இயற்கை எழில் கொஞ்சும் ஆழியாறு அணை...!

  இளங்கோ   | Last Modified : 09 Jan, 2019 07:08 pm

aazhiyaaru-dam-special-story

கோவை, மாவட்டம் பொள்ளாச்சி அருகே, இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளன. இவை ஒரு சிறு நீர்த்தேக்கம் ஆகும். அவற்றில் ஆழியாறு அணை, குரங்கு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. 

வாரத்தில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இங்கு வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதில் ஆழியாறு அணை மொத்தம் 120 அடிஉயரம்  கொண்டதாகும்.  தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு தொகுப்பணை திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி அரபிக் கடலில் வீணாக கலந்து வந்த தண்ணீர் பரம்பிக்குளம் அணையில் தேக்கி வைக்க வழிவகை செய்யப்பட்டது. 

வால்பாறை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் வழிந்தோடும் தண்ணீரை தேக்க 1962–ம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலை குன்றுகளின் அடிவாரத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் ஆழியாறில் புதிய அணை கட்டப்பட்டது. வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியாறு அணை கோவையில் இருந்து 65கிலோ மீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்கள் பயனடைந்து வருகின்றன. இந்த அணைக்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நவமலை மின்நிலையம் வழியாகவும் பரம்பிக்குளம் அணையில் இருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து உள்ளது. வருடத்தின் பெரும்பாலான நாட்களில் அணையின் நீர்மட்டம் எப்போதும் உயர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. 

இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அணையின் அழகை ரசித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர். மேலும் அணையையொட்டி அமைந்துள்ள பூங்காவில் குழந்தைகளுடன் பொழுதை கழிக்கின்றனர். இங்கு அண்மை காலமாக சுற்றுலா பயணிகள் வசதிக்காக, குதிரை சவாரியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர் உற்சாகமாக சவாரி செய்கின்றனர். இந்த அணையின் அருகிலேயே குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி சுற்றுலா மையத்தின் கவர்ச்சியைக் கூட்டுகிறது. 

ஆழியாறு அணை அருகே வால்பாறை சாலையில் வனத்துறை கட்டுப்பட்டில் உள்ளது குரங்கு அருவி. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது  இங்கு நுழைவுக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அருவியை சுற்றிய வனப்பகுதியில் குரங்குகள் அதிக அளவில் காணப்படுவதால் இந்த அருவி, குரங்கு அருவி என்று அழைக்கப்படுகிறது. குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல ஏற்ற மாதங்கள் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்கள் ஆகும். அருவியிலிருந்து மேலே சென்றால் வால்பாறை, டாப்ஹில்ஸ்சும், கீழே சென்றால் ஆழியாறு அணை  என ஒரு நாள் முழுவதும் சுற்றி வரலாம். 

மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த சூழல் மிகவும் மனதைக் கவரும் விதமாக  உள்ளது. கோடை காலங்களில் அருவிக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டாலும் இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மட்டும் எப்போது குறைவதில்லை. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.