கலைஞர் மகனே வா... தேர்தல் களம் காண ஓடோடி வா!

  பாரதி பித்தன்   | Last Modified : 09 Jan, 2019 06:12 pm

stalin-must-face-the-elections

‛கடலில் என்னை துாக்கி வீசினாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன்’ என்பது, கலைஞர் கருணாநிதி தன் மன உறுதியை வெளிப்படுத்திய வைர வரிகள். 

எத்தனை இடர்பாடுகள் இருந்தாலும் கூட, அது குறித்து துளியும் கவலைப்படாமல், தி.மு.க., என்ற கப்பலை தடுமாற்றம் இல்லாமல் கரையேற்றிவர் கருணாநிதி.

பின்புலம் ஏதும் இல்லாமல், 13 வயதில் அரசியலில் நுழைந்து, அதன் பின், தான் போட்டியிட்ட சட்டசபைத் தேர்தல் அனைத்திலும் வெற்றி பெற்றவர். அதிலும், அண்ணாதுரை காலத்தில், காங்கிரஸ் கட்சி என்ற மலையை அசைத்து, தமிழகத்தில், தி.மு.க.,  ஆட்சியை பிடித்தில் கருணாநிதியின் பங்கு அளப்பரியது.

அண்ணாதுரையின் மறைவுக்கு பின், தன்னை முன்னிருத்தி வெற்றி பெற்ற போதும், கருணாநிதி என்ற ஒற்றை மனிதன், திரைக்கு வெளியே, திரைக்கு உள்ளே நடத்திய போராட்டங்கள் பல.
அவை அனைத்திலும் அவர் வெற்றி பெற்றதால் தான், இன்றும் கோடிக்கணக்கான தொண்டர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். 

 

ஆனால், அவரின் மகன் ஸ்டாலினின் செயல்பாடுகள், ‛வாத்தியார் பிள்ளை மக்கு’ என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் உள்ளது. ஸ்டாலின், அரசியலில் அடியெத்து வைத்த நாள் முதல், அவர் செயல் தலைவரானது வரை, அவருக்கு பின்புலத்தில் கருணாநிதி இருந்தார். 

கலைஞரிடம், ஸ்டாலின் முறையாக அரசியல் பயற்சி பெற்றிருந்தால், அது இன்னும், 25 ஆண்டுகளுக்கு தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்த உதவியிருக்கும். 
எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் தன்னை தானே செதுக்கி, நாட்டின் பிரதமராக உயர்ந்த நரேந்திர மோ டி கூட ‛இன்னும் 5 ஆண்டுகளுக்கு, பிரதமர் பதவி காலி இல்லை’ என்று அறிவிக்கிறார்.

ஆனால்,அரசியல் ஜாம்பவானாக திகழ்ந்த, கருணாநிதியின் அரவணைப்பில் வளர்ந்து, அவராலேயே தன் அரசியல் வாரிசு என அறிவிக்கப்பட்ட  நம் ஸ்டாலினோ, எதிரில் முதல்வர் பழனிசாமி இருக்கிறார் என்பதாலேயே  தேர்தல் களத்தை காணவே பயப்படுகிறார் போலும்.

அரசியல் கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் பதவிக்கு வர உதவி செய்வது, உள்ளாட்சித் தேர்தல். பெரும்பாலும் இது ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்றால் கூட, தி.மு.க.,வை பொறுத்தளவில், ஆளும்கட்சியாகவோ, எதிர்கட்சியாகவோ இருந்தால் கூட அதற்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் அரசியல் சாதுார்யம்  அவர்களுக்கு உண்டு. 

ஆனால், கட்சியில் ஸ்டாலின் முன்நிலைக்கு வந்ததும், இன்று வரை அந்த தேர்தல் நடக்காமல் இருக்க காரணமாகிவிட்டார்.  2016ம் ஆண்டு முதல் இன்று வரை, தி.மு.க., அவ்வப்போது கிடைக்கும் காரணங்களை வைத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்துள்ளது. அதன் காரணமாகத்தான்,  இன்று வரை உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கவே இல்லை.

தனக்கு கட்சிப் பதவி கிடைத்து விட்டது; தி.மு.க., எம்எல்ஏக்களுக்கு வர வேண்டியது வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், ஏன் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார் போல. 

பூத் கமிட்டியில் இருப்பவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்பவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் என்பதை அவர் உணர வேண்டும். அப்படி யாரும் இல்லாத போது, லோக்சபா, சட்டசபைத் தேர்தல் வெற்றி கேள்விக்குறிதான்.

