ஆனை மலை எப்படி இருக்கும்..?

  இளங்கோ   | Last Modified : 13 Jan, 2019 02:01 pm

aanai-malai-special-story

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு மலைதான் ஆனைமலை. இந்த ஒத்தக்கடை பகுதியை 9ம் நூற்றாண்டில் நரசிங்கமங்கலம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மலையை 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆனைமலை என்று  அழைக்கப்பட்டு வருகிறது. 

மதுரையை சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம்  மலை,நாகமலை,என்ற மலைகளும், குன்றுகளும் இருந்தாலும், மிக பழமையான மலைகளில் ஒன்று ஆனைமலை. இம்மலையில் தமிழ் பிராமி எழுத்துக்கள் இன்னும் காணக்கிடைக்கின்றன. இங்கு குகை தளங்கள் ஆனை மலை உச்சியில் காணப்படுகிறது.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செழித்துக்கிடந்த இப்பகுதியில், சமணத் துறவியர் இருவரும் மலை உச்சியில் கற்படுக்கை அமைத்து தவம் மேற்கொண்டிருந்தனர் என்று  இக்கல்வெட்டின் மூலம் கூறப்படுகிறது. மதுரைக்கு வட திசையிலிருந்து வருபவர்களுக்கு ஒத்தக்கடை என்ற ஊரை நெருங்கும் போதே யானை உருவத்தில் ஒரு மலைத் தோற்றத்தை காணமுடியும். ஆனால் இந்த மலை ஒரு பெரும் பாறை என்பதே உண்மை. இதன் நீளம் சுமார் 4 கி.மீ, அதாவது 4000 மீட்டர் நீளம், 1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்ட மிகப்பெரிய பாறை இது. 

இந்த ஆனைமலை மதுரையின் கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம், சமயம் சார்ந்த நிகழ்வுகளில் முக்கிய சாட்சியாக இருந்துள்ளது.  கி.பி.9ஆம் நூற்றாண்டில் ஆனைமலையின் தென்பகுதியில் அமைந்துள்ள குகையில் சமணப்பள்ளிகள் இருந்ததாகவும் அதன் அருகே சமண முனிவர்கள் தங்கிய இடம் இருந்ததாகவும் அறியமுடிகிறது. ஏனென்றால் திருஞானசம்பந்தர் எழுதிய மதுரைப்பத்தில் கி.பி.7ம் நூற்றாண்டில் இங்கு சமணப்பள்ளி இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று கி.பி.11ம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் மதுரையை தாக்க வந்த யானையை சொக்கேசர் நரசிங்கர்  கணை தொடுத்துக் கட்டிப் போட்டிருக்கிறார் என்ற ஒரு கதையும் உள்ளது. அப்போது சமண மதத்திற்கு எதிராக சைவர்களும்,வைணவர்களும் சேர்ந்து சமணத்தை வீழ்த்திய வரலாற்றையும் ஆனைமலை மறைமுகமாக குறிப்பிடுகிறது. 

ஆனைமலையில் உள்ள குகை தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள கல்வெட்டில்,  ”இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்” என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. குன்றம் என்றால் மலை. இதில் "இவ குன்றம்" என்றால் ஆனைமலை என்று பொருள்படுகிறது. பா என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் "தங்குவதற்கான கற்படுக்கை” என பொருள்படுகிறது. ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்டக்காயிபன் என்று சொல்லக்கூடிய  இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது. ஆனைமலையில் அமைந்துள்ள சமணர்கள் வாழ்ந்த குகையின் நெற்றிப்பகுதியில் 9 புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சமணதீர்தங்கரர் மகாவீரர், பார்தவநாதர், பாகுபலி, இயக்கி அம்பிகா, தாமரை மலர்கள் ஆகிய சிற்பங்கள் இன்றும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. மாமல்லபுரம் குடைவரை கோயில் போல இங்கு நரசிங்க பெருமாளுக்கும், முருகனுக்கும் கோயில்கள் உள்ளன. 

முருகனுக்கு குடைவரை கோயில் உள்ள ஒரே இடம் இந்த ஆனைமலையில் தான் என்று கூறப்படுகிறது. இங்கு உள்ள தமிழ் கல்வெட்டுகளில் முற்கால சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு கால கட்டங்களில் இங்கு உள்ள கோவிலுக்கு திருப்பணிகள் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஆனைமலை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு சிற்பநகரம் என்ற பெயரில் கிராணைட் கொள்ளையர்கள் மலையை சிதைக்க முனைவதாக ஆனைமலையை சுற்றியுள்ள பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இயற்கை வடித்த சிற்பத்தை சிதைக்க மனிதர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. மனித பேராசையால் பல வரலாற்று தலங்களை இழந்து விட்டோம். இனி, இருப்பதையாவது பாதுகாப்போம். வரலாற்றை சிதைப்பதும், இழப்பதும் ஒரு இனத்தையே அழித்துவிடும் செயல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே !

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.