ஜில்லுன்னு இருக்கும் ஜவ்வாதுமலை...!

  இளங்கோ   | Last Modified : 13 Jan, 2019 05:25 pm

javvaathu-hills-special-story

கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான ஜவ்வாது மலை சுமார் 260 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.  இங்கு மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். ஜவ்வாதுமலையை சுற்றி 100க்கும் மேற்பட்ட குக் கிராமங்கள் உள்ளன.  

வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலைத்தொடர் அமைந்துள்ளது. தென்பெண்ணை ஆறு மற்றும் பாலாறுக்கு இடையில் உள்ள இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஒன்றான ஜவ்வாது மலை சுமார் 80 கி.மீ. நீளம், 32 கி.மீ. அகலத்துடன்அமைந்துள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் வட்டத்தில் தொடங்கி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் வரை பரவியுள்ளது ஜவ்வாது மலை. இம்மலை 150 ச.கி.மீ. பரப்பளவில் கிழக்கே போளூர், மேற்கே அமிர்தி, ஆலங்காயம் உள்ளிட்டவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. 

ஜவ்வாது மலையில் பெய்யும் மழை பெரும்பாலும் தென்மேற்கு, வடகிழக்கு , பருவமழையின் மூலமமாக கிடைக்கிறது. இம்மலையில் பாதிரி என்ற ஊரில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்களும் மண்டபாறை மற்றும் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் உள்ளன. பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல்வேறு நடுகற்கள் இம்மலையில் உள்ளன. இங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவிலூர் சிவன் கோயில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.  

இங்குள்ள மக்கள் தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் பயிரிடுகின்றனர். தேன், மிளகு, பழவகைகளும் இம்மலைவாழ்மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கின்றன.  பீமன் அருவி, படகு குழாம், பூங்கா,  கோவிலூர் சிவன் கோயில், வைனு பாப்பு தொலைநோக்கி மையம், அமிர்தி வனவிலங்கு சரணாலயம் ஆகியவை முக்கிய சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன.  செய்யாறு, ஆரணியாறு, கமண்டலாநதி, மிருகண்ட நதி போன்ற நதிகள் இம்மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. 

ஜவ்வாது மலையில் மேல் பீமன் நீர்வீழ்ச்சியும், மலையின் வடபகுதியில் அமிர்தி நீர்வீழ்ச்சியும், மேற்குப் பகுதியில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியும், சிறு சுற்றுலா மையங்களாக விளங்கி வருகின்றன. அமிர்தியில் உள்ள வனவிலங்கு பூங்கா சிறுவர்களுக்கு ஏற்ற சுற்றுலா மையமாக உள்ளது.  ஜவ்வாது மலையின் ஒரு பகுதியான ஏலகிரி மலையும் சிறந்த சுற்றுலா தளமாக இங்கு விளங்குகிறது. ஜில்லுன்னு இருக்க ஜவ்வாது மலைக்கு ஒரு முறை போய்ட்டு வாங்க...!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.