்து ரசித்து புகைப்படங்களும் எடுத்து மகிழ்கின்றனர். 

இங்கு உள்ள இயற்கை காட்சிகள், மலர் செடிகள், மினி படகு இல்லம், சிறுவர் பூங்கா ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். ஆண்டுதோறும் மே மாதத்தின் கடைசி வாரத்தில் சிம்ஸ் பூங்காவில் பழக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அப்போது இங்கு சுற்றுலா பயணிகளை கவர்ந்திடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற சுற்றுலா தளமாக உள்ளது குன்னூர் சிம்ஸ் பூங்கா.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.