நாங்களும் இருக்கிறோம் சார்...!

  பாரதி பித்தன்   | Last Modified : 09 Jan, 2019 12:48 am

we-too-here-sir-book-publication-special-story

சென்னைவாசிகள், சில உயர் நடுத்தரவர்க்கத்தினரின் திருவழா சென்னையில் தற்போது புத்தகத் திருவிழாவாக நடைபெறுகிறது. டிவி, சமூக வலைதளங்கள், இணையத்தில் இருந்து இறக்கி படிக்கும் வசதி என்று பலவித சிக்கல்களுக்கு இடையிலும் வாசிப்பு உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு புத்தகத் திருவிழாவின் வெற்றியே சாட்சி.

புத்தகத் திருவிழாவின் வெற்றி இவ்வளவு தானா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். மிகப் பெரிய  வெற்றிவை வாய்ப்பு இருந்தும் பெற முடியவில்லை என்பதற்கு புத்தகத்தின் விலைதான் மிகப் பெரிய காரணம்.

ஆசைப்பட்டு தொட்டு விடுவேன், காசைக் கண்டு விட்டு விடுவேன் கதை தான். புத்தக்கத்தின் வடிவமைப்பு, பொருள் அமைப்பு போன்றவை வாங்க துாண்டினால் கூட விலை நெருங்கவே முடியாத அளவிற்கு இருக்கும்.

இன்றைக்கு பலரின் சம்பளம் 10 ஆயிரத்தை தாண்டாத நிலையில் வாசகர்கள் புத்தங்கள் வாங்கி வாசிக்க வேண்டும் என்றால் அவர்கள் சம்பளத்தில் கனிசமான தொகை செலவாகும்.

கம்யூனிச சிந்தனை கொண்ட ரஷ்யா தன் கருத்துக்களை உலகெங்கும் பரப்ப எண்ணி நுால்களை வெளியிட்டது. தமிழகத்தில் மீர் பதிப்பகம் என்ற பெயரில் பல ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் வெளியீடுகள் கிடைத்தன. விலை மிக மிக சொற்பம் தான். அதே நேரத்தில் நுாலின் தரம் மிக அதிகம். அந்த பதிப்பகத்தின் பின்னணியில் அந்த அரசும் இருந்தது என்று நினைக்கிறேன்.

தமிழக அரசும் கூட நுாலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதுடன் தன் கடமை முடிந்து விட்டு என்று எண்ணக் கூடாது. சிறு படங்களுக்கு மானியம் தருவது போல பதிப்பகங்களுக்கும் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கலாம். அதைக் கொண்டு சம்பந்தப்பட்ட பதிப்பகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்ட நுால்களையாவது மலிவு விலையில் வெளியிடலாம்.

அடுத்த கட்டமாக, ஒரு புத்தகம் உயர் தரத்தில் வெளியிடப்படும் போதே மலிவு விலை பதிப்பும் வெளியிட வேண்டும் என்று விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ப குறைந்த விலையில் நியூஸ் பிரிண்ட் வழங்கி பதிப்பகத்தை பாதுகாக்கலாம். இதன் மூலம் அனைத்து எழுத்தாளர்களும் தங்கள் கருத்துக்களை நுால்வடிவில் பார்க்க முடியும்.

தமிழக இளைஞர்களை இப்போது வரை கிரைம் நாவல், பாக்கெட் நாவல் போன்றவை கட்டிப்போட்டிருக்கின்றன. எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் , தேவிபாலா, இந்திரா சவுந்தர்ராஜன் போன்றவர்களின் எழுத்துக்களின் தரம், நடை போன்றவை இந்த மாதிரியான நுால்களின் வெற்றிக்கு காரணம் என்றால் கூட, அதன் விலையும் முக்கிய காரணம். எனக்கு தெரிந்து 8 ரூபாய்க்கு விற்பனையான கிரைம்நாவல்கள் இன்று 25 ரூபாய்க்கு கிடைக்கும். மாதத்திற்கு இது போன்ற நாவல் வாங்கினாலும் 100 ரூபாய் தான் செலவு. அதே உள்ளடக்கம் கொண்டவை தேவைப்படுபவர்களுக்காக உயர் தரபதிப்பில் வெளியிடப்படுகிறது. 

இது போன்ற நடவடிக்கையில் பதிப்பத்தார்கள் இறங்கலாம். அதாவது உயர்தரபதிப்பு வந்த சில மாதங்களில் கட்டாயம் மலிவு பதிவு வெளியிடப்படும் என்ற நம்பிக்கையை வாசகர்களிடம் ஏற்படுத்தலாம். அல்லது மலிவு விலையில் நுால்களை வெளியிட்டு அதன் வரவேற்பை அறிந்து கொண்டு உயர்தரத்தில் வெளியிடலாம்.

மேலும் திருவிழா, ஆண்டுமலர்கள் போல நுால்களுக்கும் விளம்பரங்கள் பெற்று அதன் மூலம் வெளியீட்டு செலவைக் கட்டுப்படுத்தலாம். இந்த நுால்கள் இருக்கும் வரை விளம்பரமும் இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதனை விரும்புவார்கள்.

சென்னையை தலைமையிடமாகவும், திருச்சியில் கிளையும் கொண்ட சாரதா பதிப்பகம், செளரா பதிப்பகம் போன்றவை தற்போதும் கூட மிகச்சிறந்த நுால்களை வெளியிடுகிறது. மற்ற பதிப்பகங்ககளை பார்க்கும் போது, இவற்றின் விலை மிகவும் குறைவு. அந்த பதிப்பகத்தில் 500 ரூபாய் விலை கொண்ட புத்தகத்தின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். அவர்கள் இந்த விலையில் கூட லாபம் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். 

இதைப் போன்று மற்ற பதிப்பகங்களும் நுல்களை வெளியிட முன்வரும் போது, தமிழர்களும் மிகச்சிறந்த அறிவு ஜீவிகளாக மாற முடியும். அப்போது அரசியல் உட்பட பலவிஷயங்களில் தமிழகத்திற்கு விடிவு பிறக்கும். ஒரு நல்ல மாணவரை உருவாக்குவது என்பது எப்படி ஆசிரியர், பெற்றோரின் கடமையோ, அதே போல நல்ல விஷயம் அறிந்த குடிமகனை உருவாக்குவது எழுத்தாளர்கள், பதிப்பகத்தார்கள் கடமை. அந்த கடமையை பதிப்பகத்தார்கள் விரைவில் தொடங்க வேண்டும் என்பது தான் ஏழைவாசகரின் எதிர்பார்ப்பு.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.