அடுத்தபடியாக, கட்சியினருக்கு நாம் எதிர்காலத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஆட்சி செய்த போது கூட, அவர் ஆட்சியின் பிரச்னைகளை கையில் எடுத்து போராடி, இந்த ஆட்சியில் இவ்வளவு பிரச்னை இருக்கிறது. 

இதனால் வரும் தேர்தலில் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை, கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தியவர் கருணாநிதி. தி.மு.க., வெற்றி பெற்றால், அதற்கும், தோல்வியுற்றால் அதற்கும் காரணத்தை கூறி, அடுத்த வேலைக்கு கடந்து சென்றவர் கலைஞர். 

 இன்றளவும் அந்த கட்சி கட்டமைக்கப்பட்ட கட்சியாக இருக்கிறது என்றால், அதற்கு கலைஞரின் நம்பிக்கை, தி.மு.க., தொண்டர்களுக்கு தன் மீது ஏற்படுத்திய நம்பிக்கை ஆகியவை தான் காரணம். 

ஆனால், ஸ்டாலின் அதற்கும் கூட வழியில்லாமல் செய்து விட்டார். பெரியார், அண்ணா ஆகியோர் மறைந்த பின்னால் கூட, பல ஆண்டுகள் அவரின் ஆட்சி வர வேண்டும், அவரின் ஆட்சி தான் நடக்கிறது என்று கூறியே, தன் ஆட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர். 

அவர் பிள்ளையோ, கருணாநிதி இறந்து, ஒரு சில மாதங்களே கடந்த நிலையில், அவர் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியில், அவரின் சொந்த மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலை சந்திக்கவே பயந்தது வேதனைக்குரியது.

 

இப்போது தேர்தல் நடந்தால், கருணாநிதிக்கு நீங்கள் காட்டும் நன்றிக்கடன், அவருக்கு தமிழகம் செலுத்த வேண்டிய அஞ்சலி என்றெல்லாம் கண்ணீர் விட்டு கதறி, முதல் இடத்தை பிடித்து இருக்க முடியும்.
 ஆனால், டேனியல் ராஜாவின் மூலம் வழக்கு தொடுத்தது; விஜயனைக் கொண்டு அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் நடத்தாமல் இருக்கும் வகையில், வாதங்களை எடுத்துக்கூறியது என்று,  தி.மு.க., களம் இறங்கவிடாமல் செய்தது ஸ்டாலின் தான் என்கிறபோது அவரின் சிந்தனையை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

திருவாரூருக்கு மட்டும் தேர்தல் ஏன், திருப்பரம்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளுக்கு தேர்தல் ஏன் நடத்தவில்லை? என்றெல்லாம் அடுக்கடுக்கான காரணங்களை அடுக்கும் அவருக்கு, உண்மையான காரணங்கள் நன்கு தெரியும். 

இன்றும் கூட, கலைஞரின் மற்றொரு மகனான அழகிரியை நம்பி ஒரு சில தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் இடையே உள்ள தொடர்பு, நன்கு விளங்கும்.

 இதை அவர் வலிமை பெற செய்தால், நாளை கட்சியே அவருக்கு சென்று விடும் என்று பயப்படும் ஸ்டாலின், அவரிடம் பாடம் கற்று தொண்டர்களுடன் நெருக்கம் காட்ட வேண்டும். 

மேலும், வெற்றியோ தோல்வியோ களம் கண்டால் மட்டுமே வீரம். வீரம் ஒருபோ தும் வீணாகாக போகாது என்பதை உணர்ந்து, களம் காண ஸ்டாலின் புறப்பட வேண்டும். 

அவ்வாறு செய்யாவிட்டால்,‛எங்கிருந்தோ வந்தான்... எடப்பாடி நான் என்றான்’ என்று முதல்வர் சீட்டை பிடித்துக் கொண்ட பழனிச்சாமி, வரும் தேர்தலில் கூட, ஸ்டாலின் கண்களில் விரலைவிட்டு ஆட்டுவார். 

கலைஞர் இருக்கும் போதே, கட்சி நிர்வாகிகளை படிப்படியாக தன் ஆதரவாளர்களை நியமித்து, அழகிரி உட்பட தன் எதிர்பாளர்களை கட்சியை விட்டு கழற்றி விட்டு, தி.மு.க.,வின் முதல் வரிசைக்கு வந்த ஸ்டாலின், தேர்தலைக் கண்டு தயங்கினால், அவரின் உழைப்பு முழுவதும் வீணாகிவிடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.