அகமாசு இல்லா போகி கொண்டாடுவோம்!

  பாரதி பித்தன்   | Last Modified : 12 Jan, 2019 05:58 pm

article-on-bhogi

ஒரு நாட்டின் பண்பாட்டை எளிதில் வெளிப்படுத்துவது பண்டிகைகள் தான். அதிலும், தமிழர்கள் கொண்டாடும் பொங்கலுக்கு சிறப்பான இடம் உண்டு. 

இது தான் தமிழகத்தின் பிரதான தொழிலான விவசாயம், நெசவு ஆகியவற்றிக்கு ஊக்கம் அளிக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள், போகி கொண்டாப்படுகிறது.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி அன்று, பழைய பொருட்கள் அகற்றி, அவற்றிக்கு பதிலாக, புதிய பொருட்களை இடம் பெறச் செய்வார்கள். 

இதற்காக, நம் மக்கள், வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எல்லாம் சேரித்து, பெரும்பாலும் வீதியில் போட்டு எரிப்பார்கள். இதனால் மாசு ஏற்படுகிறது என்று, அரசு பல கோடிகள் செலவு செய்து மாசு இல்லாத போகி கொண்டாடச் சொல்லி பிரச்சாரம் செய்கிறது. 

வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து விடுவது என்பது, நம் தத்துவதின் குறீயீடுதான். உண்மையில், போகி அன்று அகற்ற வேண்டிய மாசு, நம் உள்ளத்தில் தான் இருக்கிறது. இதைத் தான் நம் முன்னோர்கள் கூறினர். 

உள்ளத்தின் அழுக்கை எப்படி அகற்ற வேண்டும் என்பதை திருவள்ளுவர் .சொல்லித் தருகிறார். 
‛புறத்துாய்மை நீரான் அமையும் அகத்துாய்மை 
வாய்மையால் காணப் படும்’ என்கிறார் அவர்.

எளிதில் புரியும் இந்த குறள் போல, வாய்மையை கடைபிடித்தால், அகம் துாய்மையடையும். அதன் பின்னர் பொங்கல் வைத்தால் மகிழ்ச்சி பொங்கும். 

அந்த வாய்மை என்றால் என்ன என்றும் திருவள்ளுவரே சொல்லித் தருகிறார். 

‛வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
தீமை இலாத சொலல்’  என்றார்.

அதாவது, யாருக்கும் தீமை ஏற்படாத வகையில் சொல்வதே ஆகும். இது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் இவற்றிக்கு இடம் கொடுக்காத போது மட்டும் தான், வாய்மை உள்ளத்தில் வந்து அமரும்.

இன்னும் சில மாதங்களில், தேர்தல் வர இருப்பதால், இந்த ஆண்டு பொங்கல் மிகவும் முக்கியமானது. அரசியல் கட்சிகள் நமக்கு உதவி செய்ய ஓடோடி வருவார்கள். 

தேர்தலில் மக்களை விலை கொடுத்து வாங்கி விட முடியும் என்று அரசியல்கட்சிகள் நினைக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒரு விலை உள்ளது. அது சிலருக்கு குறைவு, சிலருக்கு அதிகம். 

ஐந்து ஆண்டுகள் எவனும் நம்மை கேட்க முடியாது என்ற நிலை இருப்பதால், அரசியல் கட்சிகள்  எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கின்றன. அதனால் தான், 20 ரூபாய் டோக்கன் கூட இங்கு செல்லுபடியாகிறது.

தேர்தல் முடிந்த பின்னர், ஏதோ ஏழைகள் தான் பணம் வாங்கி கொண்டு ஓட்டுப் போட்டார்கள் என்று ஒப்பாரி வைப்போம். ஆனால் அரசியல்வாதிகள் தரும் பணத்தை அனைத்து தரப்பு வாக்காளர்களும் தான் பெறுகின்றனர். 

எனவே நம் பொன்னான ஓட்டுகளை விலை பேசிவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அல்லல் படுவதை தவிர்க்க வேண்டும். 

அரசியல் கட்சிகள் தரும் பணம் மற்றும் இலவசங்களை பெற வேண்டும் என்ற ஆசையில் தான், தவறான நபருக்கு ஓட்டளித்து, நம் ஓட்டு எனும் சக்திவாய்ந்த ஆயுதத்தை வீணடித்துவிடுகிறோம். 

இந்த ஆண்டு முதலாவது, நம் மனதில் எழும் தேவையற்ற ஆசைகள், பொறாமை, பகை உணர்ச்சி ஆகியவற்றை களைந்து, சிறப்பான தை திருநாளை வரவேற்போம். 
பொங்கல் அன்று மட்டும் அல்ல எதிர்காலம் முழுவதும் நம் வீட்டிலும், நாட்டிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என உறுதியேற்று, அதன்படி சிந்தித்து செயல்படுவோம். 

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.