தமிழகத்தில் ஏழைகளின் மலைப் பிரதேசம்... கல்வராயன் மலை..!

  இளங்கோ   | Last Modified : 12 Jan, 2019 03:50 pm

kalvarayan-hills-special-story

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சேராபட்டு என்னும் இடத்தில் உள்ளது கல்வராயன் மலை. கல்வராயன் மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாகும்.  ஓங்கி உயர்ந்த பச்சை பசும் மரங்களும், ஆர்ப்பரிக்கும் அருவிகளும், பறந்து திரியும் பறவைகளும், வன விலங்குகளும் காணப்படும் இடமாக உள்ள கல்வராயன் மலையை ஏழைகளின் மலைவாசஸ்தலம்  என அழைக்கின்றனர். 

இங்கு அச்சமடைய வைக்கும் கொண்டை ஊசி வளைவுகளும் பல உள்ளன. இந்த மலை பச்சைமலை, ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை ஆகியவற்றுடன் காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. 1095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலையின் உயரம் 2000 முதல் 3000 அடி வரை உள்ளது. கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அதில் வடபகுதி சின்னக் கல்வராயன் என்றும்  தென்பகுதி பெரிய கல்வராயன் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இதில் சின்னக் கல்வராயன் மலைகள் சராசரியாக 2700 அடி உயரமும், பெரிய கல்வராயன்  மலைகள் சராசரியாக 4000 அடி உயரமும் கொண்டுள்ளது. கல்வராயன் மலையின் வரலாறு விஜய நகர் ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி கிருஷ்ண தேவராயரின் காலப்பகுதியை சேர்ந்தது. கிருஷ்ண தேவராயர் இந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமைகளை பழங்குடியினருக்கு வழங்கினார். ஆனால் ஏகப்பட்ட வரிகளை சுமத்தியதாக கூறப்படுகிறது. 

 

மலையடி பழங்குடியினர்களில் காராளன் என்று அழைக்கப்படும் மக்களின் பூர்வீக வாழ்விடமாகும்.   இவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து வந்து கல்வராயன் மலைகளில் குடியேறியதாக கூறப்படுகிறது. பின்னர், அவர்கள் வேட்டைக்காரர் என அழைக்கப்படும் பழங்குடி மக்களை விரட்டி அவர்களின் மனைவிகளை மணந்தார்கள். தற்போது வேடர் சமூகங்களை மலையாளி என்று அழைத்த போதிலும், அவர்கள் தங்களை கவுண்டர்கள் என்று கூறுகிறார்கள்.  

கல்வராயன் மலைகளில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளது. இங்கு நீர்வீழ்ச்சிகள், நீரோடைகள், ஆறுகள் மற்றும் அருமையான ஜங்கிள் நடை போக இடங்கள் போன்றவை அமைந்துள்ளன. இந்த இடம் மலையேற்றம் செய்பவர்களுக்கு சொர்க்கமாக உள்ளது.  அதுமட்டுமல்லாமல் மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளது. இங்கு உள்ள நீர்வீழ்ச்சிகளை காண்பதும் குளிப்பதும் சுற்றுலா பயணிகளுக்கு ஆனந்தமாக உள்ளது. கல்வராயன் மலை செல்பவர்கள் கோமுகி அணையைப் பார்க்காமல் திரும்பமாட்டார்கள். ஏன்னென்றால் அங்கு குழந்தைகள் பூங்காவும், ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, படகு குழாம் உருவாகியுள்ளது. காட்டுப் பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைத்  பார்க்கும் அரிய வாய்ப்பும் கிட்டுகிறது. 

கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின்  வசதிக்கு ஏற்ப வனத்துறையினர் விடுதிகள் அமைத்திருக்கின்றனர். இங்கு வனத்துறையினரிடம் முன் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் காலையில் சென்று, மாலையில் திரும்பிவிடலாம். கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன. 

கல்வராயன் மலையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் பழங்குடியினர் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக கோடைக்கால விழாவை நடத்துகிறது. இந்த கோடை விழா ஜூன் மாதங்களில் நடைபெறுகிறது. மலை ஏறுபவர்களுக்காக ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு  ஏற்பாடு செய்யப்படுகிறது. கல்வராயன் மலைகளுக்கு சென்று கோடை திருவிழா காலங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.